

இந்தியாவில் உலகப் புகழ்பெற்ற கட்டிடங்கள் உண்டு. இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளால் இந்தியக் கட்டிடக் கலைக்கு உலக அரங்கில் சிறப்புகள் அதிகம். இன்னும் உலக அதிசயமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் தாஜ்மஹால் அதற்கு ஒரு சாட்சி.
ஆனாலும் வானுயர் கட்டிடங்கள் என்றால் நமக்குச் சட்டனென துபாய், சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகள்தான் நினைவுக்கு வருகின்றன. வானுயர் கட்டிடங்கள் நவீனக் கட்டிடக் கலையின் சாதனை. மேலும் துபாய், சிங்கப்பூர் போன்ற உலக வர்த்தக மையங்களில்தான் இதுபோன்ற வானுயர் கட்டிடங்களுக்குத் தேவை இருக்கிறது.
உலகத்தின் வானுயர் கட்டிடங்களைப் போல் இல்லையென்றாலும் இந்தியாவின் வர்த்தக மையமான மும்பையில் 62 மாடிக் கட்டிடம் ஒன்று அமையவுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் அடிக் கட்டிடம்; 300 மீட்டர் உயரம். மும்பையின் லோவர் பரேல் பகுதியில் இருந்த அம்பிகா மில்லுக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டுவருகிறது.
இதுதான் இந்தியாவின் முதல் வானுயர் கட்டிடம். அட்கின்ஸ் என்ற துபாய் நிறுவனம்தான் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்து வருகிறது. டவரின் பெயர், ‘நமஸ்தே’. வானுயர் கட்டிடம் இந்தியாவுக்கு வணக்கம் சொல்வது போல இருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் மற்றுமொரு சிறப்பு இது தனக்குத் தேவையான மின்னாற்றலில் 60 சதவீதத்துக்கும் தானே உற்பத்தி செய்துகொள்ளப் போகிறது. அதற்குத் தகுந்தாற்போல் காற்றாலை, சோலார் தகடுகள் இதில் நிறுவப்படவுள்ளன.
இந்தக் கட்டிடத்தின் மொத்தப் பரப்பு 1,250,000 சதுர அடிகள். இதில் தங்கும் விடுதி, உணவு விடுதி மற்றும் பலவிதமான கடைகளும் அமையவுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் அலுவலகங்களை இங்கே அமைக்கவுள்ளன. வணிக வளாகங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிடம் இரு அடுக்குகளாகக் கட்டப்பட்டு இணைக்கப்படவுள்ளது.
இந்தியாவின் மிக அதிகமான கட்டுமானச் செலவு உள்ள கட்டிடமும் இதுதான் எனக் கட்டுமான உலகில் சொல்லப்படுகிறது. எல்லாவற்றிலும் சிறப்பு இருக்க வேண்டும் என்பதற்காக உலகின் பிரபலமான நிறுவனங்களை இந்தக் கட்டிடத்தின் உருவாக்கப் பணிகளுக்காக நியமித்திருக்கிறார்கள்.
உலகின் பிரபலமான தோஷிபா நிறுவனம்தான் மின் தூக்கிகளை அமைக்கவிருக்கிறது. துபாயின் புர்ஜ் கட்டிடத்துக்கு உள் அலங்கராம் செய்து தந்த நிறுவனம்தான் இந்தக் கட்டிடத்தின் அலங்கார வடிவமைப்பை உருவாக்கவுள்ளது. இது மட்டுமல்லாது கட்டிடத்தின் குறிப்பிட்ட அளவு இடம் செடி, கொடிகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு குடியிருப்பு வீடுகளும் அமையுவுள்ளன. ஆனால் குறைந்த அளவே அமையவுள்ளன என்பதால், அவை மிக அதிக விலைக்குப் போகும் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கட்டிடத்தின் வெளிப்புறத் தோற்றம் மருதாணி வைத்த கைகள் இரண்டு கைகூப்பி வணக்கம் சொல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.