

வீட்டை அலங்கரிப்பதில் சிலருக்கு அதீத ஆர்வம் இருக்கும். அழகுபடுத்துவதன் மூலம் அலாதி மனநிறைவு கிடைக்கும். நவீனக் கட்டிடக்கலையின் போக்குக்கு ஏற்றாற்போல வீட்டில் பல மாறுதல்களைச் செய்து கொண்டே இருப் பார்கள். ஒவ்வோர் அறையின் சுவருக்கும் ஒவ்வொரு வண்ணங்களைப் பூசுவார்கள், சந்தையில் புதிய மேஜை, நாற்காலி, சோஃபா அறிமுகமானால் உடனடியாக வாங்கி வீட்டில் போட்டுவிடுவார்கள்.
ஆனால் இப்படி வீட்டை ரசித்து ரசித்துப் பராமரிப்பவர்கள்கூட ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதுதான் வீட்டின் கூரை. வீடு முழுக்க அழகு கொட்டிக்கிடந்தாலும் பெரும்பாலான வீட்டுக் கூரையின் நிறம் வெள்ளைதான். வீட்டுக் கூரையில் பெரிதாக என்ன செய்துவிட முடியும் எனத் தோன்றலாம். எவ்வளவோ செய்ய முடியும். அதைச் சொல்வதற்கு முன்னதாக ஏன் செய்ய வேண்டும் என்பதை முதலில் பார்த்து விடுவோம்.
வரலாற்றுச் சிறப்பு
பழமை வாய்ந்த தேவால யங்கள், கோயில்கள், பிரம்மாண்ட அரண்மனைகளைச் சுற்றிப் பார்க்கும்போது நம்மை மறந்து வாய் பிளந்து பார்க்கும் விஷயங்களில் ஒன்று கூரை முழுக்கத் தீட்டப்பட்டிருக்கும் அபூர்வ ஓவியங்களும், பல்வேறு வடிவங்களும்தான். அப்படி நாம் வியக்கும் விஷயம் நம் வீட்டிலேயே அமைக்கப்பட்டால் அனைவரையும் அசத்தலாம் அல்லவா!
கூரையை அலங்கரிப்பது எளிது!
வீட்டு அலங்கரிப்பில் மிக எளிமையானது கூரை வடிவமைப்பு கூரை என்பது பரந்து விரிந்த பகுதி. தட்டையான தளம். கதவு, ஜன்னல், நாற்காலி, மேஜை போன்ற எந்தப் பொருளும் குறுக்கிடாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் மின் விசிறி பொருத்தப்பட்டிருக்கும் அவ்வளவுதான். அடுத்ததாகத் தரை, சுவர் ஆகியவை போல எளிதில் அழுக்கடையாது. ஒரு முறை அலங்கரித்துவிட்டால் பராமரிப்பது மிகச் சுலபம். புத்தம் புதிய தோற்றம் பல காலம் நீடிக்கும்.
புகைப்படக் கூரை வடிவங்கள்
அதெல்லாம் சரிதான்! ஆனால் அதிகச் செலவாகுமே எனும் உங்கள் எண்ணம் புரிகிறது. பழங்காலத்தில் கலை நயம் மிகுந்த மர வேலைப்பாடு, நுணுக்கங்களுடன்கூடிய அற்புதமான உலோக வடிவங்கள், அபூர்வ ஓவியங்கள் மூலமாகக் கூரைகளை அலங்கரித்தார்கள். உண்மைதான் அவற்றை இன்று மீட்டுருவாக்கம் செய்வது சாமானியமான காரியமல்ல. ஆனால் அதிர்ஷ்டவசமாக நவீனத் தொழில்நுட்பம் பலவற்றை எளிமையாக்கி யுள்ளது. அவற்றில் ஒன்று, கண் கவர் புகைப்படக் கூரை வடிவங்கள் (Photo Ceiling Design). தஞ்சை ஓவியம் முதல் விக்டோரியா ஓவியம் வரை அத்தனையும் 3டி புகைப்பட அச்சாக இன்று மலிவு விலையில் கிடைக்கின்றன. இவை மட்டுமல்லாது உங்கள் வீட்டுக் கூரையை அலங்கரிக்கப் பலதரப்பட்ட புகைப்படக் கூரை வடிவங்கள் உள்ளன.
கடல் முதல் ஆகாயம் வரை
ஒவ்வோர் அறைக்கும் ஏற்ற மாதிரி அதன் கூரையைத் தனித்துவமாக அலங்கரிக்கலாம். ஆழ் கடல் முதல் அகண்ட ஆகாயம் வரை உங்கள் கற்பனையில் இருக்கும் எதையும் கூரையில் பொருத்தலாம்.
உற்சாகமூட்டும் வடிவம்
நவீனமான வரவேற்பறைக்கு அழகிய நீல வானம் கொண்ட புகைப்படக் கூரை பொருத்தமாக இருக்கும். அல்லது அந்த அறையில் இருக்கும் நாற்காலி, மேஜையின் நிறத்துக்கு ஏற்ற மாதிரி வேறு விதமாகவும் ஒட்டலாம். முன்பு கூறியது போல அது கோயில் கலை சார்ந்த ஓவியங்களாகக் கூட இருக்கலாம். வரவேற்பறை என்பது நாம் எப்போதும் உற்சாகமாக இருக்கும் அறை என்பதால் நம் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதத்தில் கூரையும் இருந்தால் கூடுதல் அழகுதானே!
சுட்டீஸுக்குப் பிடித்த இடம்
குழந்தைகளின் அறை என்றால் கார்ட்டூன் படங்கள், வண்ணப் வண்ண பட்டாம்பூச்சிகள் சிறகு விரித்துப் பறப்பது போன்ற படங்கள், பூக்கள் பூத்துக் குலுங்கும் படங்கள் ஒட்டினால் கண்ணுக்கும் ரம்மியமாக இருக்கும், குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
படிக்கும் அறைக்குப் பழமை வாய்ந்த உலக வரைபடம் அசத்தலாக இருக்கும். ஒரு விதத்தில் இந்த அறையினுள் நுழைந்ததும் குழந்தைகள் மனம் ஒருமுகப்பட்டுப் படிக்கும் மனநிலைக்கு எளிதாக வந்து விடுவார்கள்.
அமைதியாக உறங்க
பவழப் பாறைகளும், கடல் செடிகளும் ஆழ்கடல் நீரில் தத்ரூபமாக இருப்பது போன்ற புகைப்படத்தைப் படுக்கை அறையில் ஒட்டலாம். இது போன்ற படங்களை அறையின் ஒரு புறத்தில் இருக்கும் சுவரில் தொடங்கி அப்படியே கூரை முழுக்க விரித்து ஒட்டினால் பார்ப்பவர்கள் மனம் மயங்கும்.
வரவேற்பறை, படிக்கும் அறை, படுக்கை அறை மட்டுமல்ல சமையலறை, உணவு அறை, குளியலறை இப்படி அத்தனை அறைகளுக்கும் விதவிதமான புகைப்படக் கூரைப் படங்கள் இருக்கின்றன. உங்கள் கற்பனைக்கு ஏற்ற மாதிரி உங்கள் வீட்டுக் கூரைக்கு அழகியலுடன் கூடிய ஆடம்பரத் தோற்றத்தைக் குறைந்த செலவில் ஏற்படுத்தலாம்.