குளிர்காலத்தை வரவேற்கலாம்

குளிர்காலத்தை வரவேற்கலாம்
Updated on
1 min read

குளிர்காலத்தில் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். வீட்டிற்குள் இருக்கும்போதும் குளிர்காலம் ஒருவிதமான சோம்பலான மனநிலையை அளிக்கும். குளிர் காலத்தின் குறைவான வெளிச்சமும் இதற்கு ஒரு காரணம்.

சோம்பலான மனநிலையைத் தவிர்ப்பதற்கு வீட்டின் உட்புற அலங்காரத்தைக் குளிர்காலத்திற்கு ஏற்றமாதிரி மாற்றியமைப்பது அவசியம். அதற்கான சில வழிமுறைகள்.

வெளிச்சம் தேவை

குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வருவது குறைந்துவிடும். பொழுதும் சீக்கிரம் இருட்டத் தொடங்கிவிடும். இதைச் சமாளிப்பதற்கு வீட்டின் வரவேற்பறையிலும், படுக்கையறையிலும் ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம் செய்யலாம். வரவேற்பறையில் இருக்கும் அலமாரிகளில் சீரியல் பல்புகளால் அலங்கரிக்கலாம்.

படுக்கையறையின் சீலிங்கில் ‘டிவிங்கிள் லைட்ஸ்’ எனப்படும் நட்சத்திர விளக்குகளால் அலங்கரிக்கலாம். அத்துடன், சாப்பாட்டு மேசைகளிலும் ‘அலங்கார மெழுகுவர்த்திகளை ஏற்றிவைக்கலாம். இது போன்ற ஒளிவிளக்கு அலங்காரம் குளிர்காலத்தில் வீட்டிற்கு ஒரு புதுபொலிவு கொடுக்கும்.

குளிர்காலத்தின் நிறங்கள்

குளிர்காலத்தில் வீட்டின் சுவர்களின் வண்ணங்களை மாற்றலாம். நெருப்பின் தன்மையைப் பிரதிபலிக்கும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற வண்ணங்களை வீட்டுச் சுவர்களுக்கும் பயன்படுத்தலாம். இந்த நிறங்கள் குளிர்காலத்தில் தோன்றும் சோம்பலைப் போக்க உதவும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் இருக்கும் பொருட்களை வரவேற்பறையிலும், படிக்கும் அறையிலும் வைக்கலாம்.

சோபாவின் மெத்தைகள், தலையணை உறைகள், போர்வைகள், திரைச்சீலைகள் போன்றவற்றையும் இந்த நிறங்களில் இருக்கும்படி மாற்றலாம். இதனால் வீட்டில் இருக்கும்போது மனதிற்கு ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும்.

கம்பளி தரைவிரிப்புகள்

குளிர்காலத்தில் டைல்ஸ்,மொசைக் என எந்த தரைத்தளமாக இருந்தாலும் அவற்றில் நடப்பது சிரமமாகவே இருக்கும். இதற்காகத் தரையில் விரிப்பதற்காகவே கம்பளி தரைவிரிப்புகள் கிடைக்கின்றன. இந்த கம்பளி தரைவிரிப்புகள் விதவிதமான அமைப்புகளில் கிடைக்கின்றன. சோபாவிற்கு கீழே, கட்டிலுக்கு கீழே இந்த கம்பளி தரைவிரிப்புகளை விரித்து வைக்கலாம். இதனால் குளிர்காலத்தில் கால்களுக்கு உண்டாகும் பாதிப்புகளையும் தடுக்கலாம்.

மலர்களும் இயற்கை அலங்காரமும்

மலர்களை வைத்தே வீட்டை அலங்கரிக்கலாம். இந்த மலர்களையெல்லாம் ஒரு கிண்ணத்தில் போட்டு வரவேற்பறையின் மேசையிலோ, சாப்பாட்டு மேசையிலோ வைக்கலாம். வீட்டிற்குள் சுகந்தமான வாசத்தையும், அழகையும் கொடுக்கும். கூழாங்கற்களை வைத்தும் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கலாம். இது இயற்கையோடு இருக்கும் உணர்வை அளிக்கும்.

நிலைக்கண்ணாடியின் மகத்துவம்

வீட்டின் வரவேற்பறையில் நிலைக்கண்ணாடியை மாட்டிவைப்பதால் அது வீட்டிற்குத் தேவையான வெளிச்சத்தை வெளியில் இருந்து கொண்டுவரும். நிலைக்கண்ணாடியின் சட்டகத்தை பளிச் நிறத்தில் தேர்ந்தெடுப்பது அவசியம். ஜன்னலின் திரைச்சீலைகளையும் குளிர்காலத்திற்கு ஏற்றமாதிரி மாற்ற வேண்டியது அவசியம். குளிர்காலத்தை ரசிப்பதற்கு ஏற்ற மாதிரியும் ஜன்னல்களை மாற்றி வடிவமைக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in