முதலீட்டுக்கு ஏற்ற அம்பத்தூர்

முதலீட்டுக்கு ஏற்ற அம்பத்தூர்
Updated on
2 min read

தேவைக்கு ஒரு வீடு என்ற காலம் இன்று மலையேறிவிட்டது. பலரும் முதலீட்டுக்காகவே வீடு, மனைகள் வாங்குவதைப் பார்க்க முடிகிறது. சென்னை மற்றும் சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படி வீடு மனை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

அதேசமயம் சென்னையில் மனை கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவிட்ட நிலையில் வடசென்னை, சென்னையை உள்ளடக்கிய திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் பக்கம் நடுத்தர மக்களின் பார்வை திரும்பியிருக்கிறது. அந்த வகையில் முதலீட்டுக்கு ஏற்ற பகுதியாக அம்பத்தூர் சுட்டிக் காட்டப்படுகிறது. அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி என்ன, அந்த இடத்தில் வீடு, மனை வாங்க பலரும் முதலீடு செய்ய என்ன காரணம் என்பதை இந்தியா.காம் ஆய்வறிக்கை கூறுகிறது.

வேகமான வளர்ச்சி

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வளரும் பகுதியாகவே அம்பத்தூர் அடையாளம் காணப்பட்டது. ஆனால், 2011-ம் ஆண்டில் அம்பத்தூர் பகுதி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு அதன் வளர்ச்சி வேகம் பிடித்திருக்கிறது. தற்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக வேகமாக மாறி வருகிறது. அதற்குக் காரணம் அம்பத்தூரைச் சுற்றி 45 கிலோமீட்டர் பரப்பளவு பகுதியில் தொழில் நிறுவனங்கள் பெருகியுள்ளதே காரணம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை சுமார் 5 கிலோ மீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ளது. இதேபோல் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இங்கு கால் பதித்து வருகின்றன. இவர்கள் வர்த்தகரீதியாகப் பயன்படுத்த மனைகளை வாங்கும் போக்கும் சமீப காலமாக அம்பத்தூரில் அதிகரித்திருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை.

சாலை இணைப்பு வசதி

இங்கு அமைந்துள்ள நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தினமும் ஏராளமானோர் வேலை வாய்ப்புக்காக அம்பத்தூர் வந்து செல்கிறார்கள். இதனால் வீடுகளின் தேவை இங்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இங்கு ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி கண்டு வருகிறது.

அம்பத்தூரில் இருந்து பிற பகுதிகளுக்குச் சாலை இணைப்பு வசதிகளும் குறிப்பிடும்படி இருப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. திருவள்ளூர், பெரம்பூர், அண்ணா நகர், வடபழனி ஆகிய பகுதிகளை இணைப்பதில் அம்பத்தூர் மையப்பகுதியாகவும் விளங்குகிறது. சென்னையின் இதர பகுதிகளைவிட இங்கு வீடுகள் மற்றும் மனையில் விலை குறைவு என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. சென்னையின் பிற இடங்களில்

வீடுகள் விலை யானை விலை, குதிரை விலைக்கு விற்கப்படும் நிலையில் இங்கு குறைவாக இருக்கிறது என்பது நல்ல விஷயம்தான். இதன் காரணமாகவும் அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு, மனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

உட்கட்டமைப்பு வசதிகள்

இதர உட்கட்டமைப்பு வசதிகளிலும் அம்பத்தூர் சிறந்து விளங்குகிறது. இப்பகுதியைச் சுற்றி வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், புனிதத் தலங்கள், வர்த்தகச் சந்தைகள் எனப் பல தரப்பட்ட வசதிகள் கிடைப்பதால், வீடு, மனை வாங்க நினைப்பவர்களின் விருப்பம் அம்பத்தூராக இருக்கிறது. குறிப்பாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பகுதியாகவும் இப்பகுதி விளங்குவதால் இங்கு வீடு, மனை வாங்குவது பயன் அளிக்கும் என்றே ஆய்வறிக்கை கூறுகிறது. எனவே வர்த்தக ரீதியாகவோ, வீட்டுத் தேவைக்காகவோ அம்பத்தூர் பகுதியில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் மிகுந்த பயன் அளிக்கும் என்று ஆய்வறிக்கை மதிப்பிட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in