

நாளெல்லாம் எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறோம். என்ன தான் செருப்பு அணிந்திருந்தபோதும் கால்களில் தூசி படர்ந்தே இருக்கும். அதைத் தட்டித் துடைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைவதால் வீட்டில் குவியும் தூசியைக் கட்டுப்படுத்தலாம். பொதுவாக வீட்டின் வாசலில் சிறிய தரைவிரிப்பைப் படர்த்தி இருப்போம். அதில் ராணுவவீரன் போல் கால்களைப் படபடவென்று தட்டிவிட்டே உள்ளே நுழைவோம்.
குளியலறையிலிருந்து வெளியே வரும்போது கால்களில் ஈரம் படர்ந்திருக்கும் அவற்றைத் துடைத்துவிட்டே வருவோம். இல்லையெனில் அறையெங்கும் ஈரம் படர்ந்துவிடும். இதனால் வீட்டிலுள்ள வயதானவர்கள் வழுக்கிவிழ நேரலாம். அல்லது ஈரம் காரணமாக வீட்டில் ஆரோக்கிய சூழல் பாதிக்கப்படலாம். இப்படியான சிறிய மிதியடிகளையும் தரைவிரிப்புகளையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவற்றைத் துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். தரையில் விரிக்கும் துணி தானே என மெத்தனமாக இருந்துவிட முடியாது.
தரைவிரிப்புகளிலும் மிதியடிகளிலும் தூசி அதிகம் இருந்தாலோ ஈரம் அதிகம் இருந்தாலோ அதனால் நோய்க்கிருமிகள் வீட்டுக்குள் பரவிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. தரைவிரிப்புகளிலும் மிதியடிகளிலும் ஈரம் அதிகமாக இருந்தால் அதிலிருந்து பரவும் துர்நாற்றம் வீட்டின் சுகந்த சூழ்நிலையைக் கெடுத்துவிடும். எனவே அவற்றின் சுத்தத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
அழகான மிதியடிகளைப் பார்த்து பார்த்து வாங்குவது போலவே அவற்றின் சுத்தத்திலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எப்போதும் இத்தகைய மிதியடிகள் துவைத்த நிலையில் தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் தேவைப்படும்போது உடனே மாற்ற முடியும். சின்னச் சின்ன விஷயங்களை நாம் சிரத்தையுடன் மேற்கொண்டால் பெரிய சிக்கல்களை எளிதில் தவிர்த்துவிட முடியும்.