

வீட்டின் அறைகளைப் பிரிக்கும் வேலையைத்தான் சுவர்கள் செய்கின்றன. ஆனால் அந்தச் சுவர்கள் வெறும் சுவர்களாக இருந்தால் ஒருவித வெறுமையைத் தரும். எனவேதான் அவற்றை எதைக் கொண்டாவது அலங்கரிக்கிறோம்.
முன்னரெல்லாம் வீடுகளின் சுவர்களில் அழகான போட்டோக்களை பிரேம் போட்டு மாட்டிவைக்கும் வழக்கமிருந்தது. எண்பதுகள் வரைக்கும்கூட அந்தப் பழக்கம் இருந்துவந்தது. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்ற பலருடைய வாழ்வின் முக்கியச் சம்பவங்களை நினைவூட்டும் படங்களை மாட்டிவைத்திருந்தார்கள். சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் அந்தப் படங்களைப் பார்ப்பது மனதுக்கு ஆசுவாசம் அளிக்கும் செயலாக இருந்தது. இப்போது அப்படிப் புகைப்படங்களை மாட்டிவைப்பது இல்லை.
ஆகவே சுவர்களில் விதவிதமான ஓவியங்களை மாட்டி வைக்கலாம். சுவர்களில் மாட்டும் கடிகாரங்களையும் பலவித அலங்காரம் கொண்டதாக உருவாக்கிவருகிறார்கள். சந்தையில் அழகழகாக ஆயிரம் மாடல்களின் சுவர்க் கடிகாரங்கள் கிடைக்கின்றன. அவற்றை மாட்டி வைக்கும்போது நேரத்தையும் அறிந்துகொள்ளலாம். மனதுக்கும் சந்தோஷம் அளிக்கலாம்.
வீடு என்பது எல்லா வகையிலும் சந்தோஷம் தரக்கூடிய வகையில் இருக்க வேண்டியது அவசியம். புதிய புதிய விஷயங்கள் மீது மனிதருக்கு எப்போதுமே ஆவல் அதிகமாக இருக்கும். எனவே, வீட்டின் சுவர் அலங்காரத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆகவே ஒரே அலங்காரத்தையே எப்போதும் பராமரிப்பதை விடுத்து வெவ்வேறு அலங்காரங்களை வீட்டில் பராமரிக்கலாம்.
கற்பனை வளத்துடன் நமது வீட்டு அங்கத்தினர்கள் அழகான சுவர் அலங்காரப் பொருள்களை உருவாக்கி அவற்றை மாட்டலாம். அவை அதிக செலவு வைப்பதுமில்லை. நமது சந்தோஷத்தையும் அதிகரிக்கும். வீட்டில் நாம் மேற்கொள்ளும் சிறுசிறு மாற்றங்கள்கூட நமது மன இறுக்கத்தைப் பெருமளவில் குறைக்க உதவும்.
பல்வேறு பணிகளின் நிமித்தம் அலைந்து திரிந்து வீட்டுக்குள் வரும் நமக்கு, வீட்டின் ஒவ்வொரு அம்சமும் ஆறுதலையும் ஆசுவாசத் தையும் தர வேண்டியது நல்லது என்பதைக் கவனித்தில் கொண்டு வீட்டின் அலங்காரங்களை மேற்கொள்ளலாம். அவற்றைச் செலவு பிடிக்கும் காரியங்கள் என ஒதுக்கித் தள்ளாமல் நமது புத்துணர்ச்சிக்கான விலை என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துடன் இதை அணுக வேண்டும்.