தாய்ப் பத்திரம் இருக்கிறதா?

தாய்ப் பத்திரம் இருக்கிறதா?
Updated on
1 min read

பள்ளியில் வரலாறு என்பது உங்களுக்குப் பிடிக்காத பாடமாக இருந்திருக்கலாம். ஆனால், ஒரு வீட்டை வாங்கும்போது அதன் வரலாற்றைத் தெரிந்துகொண்டே ஆக வேண்டும். அதாவது யாரிடமிருந்து யார் யாருக்கு அந்தச் சொத்து கைமாறி உங்கள் கைக்கு வருகிறது என்ற வரலாறு. இதில் ஏதாவது தவறு நடந்திருந்தால் அது அந்தச் சொத்தின்மீது உங்களுக்கு இருக்கக்கூடிய உரிமையைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

இதற்கு உங்களுக்கு உதவுவதுதான் தாய்ப்பத்திரம். எடுத்துக்காட்டாக 1960-ல் கோவிந்தன் என்பவர் அந்த நிலத்தை வாங்குகிறார். அது அந்த ஊர் பஞ்சாயத்து ஆவணத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பிறகு கோவிந்தன் அதை விற்றுவிடலாம். அந்தச் சொத்து அடுத்தடுத்து கைமாறி இருக்கலாம். இவையெல்லாம் தாய்ப் பத்திரத்தில் தெரியவரும்.

சொல்லப்போனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் அதன் உரிமையாளர் இறந்து விட்டிருந்தால் அது அவரது சட்டபூர்வமான வாரிசுக்குச் சொந்தமாவதுகூடத் தாய்ப் பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும். சொத்தை விற்பவருக்கும் வாங்கும் உங்களுக்குமிடையே கையெழுத்தாகிப் பதிவுசெய்யப்படும் விற்பனைப் பத்திரத்துக்கு அடுத்து முக்கியமான ஆவணம் மே தாய்ப் பத்திரம்.

தாய்ப் பத்திரத்தில் என்னென்ன தகவல்கள் இருக்கும் என்பதைப் பார்ப்போம். சொத்து எந்த இடத்தில் இருக்கிறது என்ற தகவல்? சொத்தின் அளவு ஆகியவை அதில் குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவு சதுர மீட்டரிலோ சதுர அடியிலோ அக்காலத்திய ஏதாவது அளவீடுகளிலோ இருக்கலாம்.

சொத்தின் எல்லைகளும் குறிக்கப்பட்டிருக்கும். அதாவது, கிழக்கே இன்னாருடைய சொத்து இருக்கிறது, தெற்கே இந்தத் தெரு இருக்கிறது என்பதுபோல் நாற்புற எல்லைகளும் குறிக்கப்பட்டிருக்கும்.

சொத்து தொடர்பான பரிவர்த்தனைக​ளில் ஒவ்வொரு முறையும் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்கிற தகவலும் இருக்கும். சொத்து உள்ள சாலை, வார்டு எண், வீடாக இருந்தால் கதவிலக்கம் போன்ற தகவல்களும் தாய்ப் பத்திரத்தில் இடம்பெறும்.

எனவே, எந்தச் சொத்தை நீங்கள் வாங்குவதற்கு முன்னாலும் அதன் தாய்ப் பத்திரம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தாய்ப் பத்திரம் என்பது நமக்குப் புரியும் விதத்தில் தெளிவாக இருக்காது. எனவே, ஒரு வழக்கறிஞரின் உதவியோடு அந்தப் பரிவர்த்தனைகளை எல்லாம் அறிந்துகொள்வது நல்லது.

இடையே ஒரு காலகட்டத்துக்கான பரிவர்த்தனை தாய்ப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அது ஏன் என்பது குறித்த விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். தாய்ப் பத்திரத்தில் உள்ள சொத்து விவரமும் தற்போது நீங்கள் வீட்டை விற்பவருடன் பதிவுசெய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் உள்ள சொத்து விவரமும் முரண்படாமல் இருக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in