

எல்லாக் கட்டிடங்களுக்கும் வலுச் சேர்ப்பவை சுவர்கள். மட்டுமல்லாது கட்டிடத்தின் கம்பீரத்தையும், கட்டுமானத்தின் தரத்தையும் வெளிப்படுத்துவதும் சுவர்கள்தான். மரபான முறைகளில் அதிக அளவு கனம் கொண்ட பலமான சுவர்கள் உருவாக்கப்பட்டன. அதாவது 3 அடிக்கும் கூடுதலான கனம் கொண்ட சுவர்கள் முன்பு நம் கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்டன. தொழில்நுட்பம் வளர, வளர சுவர்களின் கனம் குறைந்தது. மேலும் வீட்டிற்குள்ளே அறைகள் பிரிப்பதற்கு அதையும் விடக் கனம் குறைவான சுவர்களைப் பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பப் புரட்சியில் இப்போது ரெடிமேட் கதவுகளைப் போல் ரெடிமேட் சுவர்களும் வந்துவிட்டன. இன்றைக்குள்ள வீட்டுத் தேவையால் துரிதமாகக் கட்டிடப் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது. அதனால் இவ்வகை சுவர்களின் வருகை அதைச் சாத்தியப்படுத்தும்.
அந்த வகையில் இப்போது L வடிவ சுவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் புதுமையான தொழில்நுட்பம் சுவர் கட்டுமான முறைகளை மிக எளிமையாக்குகிறது. இந்த L வடிவச் சுவர்களில் கீழ்ப் பகுதி தட்டையாக சுவருக்கு அடித்தளம் அமைப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது L வடிவில் கீழ்ப் பகுதி முழுக்க அஸ்திவாரத்திற்காக மண்ணில் புதைக்கப்படும். L வடிவில் உள்ள மேற்பகுதி சுவராகப் பயன்படும். இம்மாதிரி சுவர்களைக் கொண்டு வீடு கட்டும்போது அடிவாரம் தேவையில்லை. அடிப்பரப்பைச் சமப்படுத்திக்கொண்டாலேயே இவ்வகைச் சுவர்களை நிறுவிவிட முடியும்.
L வடிவச் சுவர்கள் பல வகையில் கிடைக்கின்றன. சிறிய வீடுகளில் பயன்படுத்தும் வகையிலும் பாதி அளவிலும் கிடைக்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு எளிமையாக நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்திட முடியும். கான்கிரீட் கலவைகளைக் கொண்டு இதைத் தரையில் நிறுவுகிறார்கள். அதே சமயம் குறைந்த அளவிலான கான்கிரீட் கலவைகளே இதற்குப் பயன்படும். அதனால் சிமெண்ட் தேவை குறையும்.
அடுக்குமாடி குடியிருப்புக்குப் பயன்படும் இவ்வகைச் சுவர்கள் லீகோ விளையாட்டைப் போல அமைக்கப்பட்டிருக்கும். ஒன்றுடன் ஒன்று பொருந்தும் அளவு மேல் கீழ்ப் பகுதிகளில் பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
இவ்வகைக் கட்டிடங்களால் நமக்கு நேரம் மிச்சமாகும். இந்த முறை இந்தியாவில் பரவலாகவில்லை. மேலை நாடுகளில் இவ்வகைச் சுவர்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.