வில்லங்கச் சான்றிதழில் வில்லங்கம் செய்தால்..?

வில்லங்கச் சான்றிதழில் வில்லங்கம் செய்தால்..?
Updated on
4 min read

என் அப்பா, சித்தப்பா, பெரியப்பாவுடைய மகள் (பெரியப்பா இறந்துவிட்டார்) ஆகியோருக்கு என் தாத்தா அவரது சொத்துகளைப் பிரித்து எழுதிக் கொடுத்துவிட்டார். 25 வருடங்களுக்கு முன் அப்பா, சித்தப்பா இருவரும் என் தாத்தா எழுதிக்கொடுத்த வீட்டில் ஆளுக்கொருபுறம் வசித்தனர். பிறகு அந்த வீட்டை இருவரும் சேர்ந்து விற்றுவிட்டு, என் தாத்தா கொடுத்த அவரவர் நிலத்தில் (கிழக்கு பாகம் என் அப்பாவுக்கு, மேற்கு பாகம் சித்தப்பாவுக்கு) வீடு கட்ட ஏற்பாடுகள் செய்த நிலையில் மூத்தவர் அதாவது என் அப்பா மேற்கில்தான் வீடு கட்ட வேண்டும் என அச்சமயம் சில ஊர்ப் பெரியவர்கள் பஞ்சாயத்து செய்து சொத்துப் பெயர்மாற்றம் செய்து வீடு கட்டி முடிக்கப்பட்டது. நாங்கள் என் சித்தப்பா வீட்டு நிலத்தின் வழியாக நடந்து செல்ல எந்தப் பிரச்சினையும் இல்லை எனப் பேச்சுவார்த்தை செய்து வைத்தனர். என் அப்பாவும் நம்பிக்கையின் பேரில் எந்த எழுத்துப் பத்திரமும் எழுதி வாங்கவில்லை. எந்தப் பிரச்சினையும் இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக என் சித்தப்பா அவ்வழியே செல்லக் கூடாது என ஆயுதங்களை வைத்துத் தாக்க முயல்கிறார். எங்களுக்கு நடந்து செல்ல வேறு பாதையும் இல்லை. இதற்குச் சட்டப்படி தீர்வு காண முடியுமா?

விஜய்குமார்

ஊர்ப் பெரியவர்கள் செய்துவைத்த பஞ்சாயத்தின்படி உங்கள் அப்பாவும் சித்தப்பாவும் தங்களது பாகங்களைப் பரிமாற்றம் செய்து கொண்டபோது ஒருவர் பாக நிலத்தை மற்றொருவர் பாதைக்காகப் பயன்படுத்தும் உரிமையைக் குறிப்பிட்டு பத்திரத்தில் எழுதியிருந்தால்தான் நீங்கள் அந்த உரிமையைச் சட்டப்படி கோர முடியும். இருந்தபோதிலும் உங்கள் அப்பாவின் பாக சொத்துக்கு வேறு பாதையே இல்லை என்னும் சூழ்நிலையில், உங்கள் சித்தப்பா பாக நிலத்தை நீங்கள் வழிப் பாதையாகப் பயன்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு என்று உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். அவ்வாறு நீதிமன்றம் உத்தரவிடும் வரை நீங்கள் அவ்வாறு வழிப் பாதையைப் பயன்படுத்துவதை உங்கள் சித்தப்பா தடுக்காமல் இருக்க தடை உத்தரவும் கோரலாம்.

-----------------------------------------------

என் கணவர் சொத்து தொடர்பாகத் தங்களின் ஆலோசனைப்படி உரிமையியல் நீதிமன்றத்தை (Civil Court) அணுகியுள்ளேன். வேறொருவரின் கேள்விக்குத் தாங்கள் பதில் அளித்தபோது, மரபணுச் சோதனைக்குச் சம்பந்தப்பட்டவர்தான் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க முடியும் எனச் சொல்லியுள்ளீர்கள். என் கணவர் கடந்த ஆண்டு தனியாக வசித்து, இறந்துவிட்டார். எங்களுக்கிடையே விவாகரத்தாகவில்லையென முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (CJM Court) உத்தரவிட்டுள்ளது. அதே வழக்கில் என் கணவருக்குக் குழந்தை இல்லை எனவும் தீர்ப்பானது. தற்போது என் கணவர் இறந்ததைப் பயன்படுத்தி அவரது வீட்டில் நுழைந்து ஆக்கிரமித்துள்ள நபர் தன்னை என் கணவரின் மகன் எனக் கூறி தன்னிடம் பிறப்புச் சான்று இருப்பதாகத் தெரிவிக்கிறார். நான் அவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்துப் பலனில்லாததால் தனிப்புகார் அளித்ததில், முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறது. அந்நபரின் திருமணச் சான்று, வாக்காளர் பட்டியலில் அவருடைய உண்மையான பெற்றோர் பெயர் இருப்பதை சி. சி. வழக்கில் குறியீடு செய்துள்ளேன். அந்த நபருக்கு மரபணுச் சோதனை நடத்த நான் விண்ணப்பிக்க இயலுமா? முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சி. சி. வழக்கில் விண்ணப்பிக்கலாமா? அல்லது சிவில் கோர்ட்டில் தற்போது பாப்பர் ஓ. பி. யாக உள்ள வழக்கு அசல் வழக்காக மாறிய பின்னரா? என் கணவர் உடல் அடக்கம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டாகிவிட்டது. ஆகவே, அந்த நபரின் உண்மையான தாயாருக்கும் அவருக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டால் உண்மை வெளிவரும். ஆகவே, இது பற்றி தக்க ஆலோசனை, அதாவது மரபணுச் சோதனைக்கு விண்ணப்பிப்பது பற்றி உரிய வழி கூறுவும்.

- ரெஜினா பேகம், நாகூர்.

உங்கள் கேள்வியில் பதில் சொல்லத் தேவையான பல விவரங்கள் இல்லை. இந்நிலையில் உங்களுக்குச் சரியான பதில் தர இயலவில்லை. ஆன போதிலும் உங்கள் கணவர் உயிரோடு இல்லாததால் மரபணுச் சோதனை நடத்த தேவையான உங்கள் கணவரின் மாதிரி மரபணுவை நீங்கள் பாதுகாத்து வைத்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் கணவரின் மாதிரி மரபணு இருந்தால் மட்டுமே தங்களால் மரபணு சோதனைக்கு விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு மாதிரி மரபணு இல்லை என்றால் மரபணுச் சோதனைக்கு விண்ணப்பிக்க முடியாது. உங்கள் கேள்வியிலிருந்து நீங்கள் நிறைய வழக்குகள் தாக்கல் செய்து அவை நிலுவையில் உள்ள விபரம் தெரியவருகிறது. ஆகவே, உங்களது வழக்கறிஞர்தான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தகுதியானவர்.

--------------------------------------------------

என் தாயுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர் (மூன்று பெண், இரண்டு ஆண்). அனைவரும் 1989-க்கு முன்னரே திருமணமானவர்கள். தாத்தா,பாட்டி சொத்துகளைப் பிரிக்காமலேயே காலமாகிவிட்டனர். தற்சமயம் என் மாமா சொத்துப் பிரச்சினையில் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, நீண்ட இடைவெளிக்குப் பின், தான் வெற்றிபெற்றுவிட்டதாகவும் பத்திரம் முடித்துவிட்டதாகவும் சொல்கிறார். மற்ற நான்கு பேர் அனுமதி இல்லாமல் ஒரு பிள்ளைக்கு மட்டும் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமா? உடன் பிறந்தவர்கள் இல்லாமல் பூர்வீகச் சொத்தைப் பத்திரம் முடிக்க முடியுமா ?

- ஜெய்கிருஷ்ணன்

உங்கள் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் உரிமையான பூர்வீக சொத்தில் உங்கள் தாய்க்கும் அவருடன் பிறந்தவர்களுக்கும் உரிமை உண்டு. உங்கள் மாமா யாருக்கு எதிராக என்ன பரிகாரம் கோரி எந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து என்ன தீர்ப்பைப் பெற்றார் என்ற விவரத்தை நீங்கள் குறிப்பிடாததால் அந்தத் தீர்ப்பைப் பற்றி எந்தக் கருத்தும் கூற இயலவில்லை.

-----------------------------

1996-ல் ஒரு பவர் ஏஜன்ட் எனக்கு ஒரு பதிவுசெய்யப்படாத உடன்படிக்கை மூலம் 37 எண்ணுள்ள மனையைக் கொடுப்பதாக உறுதிமொழி அளித்திருந்தார். உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள தொகையைவிட அதிகத் தொகையும் பெற்றுக்கொண்டு வாங்கிய பணத்துக்கு ரசீது அளித்துள்ளார். 37 எண் மனையைக் கொடுக்காமல் மதிப்புக் குறைவான 35 எண்ணுள்ள மனையை 05.12.1996-ல் சுத்த கிரயம் செய்துகொடுத்து ஏமாற்றினார். பிறகு எனக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த 35 எண்ணுள்ள அதே மனையை 04.07.1997-ல் வேறொருவருக்கு விற்கிரய உடன்படிக்கைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளார். நான் இரு முறை (டிசம்பர், 1997 - ஏப்ரல், 2006) 25 ஆண்டு காலத்துக்கு வில்லங்கச் சான்றுகள் பெற்றேன். அவற்றில் நான் கிரயம் பெற்ற விவரம் மட்டுமே இருந்தது. விற்கிரய உடன்படிக்கை இருந்த விவரத்தைக் காட்டவில்லை. பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2015 செப்டம்பரில் அந்த மனையை விற்பதற்காக வில்லங்கச் சான்று பெற்றபோது உடன்படிக்கை இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். மனையை விற்க முடியவில்லை. இது குறித்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி தகவல் கேட்டதற்கு முன் இருந்த அலுவலர்களால் வில்லங்கச் சான்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் உடன்படிக்கை விவரம் எவ்வாறு விடுபட்டது என்று அறிய இயலவில்லை என்று மாவட்டப் பதிவாளர் தகவல் அளித்துள்ளார். 6 மாதக் காலம் கண்டு எழுதப்பட்டுள்ள உடன்படிக்கை காலாவதி ஆகிவிட்டது. உரிமையியல் நீதிமன்றம் சென்று உடன்படிக்கை செல்லத் தக்கதல்ல என்று உத்தரவு பெற்றுக்கொள்ளுமாறு பதில் அளிக்கிறார். நான் பவர் ஏஜண்டிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையீடு செய்துவந்தேன். உடன்படிக்கையை ரத்துசெய்து கொடுப்பதாக உறுதி அளித்து வந்தவர். தற்போது முடியாது என்று ஏமாற்றுகிறார். நான் அவர் மீது குற்ற வழக்குத் தொடர முடியுமா?வில்லங்கத்தை மறைத்து வில்லங்கச் சான்றுகள் வழங்கிய பத்திரப் பதிவுத் துறை மீது வழக்குத் தொடர முடியுமா?

- மா. இராமமூர்த்தி, பண்ருட்டி.

நீங்கள் கிரயம் பெற்ற வீட்டு மனையின் முந்தைய உரிமையாளரின் அதிகார முகவர் மேற்படி வீட்டு மனையை உங்களுக்குக் கிரயப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்து கொடுத்த பின்னர், அதே வீட்டு மனையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய உடன்படிக்கை ஏற்படுத்தி அதைப் பதிவுசெய்தது சட்டப்படி குற்றம். அவர் மீது நீங்கள் கண்டிப்பாகக் குற்ற வழக்கு தொடர முடியும். பதிவுத் துறையால் வழங்கப்பட்ட வில்லங்கச் சான்றிதழில் விற்பனை உடன்படிக்கை விவரம் தெரிவிக்கப்படாமல் இருந்தால், அது சேவைக் குறைபாடு. அந்த சேவைக் குறைபாட்டுக்கு நஷ்டஈடு கோரி நீங்கள் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து நஷ்ட ஈடு பெறலாம். மேற்படி விற்பனை உடன்படிக்கை சட்டப்படி செல்லாது என்று விளம்புகை செய்யக்கோரியும் ரத்து செய்யக்கோரியும் அந்த விற்பனை உடன்படிக்கையை இயற்றிப் பதிவு செய்துள்ள நபர்கள் மீது தகுந்த உரிமையில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.

----------------------

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.

அஞ்சலில் அனுப்ப:
சொந்த வீடு,தி இந்து (தமிழ்), கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600002
கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in