

இ
ந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஆறு கங்கை. ஓடும் தொலைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஆறு. உத்தராகண்ட் மாநிலத்தில் மேற்கு இமயமலையில் தொடங்கி வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கிறது. கங்கை இந்தியா மட்டுமல்லாது வங்க தேசத்திலும் பாய்கிறது. இது இந்து மதத்தின் புனித ஆறாகப் பாவிக்கப்படுகிறது.
பாவங்களைக் கழுவும் புண்ணிய நதி என்ற தொன்ம நம்பிக்கையும் உண்டு. இதனால் இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் கங்கைக் கரைக்கு வருகிறார்கள். இங்கே வந்து உயிர் துறந்தால் மோட்சம் கிட்டும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இறந்த உடல்களைக் கங்கையில் மிதக்கவிடும் கலாச்சாரமும் உண்டு. இந்த அம்சங்களால் அதிகமாக அசுத்தமாகும் ஆறாகவும் கங்கை இருக்கிறது.
கங்கையைச் சுத்தப்படுத்த மத்திய அரசு இரு ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாகக் கங்கைக் கரையின் படித்துறைகளை மறு கட்டமைப்புச் செய்யும் உத்தேசத் திட்டம் இப்போது வெளியாகியிருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த போர்போஜெனஸிஸ் என்னும் நிறுவனம் இந்தத் திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. படித்துறை, தகனம் செய்யும் பகுதி ஆகியவற்றை மாற்றியமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு ‘ரிவர் இன் நீட்’ (River in need) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 210 கிலோ மீட்டர் தொலைவுக்கு தகனத்துக்கான மேடையும் படித்துறைகளும் உருவாக்கப்படவுள்ளன. இந்துக்களின் கலாச்சாரப் பின்பாட்டை உணர்ந்து இந்தத் திட்டத்தை உருவாக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அலகாபாத்துக்கும் வாரணாசிக்கும் இடையில் இதுபோல 30 படித்துறைகளும் 20 தகன மேடைகளும் உருவாக்கப்படவுள்ளன.
தொகுப்பு: விபின்