

பசுமைச் சமையலறை எனச் சொன்னதும் சைவ உணவு பற்றிப் பேசப் போகிறோம் எனத் தோன்றலாம். ஆனால் சமையலறை என்ற களத்தில் சுற்றுச்சூழல் நண்பராக ஒருவர் மாற இன்னும் பல விஷயங்கள் உள்ளன. “ஒரு நாளைக்கு மட்டும் 100 கோடி கோக் பாட்டில்களை உலக மக்கள் குடிக்கிறார்கள். இப்படி கோக் பானத்தைக் குடிக்கும் போக்கு உணவுத் தேவையின் அடிப்படையில் எழுந்ததல்ல. அதைப் போன்றே பல உணவுப் பொருள்களைத் தேவையின்றி நாம் உட்கொள்கிறோம்” என்கிறார் அமெரிக்க உணவு ஆராய்ச்சியாளர் மற்றும் பத்திரிகையாளர் மார்க் பிட்ஸ்மான்.
நம் தினசரி உணவுப் பட்டியல் முன்னைப் போல் இல்லை. பீட்சா, பர்கர் எனப் புதிய புதிய பண்டங்களுடன் நீண்டுகொண்டே இருக்கிறது. அவற்றில் பல நம் உடல் ஆரோக்கியத்துக்கும், உலக ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. உடல் ஆரோக்கியம் சரி. உலக ஆரோக்கியம் என் உணவு தட்டில் உள்ளதா என நீங்கள் ஆச்சரியமடையலாம். உணவைத் தேர்வுசெய்யும் முறையிலும், அதைச் தயாரிக்கும் விதத்திலும் சூழலியலில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதோ உங்கள் சமையலறையைப் பசுமை யறையாக மாற்றச் சில எளிய வழிகள்.
பாத்திரத்தில் உள்ளது
‘ஒட்டவே ஒட்டாது’ என்ற விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு நான்ஸ்டிக் வாணலி, நான்ஸ்டிக் தோசைக்கல் என விதவிதமான டெஃப்லான் பூசப்பட்ட சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் டெஃப்லான் பூச்சால் உடல் ஆரோக்கியத்துக்கு அபாயங்கள் ஏற்படலாம் என விவாதிக்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, இத்தகைய பாத்திரங்களின் வாழ்நாள் குறைவு என்பது மற்றொரு சிக்கல். இரும்பு, ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் பாத்திரங்கள் காலங்காலமாக நீடிக்கக்கூடியவை. உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்காதவை. அதேபோல கரண்டியைத் தேர்ந்தெடுக்கும்போதும் மரம், பிளாஸ்டிக்கைத் தவிர்த்துவிட்டு இரும்பு, ஸ்டெய்ன்லஸ் ஸ்டீலைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
மின் அடுப்பா, கேஸ் அடுப்பா?
சமையல் அடுப்புகளில் இண்டக் ஷன் ஸ்டவ் பயன்படுத்தும் போக்கு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் இண்டக் ஷன் ஸ்டவ் ஒரு விதத்தில் சிறப்பான மாற்றுதான். ஆனால் அவற்றில் பயன்படுத்தும் பாத்திரங்கள் ஸ்டெயிலஸ் ஸ்டீல் அல்லது இண்டக் ஷன் அடிப்பாகம் கொண்டவையாக இருக்க வேண்டும். இதனால் அதற்கு ஏற்றாற்போல பாத்திரங்கள் வாங்க வேண்டி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கேஸ் அடுப்பில் சமைப்பதுதான் பலருக்குத் துரிதமாகவும், எளிமையானதாகவும் இருக்கிறது. குறிப்பாக கேஸ் அடுப்பில் சமைக்கும்போது பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது உகந்தது. ஏனெனில் வாணலியில் சமைப்பதைக் காட்டிலும் பிரஷர் குக்கரில் சமைக்கும்போது 70% கேஸை சேமிக்க முடியும்.
வீட்டு உபயோகப் பொருள்கள்
மின் ஆற்றலைத் திறம்படப் பயன்படுத்தும் பல வீட்டு உபயோகப்பொருள்கள் இன்று சந்தையில் விற்கப்படுகின்றன. மின்சாரத்தைச் சிறப்பாகச் சேமிக்கும் உபகரணங்களுக்கு நட்சத்திர மதிப்பீடும் தரப்படுகிறது. இவற்றை மனதில் கொண்டு உங்கள் பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
என் உணவு என் வீட்டில்
உறைந்த நிலையில் இருக்கும் உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. காய்கறிக் கழிவுகளை உங்கள் தோட்டத்திற்கான உரமாகவும் மாற்ற முடியும். சமையல் பாத்திரங்களைச் சுத்தப்படுத்த ரசாயன சோப்புகள், பொடிகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து வெள்ளை வினிகர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம்.
வீணடிக்க வேண்டாம்
வீட்டில் அதிகப்பட்ச குப்பைகளை உருவாக்கும் அறை சமையலறைதான். அதற்குக் காரணம் தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை வாங்கிக் குவிப்பது. சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியாத உணவுப் பண்டங்களை அன்றைய தேவைக்கு மட்டும் தயார்செய்து பயன்படுத்துவது நல்லது.
இத்தகைய எளிய குறிப்புகளைப் பின்பற்றினால் நாமும் ஒரு சூழலியல் நண்பராக மாற முடியும்.