

வீ
டு, மனையின் விலை உயர்ந்துள்ளதா, குறைந்துள்ளதா என்ற நிலவரங்களைச் சொல்லும் தேசிய வீட்டு வசதி வங்கியின் ரெசிடெக்ஸ் குறியீடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய குறியீட்டு வடிவம் ஒரு நகரில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா என்பதை மட்டுமே தரவுகளின் அடிப்படையில் சொன்னது.
தற்போதைய குறியீட்டு வடிவத்தில் ஒரு சதுர அடியின் விலை, சதுர மீட்டரின் விலை, சராசரியாக வீட்டின் விலை எனப் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய ரெசிடெக்ஸ் வீட்டுவிலைக் குறியீடுகளின்படி சென்னை, கோவையில் வீட்டு விலை நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோமா?
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டத்தின் ஒருபகுதியாகக் கடந்த 2007-ம் ஆண்டில் இந்த ரெசிடெக்ஸ் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரெசிடெக்ஸ் குறியீடு 100 என்ற அடிப்படைப் புள்ளியிலிருந்து தொடங்கப்பட்டது. இதுவரை 24 நகரங்களின் விலை நிலவரம் மட்டுமே ரெசிடெக்ஸ் குறியீடு மூலம் சொல்லப்பட்டு வந்தது. தேசிய வீட்டு வசதி வங்கியும் ரிசர்வ் வங்கியும் இந்த நகரங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தத் திட்டமிட்டன.
ஆனால், தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள ரெசிடெக்ஸ் வீட்டு விலைக் குறியீடு 50 நகரங்களுக்கு மட்டுமே விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த 50 நகரங்களில் 37 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றவை. தற்போது 2013-ம் ஆண்டை அடிப்படையாக வைத்து 100 என்ற அடிப்படையில் இந்த 50 நகரங்களுக்கும் இந்தக் குறியீடு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 4 காலாண்டுகளுக்கு ஒருமுறை வீடு, மனை மதிப்புகள் வெளியிடப்பட உள்ளன. 2013-ம் ஆண்டு முதல் 2017 மார்ச் வரையிலான காலத்துக்கு ரெசிடெக்ஸ் வீட்டு விலைக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை ஆகிய இரு நகரங்கள் மட்டுமே ரெசிடெக்ஸ் குறியீடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த இரு நகரங்களும் ஏற்கெனவே பட்டியலில் இருந்த 24 நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றவைதான். புதிதாக அமைக்கப்பட்டுள்ள விலைக் குறியீட்டுப் பட்டியலில் தமிழகத்தின் வேறு எந்த நகரங்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை.
2017-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரெசிடெக்ஸ் விலை மதிப்பீடு நிலவரத்துக்கான குறியீடு சென்னையில் 133 ஆக உயர்ந்துள்ளது. 2013-ல் 103 ஆக இருந்த இந்தக் குறியீடு, கடந்த 4 ஆண்டுகளில் 30 குறியீடுகள் அதிகரித்துள்ளன. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி 134 குறியீடுகளும் டிசம்பரில் 131 குறியீடுகளுமே இருந்துள்ளன. ஆனால், கோவையின் விலை மதிப்பீட்டு நிலவரக் குறியீடு சென்னையைப் போல இல்லை. தற்போது விலை மதிப்பீட்டுக் குறியீடு 107 ஆக மட்டுமே உள்ளது. கடந்த செப்டம்பரில் 130 ஆக இருந்த குறியீடு, டிசம்பரில் 102 ஆகக் குறைந்து தற்போது 107 ரெசிடெக்ஸ் குறியீடாக உள்ளது. இதன்படி விலை மதிப்பீட்டுக் குறியீடு சென்னையில் ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது. கோவையில் குறைந்தும் காணப்படுகிறது.
இதேபோல் கட்டுமானத்தின்போது சந்தை விலைக் குறியீடு விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சென்னையின் இந்த விலைக் குறியீடு தற்போது 132 ஆக உள்ளது. கடந்த செப்டம்பரில் 137 ஆக இருந்த குறியீடு, டிசம்பரில் 124 ஆக குறைந்து, தற்போது 132 குறியீடு என்ற அளவில் உள்ளது. கோவையிலோ தற்போது 132 குறியீடாகக் கட்டுமானத்தின்போது சந்தை விலைக் குறியீடு உள்ளது. கடந்த செப்டம்பரில் 124 ஆக இருந்த குறியீடு, டிசம்பரில் 135 ஆக அதிகரித்து, தற்போது 132 குறியீடாக உள்ளது. இதன்படி கட்டுமானத்தின்போது வீட்டுச் சந்தை விலை சென்னையில் அதிகரித்தும் கோவையில் குறைந்தும் காணப்படுவதாக ரெசிடெக்ஸ் குறியீடு உணர்த்துகிறது.
நாம் வீடு வாங்க உத்தேசித்துள்ள பகுதியில் சொத்தின் தற்போதைய விலை என்ன, 3 மாதங்களுக்கு முன்பு என்ன விலை, குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா போன்ற தகவல்களைக் கொண்டு அந்தச் சொத்தை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவுசெய்யலாம். அல்லது இன்னும் காத்திருக்கலாமா என்றும் முடிவு எடுக்கலாம். தரகர்கள் மூலம் நாம் விசாரிக்கும்போது அவர்கள் அளிக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராய முடியாது. வீட்டின் விலையை இஷ்டத்துக்கு அதிகரித்துச் சொல்லவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தேசிய வீட்டு வசதி வங்கி அளிக்கும் தகவல் ஆதாரபூர்வமானது. வீடு அல்லது மனை வாங்கும் முன்பு ரெசிடெக்ஸ் குறியீடுகளைப் பார்த்துச் சென்றால், அதன் அடிப்படையில் வீட்டை விற்பவர்களிடம் நாம் பேரம் பேசி விலையை நிர்ணயிக்க முடியும்.
ரெசிடெக்ஸ் குறியீடு ரெசிடெக்ஸ் குறியீட்டை எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது சென்செக்ஸ் குறியீடு போன்றதுதான். அதாவது, பங்குச் சந்தையில் பங்குகளின் விலை குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதைச் சென்செக்ஸ் குறியீடு மூலம் குறிப்பிடுவார்கள் அல்லவா? அதுபோல நகரங்களில் வீடு, மனை விலை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்ற நிலவரத்தை அளிப்பதுதான் ரெசிடெக்ஸ் குறியீடு. |