சென்னைப் பெருநகர விரிவாக்கம்: நன்மை செய்யுமா?

சென்னைப் பெருநகர விரிவாக்கம்: நன்மை செய்யுமா?
Updated on
2 min read

செ

ன்னை நகரத்தின் எல்லையை விரிவாக்கும் பணியைச் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ. சென்ற வாரம் தொடங்கியுள்ளது. ஜூலை 3 அன்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பைச் சட்டசபையில் வெளியிட்டார். உள்கட்டமைப்பு, சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஐந்தாண்டுகளாக நிலுவையிலிருந்த இந்த லட்சியத் திட்டத்தை நடைமுறையாக்குக் கொண்டுவருவதற்கான அலுவல் செயல்பாடுகளை இப்போது சி.எம்.டி.ஏ. தொடங்கியுள்ளது. 1974-ம் ஆண்டு சட்டரீதியிலான அமைப்பாக சி.எம்.டி.ஏ. செயல்படத் தொடங்கியபோது, சென்னைப் பெருநகரத்தின் எல்லை 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கொண்டதாக இருந்தது. 43 ஆண்டுகளாக இதே எல்லையில்தான் சென்னைப் பெருநகரம் இருக்கிறது.

ஆனால், நகரில் மக்கள்தொகை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவருகிறது. 2008-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ.வின் அறிக்கை 2026-ல் சென்னையின் மக்கள் தொகை 1.25 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறது. விரிவாக்கத் திட்டம் மக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதி எனலாம். இதன் மூலம் நகரின் உள்கட்டமைப்பு மேம்படும். வீட்டுப் பற்றாக்குறையும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டப் பகுதிகளுடன் வேலூர் மாவட்டத்தின் அரக்கோணமும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைப் பெருநகரம் 8,878 சதுர கிலோ மீட்டராக விரிவடையும். சென்னைக்கு முன்பாக 2008-ல் ஹைதராபாத் நகரமும் நான்கு மாவட்டப் பகுதிகளை இணைத்து 7,257 சதுர கிலோ மீட்டரில் அதன் எல்லையை விரித்துக்கொண்டது.

03jkr_CMDAexpansion

2015-ம் ஆண்டு தேசியத் தலைநகர் விரிவாக்கத்தின் அடிப்படையில் டெல்லி 58,332 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விரிவுபடுத்தப்பட்டு நாட்டின் மிகப் பெரிய பெருநகர விரிவாக்கமாக ஆனது.

சென்னைப் பெருநகர விரிவாக்கத்தால் சென்னை ரியல் எஸ்டேட் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் வளம் மிக்க ரியல் எஸ்டேட் பகுதியான தென் சென்னையின் எல்லை இதன் மூலம் விரிவடையும். மேற்குச் சென்னையின் எல்லையும் அரக்கோணம்வரை விரியும்.

“சி.எம்.டி.ஏ.வின் இந்தப் புதிய விரிவாக்கத்தால் மேற்கு சென்னையின் ரியல் எஸ்டேட் வளமடையும் என எதிர்பார்க்கலாம். மேலும், வீட்டுவசதிகள் மேம்படும்.

இப்போது திருமழிசைப் பகுதியில் குடியிருப்புகளை உருவாக்கிவருகிறோம். நாளை நாங்கள் அரக்கோணம் வரை எங்கள் திட்டத்தை விரிவாக்கவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும். பொதுவாக மேற்குச் சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும்” என்கிறார் எம்.எஸ். பவுண்டேஷன் முதன்மைச் செயல் அதிகாரி பத்ரி நாராயணண்.

சென்னை ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை தென் சென்னை மட்டும்தான் வளர்ச்சி மிக்க பகுதியாக இருந்துவந்தது. ஆனால், கடந்த ஒரு பத்தாண்டுக் காலமாக அம்பத்தூர், ஆவடி, திருமழிசை போன்ற மேற்குச் சென்னைப் பகுதிகளிலும் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. தென்சென்னைப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஆவடி, திருநின்றவூர் போன்ற பகுதிகளில் தனி வீடுகள் வாங்குவது அதிகரித்துவருகிறது. வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம்வரை சென்னை நகரம் விரிவாக்கம் பெறவிருப்பதால் இந்தப் பகுதியில் வீடுகள் வாங்குவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. உள்கட்டமைப்பு மட்டுமல்லாது அந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும். சென்னையின் இந்த விரிவாக்கத் திட்டம் மிகச் சரியானபடி செயல்படுத்தப்படும். இதனால் சென்னை நகரத்தின் வளர்ச்சி மேம்படும்” என்கிறார் தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் நிறுவனரான நிரஞ்சன் ஹிராநந்தானி.

இந்த விரிவாக்கம் என்பது வெறும் எல்லை விரிவாக்கத்துடன் நின்றுவிடுவது அல்ல. புதிய பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அந்தப் பகுதிகளை இணைக்கப் புதிய சாலைகள், பாலங்கள் அமைக்கப்பட வேண்டி வரும். பொதுப் போக்குவரத்துக்கான வசதிகளையும் மேம்படுத்த வேண்டி வரும்.

“சென்னைப் பெருநகர விரிவாக்கத் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. இதனால் நகர நெருக்கடி குறையும். ஆனால், நகர எல்லையை விரிவாக்கம் செய்வது மட்டும் போதாது. சாலைப் போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த வேண்டும். திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வரும் நேரத்துக்குக் கூடுதலான நேரம் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வருவதற்கு ஆகிறது. அந்த அளவுக்குப் போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். மேலும், மின்சார ரயில் சேவையையும் விரிவாக்க வேண்டும். மெட்ரோ ரயில் சேவையையும் விரிவாக்க வேண்டும்” என்கிறார் ரூபி பில்டர்ஸ் நிறுவனர் ரூபி மனோகரன்.

இந்தத் திட்டம் அறிவிப்புடன் நிற்காமல் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். இதன் மூலம் பல நிலைகளில் புதிய பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். பல்வேறு தேவைகளின் பொருட்டு சென்னைக்குக் குடிவரும் மக்கள் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகளும் பெருகும் என எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in