

தி.
நகர், சென்னை சில்க்ஸ் கட்டிடத் தீ விபத்தைத் தொடர்ந்து அதன் பாதுகாப்புப் பெட்டகத்தைச் சில நாட்களுக்குப் பிறகு தீயணைப்புப் படையினர் தோண்டி எடுத்த புகைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு வியப்பு தோன்றியிருக்கலாம். ‘இவ்வளவு பெரிய தீவிபத்திலும் இதற்குச் சேதம் நேராமல் இருந்திருக்கிறதே!’ அடுத்து இன்னொரு கேள்வியும் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு. ‘நம் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகமும் இவ்வளவு பாதுகாப்புடன் இருக்குமா?’
நம்மில் பலரும் நமது நகைகளையும் முக்கிய ஆவணங்களையும் வங்கிப் பெட்டகங்களில் வைத்துப் பாதுகாப்பது வழக்கம். அப்படிப்பட்ட வழக்கம் இல்லாதவர்கள்கூட எங்காவது ஊருக்குக் கிளம்பினால் தங்கள் பொருள்களை மறக்காமல் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துவிட்டுப் போகிறார்கள். வங்கிகளில் கணக்குத் தொடங்குவது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம், ஆனால் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகம் (Safe Deposit Locker) கிடைப்பது சுலபமல்ல.
வங்கிப் பாதுகாப்புப் பெட்டகச் சேவையைப் பெற வாடிக்கையாளர் வயது 18-ஐத் தாண்டியிருக்க வேண்டும். பல வங்கிகளும் சேமிப்புக் கணக்கு ஒன்றையும் தொடங்கச் சொல்வார்கள். இந்த வசதி பெறுவதற்கு அதிகத் தேவை இருப்பதால், கணிசமான தொகையை வங்கியில் வைப்புநிதியாக அளிப்பவர்களுக்கே பாதுகாப்புப் பெட்டக வசதியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தத் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். இப்போதெல்லாம் இருவர் சேர்ந்து பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், தனக்குப் பிறகு யாருக்குப் பெட்டகத்திலுள்ளவை போய்ச் சேர வேண்டுமெனப் பரிந்துரைக்குமாறும் பல வங்கிகளும் புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளன.
எப்போதாவது உங்களுக்கு இப்படித் தோன்றி இருக்கிறதா? ‘கோடீஸ்வரர்கள் உட்பட பலரது நகைகள் குவிந்துள்ள இடம் வங்கிப் பெட்டகங்கள். அதிகப்படியான சாகசம் செய்து கொள்ளையர்கள் அங்கும் கைவரிசையைக் காட்டக் கூடாதா என்ன? அப்படியென்ன சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு இருக்கின்றன?’ இத்தனைக்கும் வங்கிப் பெட்டகத்திலுள்ள பொருள்கள் ஒருவேளை கொள்ளையடிக்கப்பட்டால் காப்பீடு செய்திருந்தாலொழிய நமக்கு எந்தவித நஷ்டஈடும் கிடைக்காது.
ஏனென்றால் நாம் பெட்டகத்தில் எதை வைத்திருக்கிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். வங்கியில் இதை நாம் அறிவிப்பதில்லை. (இந்த நிலையில் வங்கிப் பெட்டகத்திலுள்ள பாதுகாப்பு ஏற்பாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது).
ஏதோ ஒரு கட்டிடத்துக்குள் வங்கிகள் பெட்டகங்களை நிறுவுவதில்லை. அந்தக் கட்டிடத்தின் சுவர்கள்கூட மிக அதிக உறுதி கொண்டதாக இருக்க வேண்டும். நவீன வங்கிப் பெட்டகங்கள் மிகவும் கரடுமுரடான (complex) பூட்டுகளைக் கொண்டவை. திறப்பது வெகு கடினம். தொடக்கத்தில் துளையில் சாவியைப் போட்டுத் திருப்பும்படியான பூட்டுகள்தான் பயன்படுத்தப்பட்டன. மாற்றுச் சாவியைப் பயன்படுத்துவது கிட்டத்தட்ட முடியாத விஷயம். அந்த அளவு உறுதியான பூட்டுகள். ஆனால் இம்மாதிரி பூட்டுகளில் கொள்ளையர்கள் வெடிமருந்துகளைக் கொண்டு வெடிக்கச் செய்து கொள்ளையடித்தனர்.
1861-ல் லைனஸ் ஏல் ஜூனியர் என்ற மெக்கானிகல் இன்ஜினீயர் உருளை வடிவப் பூட்டைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த இணைப்புப் பூட்டுகள்தான் (Combination Lockers) இப்போது வங்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பெட்டகக் கதவில் துளையிடுவது, நுட்பமான கண்ணாடிகளின் உதவியுடன் பூட்டுகளின் சூட்சுமத்தை அறிந்துகொள்வது என்று கொள்ளையர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டத் தொடங்கினார்கள். எல்லாவற்றையும்விட எளிய வழியாக வங்கி மேலாளரை விட்டே வங்கிப் பெட்டகங்களைத் திறக்கவைத்தார்கள். (துப்பாக்கி முனையில் அவரும் வேறு என்னதான் செய்ய முடியும்!)
கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. வங்கி ஊழியரே நினைத்தால்கூடப் பெட்டகங்களைத் திறக்க முடியாது என்ற கண்டுபிடிப்பு அறிமுகமானது. வாடிக்கையாளர், வங்கி அதிகாரி இருவருமே தங்களிடமுள்ள வெவ்வேறு சாவிகளை செலுத்தினால்தான் திறக்கும்படியாகப் பெட்டகங்கள் வடிவமைக்கப்பட்டன (லாக்கரை மூடுவதற்கு வாடிக்கையாளரிடம் உள்ள சாவி மட்டுமே போதுமானது).
இவ்வளவு மணி நேரத்துக்குப் பிறகுதான் மீண்டும் திறக்கும் எனும் வசதியைத் தேர்ந்தெடுக்கும் வகையிலும் பெட்டகங்கள் உருவாயின. வங்கியின் வேலை நேரம் முடியும்போது இப்படித் தேர்வு செய்து விட்டால் அடுத்த நாள் காலைவரை எந்தப் பெட்டகத்தையும் திறக்க முடியாது.
பெட்டகக் கொள்ளைகளைத் தவிர்க்க வேறு பல விஷயங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. வங்கிக் கிளைக்காக ஒரு கட்டிடம் எழுப்பப்படும்போதே பெட்டகங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படுகின்றன. பிரபலப் பெட்டகம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் வங்கி ஆலோசனை நடத்துகிறது. கான்கிரீட் கட்டிடங்களில் மட்டும்தான் வங்கிகளின் பெட்டகங்கள் இருக்கும். Steel Reinforced Concrete பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம் கான்கிரீட்டுடன், அதை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவும் சில பொருள்கள் (additives) சேர்க்கப்படுகின்றன.
உலகிலேயே வங்கிப் பெட்டகங்களை மிகச் சில நிறுவனங்கள்தான் உருவாக்குகின்றன. பெட்டகங்கள் தரக்கட்டுப்பாடு மிகவும் ஆழமாக உறுதிசெய்யப்படுகிறது. தீப்பற்றி எரியும்போதும் உருகாத பெட்டகங்களில்தான் இப்போது கவனம் திரும்பியுள்ளது.
தி.நகர், சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவதுமாக எரிந்த பிறகும்கூட அதன் நிலவறையில் புதைக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகம் உருகாமலும், உடைபடாமலும் இருந்ததை நாம் பார்த்தோம்.
தொடக்கத்தில் தரைத்தளத்துக்கும் கீழ்ப்பகுதியில் (Basement) பெட்டகங்கள் நிறுவப்பட்டன. இப்போது அப்படியல்ல. இன்று பெட்டக அறை சுவர் மெலிதாக, அதே சமயம் உறுதியானதாகக் கட்டப்படுகிறது.
மற்றபடி அலாரம், கேமரா போன்றவை அதிகப்படி பாதுகாப்பை அளிக்கின்றன. பெட்டகப் பூட்டை யாராவது உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது உடனே உள்ளூர்க் காவல் நிலையத்துக்கு அதை அறிவித்துவிடும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.