

சொந்த வீடு என்னும் லட்சியத்தை அடைய நினைக்கும் வாசகர்களுக்கு உதவும் பொருட்டு தி இந்து (தமிழ்) நாளிதழின் சொந்த வீடு இணைப்பிதழ் சார்பாகப் பிரம்மாண்டமான வீட்டுக் கண்காட்சி நடத்தப்பட்டது. நோவா கட்டுமான நிறுவனமும் இந்தியன் வங்கியும் ‘சொந்த வீடு’ இணைப்பிதழுடன் இணைந்து நடத்திய இந்தக் கண்காட்சி, நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில், ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடந்தது.
‘சொந்த வீடு’ இணைப்பிதழ் முதன்முறையாக நடத்திய இந்தப் பிரம்மாண்ட வீட்டுக் கண்காட்சித் திருவிழாவில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன. வீட்டு மனை, அடுக்குமாடி வீடுகள், தனி வில்லாக்கள் எனப் பலவிதமான ப்ராபர்டிகள் இந்த ஒரே நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. வீட்டு உள் அலங்கார நிறுவனங்களும் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டன. வீட்டுக் கடன் தரும் வங்கிகளும் இந்தக் கண்காட்சியில் பங்குகொண்டன.
பார்வையாளர்களுக்கான பிசினஸ் லவுஞ்ச்
வாசகர்களுக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில் அவர்களது வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக முக்கியமாகப் பார்வையாளர்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும் வகையில் 5 நட்சத்திர விடுதிகளின் தரத்திலான ஓய்வறைகள் (Business lounge) உருவாக்கப்பட்டிருந்தன. குடும்பத்துடன் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் அதிநவீன இருக்கைகள் இந்த ஓய்வறையில் போடப்பட்டிருந்தன.
மேலும் இந்தக் கண்காட்சியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அனுமதி இலவசம் என்பது சாதகமான அம்சம். முன்னணிக் கட்டுமான நிறுவனங்களான ஹிராநந்தி, ரூபி பில்டர்ஸ், அர்பன் ட்ரீ, அக்ஷயா, அத்வைதா, ஸ்ரீராம் ப்ராபர்டீஸ், காஸா கிராண்டே, வி.ஜி.என்., அமர்பிரகாஷ், வி.ஜி.பி. உள்ளிட்ட சுமார் 72 கட்டுமான நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டன.
வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்பத் தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சொகுசு வில்லாக்கள், வரிசை வீடுகள், இருதள அடுக்குமாடி வீடுகள் போன்ற கட்டி முடிக்கப்பட்ட பல விதமான வீடுகளை ஒளிப்படங்களுடன் கட்டுமான நிறுவனங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. அடுக்குமாடி வீடுகளில் ஒரு படுக்கையறை வீடு முதல் மூன்று படுக்கையறை வீடுகள் வரை விற்பனைக்கு இருந்தன. விற்பனைக்குத் தயாராக உள்ள வீடுகள் குறித்த முழுமையான தகவல்களைக் கட்டுமான நிறுவனங்கள் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தின.
வசீகரித்த விளக்குகள்
சென்னையில் மட்டுமல்லாமல் கோயம்புத்தூர், மதுரை, பாண்டிச்சேரி போன்ற தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த வீடுகளும் இந்தக் கண்காட்சியில் விற்பனைக்கு இருந்தன. இதன் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் முதலீடு செய்ய விருப்பமுடையவர்களுக்கு இந்தக் கண்காட்சி சிறந்த வாய்ப்பாக இருந்தது.
வீடுகள் மட்டுமல்லாது அறைக்கலன்கள், விளக்குகள், உள் அலங்காரத்துக்கான பொருட்கள் ஆகியவையும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்தந்தத் துறையின் முன்னணி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டன. கிரியேட்டிவ் ஐடியாஸ் ஃபர்னிச்சர்ஸ் நிறுவனம் பலவிதமான அறைக்கலன்களை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தது.
வீடுகளுக்கு வெளிச்சத்தையும் அழகையும் கொண்டுவரும் விதத்தில் பல்வேறு விதமான விளக்குகளை முன்னணி கே லைட் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. குளியலறைக்கான பிரத்தியேக விளக்குகள், அலமாரிகளுக்கான விளக்குகள், உணவு மேஜைக்கான விளக்குகள் எனப் பல விளக்குகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்த விளக்குகளில் பிடித்திருந்தவற்றைக் கண்காட்சியில் பதிவுசெய்துகொள்ளும் வசதியையும் அந்நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தது.
மாடுலர் சமையலறைப் பொருட்கள்
புகை போக்கி உள்ளிட்ட மாடுலர் சமையலறைக்கான அத்தனை பொருட்களையும் ஸ்பேஸ் கிராஃப்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தக் காண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தன. குறிப்பாக நீர் புகா தன்மை கொண்டமரப் பலகை மாடுலர் சமையலறை வடிவமைப்பு பார்வையாளர்களைக் கவர்ந்தது. இம்மாதிரியான பிளைவுட்களை உருவாக்குவதற்கான செலவு மற்ற பொருள்களைக் காட்டிலும் குறைவு. நமக்கு விருப்பமான வடிவில் செய்து தரப்படும் என்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
பொதுவாக மாடுலர் சமையலைறைக்கான அலமாரிகள் அமைக்கும்போது சமையலறையின் தண்ணீர் பட்டு அவை பழுதாக வாய்ப்பிருக்கிறது. நீர் புகா தன்மை கொண்ட இந்த பிளைவுட் பலகையால் அந்தப் பிரச்சினையைத் தவிர்த்திட முடியும். ஆகவே, இந்தப் பலகை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இவை மட்டுமல்லாது கண்கவரும் வண்ணத்தில் பிளாஸ்டிக் பானைகள், பிளாஸ்டிக் பூச்செடிகள், தோரணங்கள் எனப் பலவகை அலங்காரப் பொருட்களும் இந்தக் கண்காட்சியை அழகுபடுத்தின.
நிதித் தேவைக்கான ஆலோசனைகள்
வீட்டைத் தேர்வுசெய்த பின்னர் பெரும்பாலானவர்கள் வீடு வாங்க வங்கிக் கடனையே சார்ந்திருக்கிறார்கள். அதனால் இந்தக் கண்காட்சியிலேயே அதற்காகத் தனி பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியை ‘சொந்த வீடு’ இணைப்பிதழுடன் இணைந்து வழங்கும் இந்தியன் வங்கியின் ஆலோசனை மையமும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ரெப்கோ வங்கி, ஐ.டி.பி.ஐ. ஆகிய வங்கிகளும் வீட்டுக் கடன் வாங்குவதற்கான முறையான ஆவணங்கள் என்னென்ன, சம்பளத்தின் அடிப்படையில் எவ்வளவு வீட்டுக் கடன் பெற முடியும் போன்ற பார்வையாளர்களின் சந்தேகங்களைத் தீர்க்க உதவின. ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் இந்தக் கண்காட்சி வருபவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் ஒரு முழுமையான கண்காட்சியாக இது அமைந்திருந்தது என்பது பெரும்பாலான பார்வையாளர்களின் கருத்து.
- நிவேதிதா