

கட்டுமானப் பணிகளின்போது சிமெண்ட் கலவை கீழே விழுவதைத் தடுக்க முடியாது. ஆனால் அப்படிக் கீழே விழும் சிமெண்ட் கலவை, வீணாவதைத் தடுக்க முடியும். அதற்குப் பல வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சுவர் கட்டுமானத்துக்கு இருபுறமும் சிமெண்ட் சாக்குப் பைகளை விரித்து வைத்திருப்பார்கள். இதன் மூலம் பூச்சின்போது விழும் சிமெண்ட் கலவை இந்தச் சாக்குப் பைகளில் வந்து விழும். அதைத் திரும்பப் பயன்படுத்த முடியும்.
என்னதான் இந்த வழிமுறையக் கடைபிடித்தாலும் கொஞ்சம் சிமெண்ட் கலவை வீணாவதை முழுமையாகத் தடுக்க முடியாது. இம்மாதிரியான பூச்சின்போது சிமெண்ட் விழாமல் தடுப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்க முடியும். மேலும் மேற்பூச்சு பூசாமல் அப்படியே விடப்படும் கட்டிடங்களுக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தராது. சிமெண்ட் வீணாவதைத் தடுப்பதற்கும் நேர்த்தியான தோற்றத்தைத் தருவதற்குமான ஒரு எளிமையான உபகரணத்தை அயர்லாந்தைச் சேர்ந்த நோயல் மார்ஷல் கண்டுபிடித்துள்ளார்.
இந்த உபகரணம் பிளாஸ்டிக்கிலானது. ஒருசெங்கல் சுவர்கள், இருசெங்கல் சுவர்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடியது. இது ‘ப’ வடிவ பிளாஸ்டிக் சட்டகமாக இருக்கும். இதற்குள் சிமெண்ட் கொண்டு பூசினால் போதுமானது. சிமெண்ட் வீணாவது தடுப்பது மட்டுமல்லாமல், அழகான பூச்சும் கிடைக்கும். ப்ளாக் கற்களைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டிடங்களுக்கு இது நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும்.
கற்களால் ஆன வீடு கட்டுவதற்கு இந்த உபகரணம் பொருத்தமானதாக இருக்கும். இதற்கு அவர் ப்ரிக்கிடூல் (Bricky Tool) எனப் பெயர் இட்டுள்ளார் மார்ஷல். இது அயர்லாந்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேல் பூச்சில்லாமல் உருவாக்கப்படும் ஏழை மக்களின் வீடுகளுக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருவதே இந்தக் கட்டுமானப் பொருள் உருவாக்கப்பட்டதற்கான காரணம். இந்த பிரிக்கி மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவை இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 2947.