

பு
வி வெப்பமடைந்து வருகிறது, ஓசோனில் ஓட்டை பெரிதாகிவருகிறது போன்ற எச்சரிக்கைகள் இப்போது நாம் அடிக்கடி கேட்பவை. வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் புகையோ குப்பையை எரிப்பதால் வரும் புகையோ மட்டும் அதற்குக் காரணமல்ல. நம் வீட்டில் நாம் பயன்படுத்தும் குண்டுபல்பை எரியவைக்கும் மின்சாரமும்கூட அதற்குக் காரணம்தான்.
எப்படி என்றால், ஜெர்மனி, சுவீடன் போன்ற மேற்கத்திய நாடுகள் 100 சதவீதம் மின்சாரத்தைச் சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்கிறது. ஆனால், நம் நாட்டில் இன்னும் மின் உற்பத்திக்குப் பெருமளவு அனல்மின் உற்பத்தி நிலையங்களையும் அணுமின் உற்பத்தி நிலையங்களையும் நம்பியுள்ளோம். இந்த மின் நிலையங்கள் உமிழும் புகை மற்ற எல்லாவற்றையும்விட அதிகப் பாதிப்பைப் புவிக்கு ஏற்படுத்துகிறது.
எனவே, மாத வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது வீட்டுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே நன்மையளிக்கும். தேவையைக் குறைக்காமல் அதே சமயம் மின் உபயோகத்தைக் கட்டுப்படுத்த சில எளிய தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
பல மின் உபகரணங்கள், நாம் அதை அணைத்தபின்னும் மின்சாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன என்பது தெரியுமா? ஆம், அதை அணைத்தபின் மின்னிக்கொண்டிருக்கும் விளக்கு என்ன காற்றிலாயெரிகிறது? டிவிடி பிளேயர், பிரிண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, கணினிகள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப், உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கின்றனவா என்பதை உணரும் தன்மைகொண்டது.
பயன்பாட்டில் இல்லை என்று தெரிந்தால், அதற்குச் செல்லும் மின்சாரத்தை முழுமையாக நிறுத்திவிடும். சில வகை ஸ்மார்ட் ஸ்ட்ரிப்கள், இன்னும் ஒருபடி மேலாக, தொலைக்காட்சிப் பெட்டி உபயோகத்திலில்லை என்பதை உணர்ந்தால், மின்சாரத்தை டிவிக்கு மட்டுமல்ல, டிவிடி பிளேயருக்கும் சேர்த்து நிறுத்திவிடும். இதன் விலை சுமார் இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். ஆனால், இது நம் மின் கட்டணத்தை 5% முதல் 10% வரை குறைக்கிறது.
பெரும்பாலான வீடுகளில் தற்போது ஏசி உள்ளது. மின்கட்டணத்தில் கணிசமான பங்கு ஏசி உபயோகத்துக்கானதுதான். ஏசி அறையின் கதவைச் சரியாக மூடவில்லையென்றால் மின் இழப்பு அதிகமாக இருக்கும். அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்தக் கதவு மூடும் விஷயம் பற்றிக் கேட்கவே வேண்டாம். வெறும் 200 ரூபாய் பெறுமானமுள்ள இந்தச் சாதனம் தானாக மூடி, இந்தப் பிரச்சினையை முற்றிலும் களையும். இதன் மூலம் 10% முதல் 20% வரை மின்கட்டணத்தைக் குறைக்கலாம்.
தண்ணீரைச் சூடாக்க, மின் உற்பத்திசெய்ய சூரிய ஒளியைப் பயன்படுத்துவதன் மூலம் கணிசமான அளவு மின்கட்டணத்தைக் குறைக்கலாம். சூரியனிலிருந்து வெப்ப ஆற்றலைப் பெற இரண்டு வகைத் தகடுகள் உள்ளன. ஒன்று குழாய் வடிவில் இருக்கும், இன்னொன்று தட்டையாக இருக்கும். இது பெரும்பாலும் தண்ணீரைச் சூடாக்கப் பயன்படுத்தப்படுகிறது. குளிர்பிரதேசங்களில் இது வீட்டை வெதுவெதுப்பாக்கவும் பயன்படுகிறது.
சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற, சூரியத் தகடுகள் (Solar photovoltaics, solar PV) தகடுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. சூரியத் தகடுகள், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன. அரசு மானியமளித்தாலும் இது கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயம்தான். ஆனால் வீட்டுக் கட்டுமானச் செலவிலேயே இதைச் சேர்த்தோம் என்றால், வாழ்நாள் முழுவதும் மின்கட்டணம் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கலாம்.
இந்தக் கருவியின் மூலம் நம் வீட்டில் அதிகமாக மின்சாரத்தை உபயோகிக்கும் கருவிகளை இனங்கண்டு, அதற்கு ஏற்றது போல் நம் உபயோகத்தை மாற்றி அமைக்கலாம். எக்கோ ஸ்மார்ட் சாக்கேட் அண்ட் ஆஃப் (Ego Smart Socket and App) மிகவும் திறன்மிக்கது. இது கம்பியில்லாத் தொழில்நுட்ப வசதி கொண்டது. இதில் உள்ள டைமர் (timer) வசதி கொண்டு உபயோகத்திலில்லாத உபகரணத்துக்கான மின்சாரத்தை நிறுத்தவும் முடியும் என்பதால் மேலே பார்த்த ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப்பை நாம் தவிர்க்கலாம். இதனுடன் சேர்த்து கூகுள்’ஸ் நெஸ்ட் (Google’s Nest), எனர்ஜி ஸ்டார் அப்பளையன்ஸ் ( Energy Star Appliances) ஆகியவற்றைப் பயன்படுத்தினால் மின்சேமிக்கும் திறன் இன்னும் மேம்படும்.
வெயில் காலங்களில், நம் வீட்டின் கூரைதான் மிகவும் வெப்பமுள்ளதாக இருக்கும். சிறிய விசிறியைப் போட்டால், அதிலிருந்து வெப்பக் காற்றுதான் கீழே இறங்கும் என்பதால், வேறு வழியின்றி நாம் ஏசியை உபயோகிக்க வேண்டியுள்ளது. இந்த வெப்பத்தின் காரணமாக ஏசியும் அதிகமாக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.
வெள்ளை வண்ணம், ஒளியையும், வெப்பத்தையும் பிரதிபலிக்கக்கூடியது என்ற கருத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தப் பசுமைக் கூரை. இது சூரிய ஒளியையும், வெப்பத்தையும் நம் வீட்டுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்புவதால், நம் வீட்டினுள் வெப்பம் வெகுவாகக் குறைகிறது. இதன் மூலம் நம் மின்கட்டணம் 10% முதல் 15% வரை குறைகிறது.
சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தைப் பகலில் பெறலாம். ஆனால் இரவில் என்ன செய்வது? அதற்குத்தான் இந்த பேட்டரி. இது பகலில் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும். சேமிக்கப்பட்டிருக்கும் இந்த மின்சாரத்தை நாம் இரவில் பயன்படுத்தலாம்.
அரசாங்கம் புவிவெப்பமடைதலைத் தவிர்க்கத் திட்டங்கள் போடலாம். ஆனால் நாமும் ஒத்துழைத்தால்தான் அது உண்மையில் சாத்தியப்படும். சிறுதுளி பெருவெள்ளம், நமது இந்த சிறு முயற்சி, நம் பணத்தை மட்டும் மிச்சப்படுத்தவில்லை, நம் புவியின் ஆயுளையும் அதிகரிக்கிறது.