

உலகின் பிரபலமான தத்துவங்களில் பவுத்தத்தின் பாதிப்பில் உருவான ஜப்பானிய ஜென் தத்துவமும் ஒன்று. இந்தத் தத்துவம் வெறுமையில் ஆறுதலையும் குறைபாடுகளில் அழகையும் எளிமையில் நேர்த்தியையும் தேடுவதற்குக் கற்றுத் தருகிறது. ஜென் தத்துவத்தின் இந்தக் கொள்கைகளையெல்லாம் வீட்டின் உள் அலங்கார வடிவமைப்புக்குப் பயன்படுத்தும்போது, அது வீட்டையே தியானக்கூடமாக மாற்றிவிடும்.
இந்த ஜென் வீட்டு அலங்காரத்தை இப்போது உலக அளவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அவசரகதியான வாழ்க்கைமுறையில் சிக்கிக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை, வீட்டில் நுழைந்தவுடன் மன அமைதியைத் தேடுவதால் இந்த ஜென் அலங்காரத்தை நாடத் தொடங்கியிருக்கிறது.
ஜென் அலங்காரத்துக்கு என்று கடுமையான விதிகள் எல்லாம் கிடையாது. குறைவான பொருட்கள், எளிமை, தூய்மை என மூன்று அம்சங்கள் இந்த ஜென் அலங்காரத்தின் அடிப்படைகளாகச் செயல்படுகின்றன. வீட்டில் ஜென் அலங்காரத்தைப் பின்பற்ற நினைப்பவர்களுக்கான ஆலோசனைகள்...
வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமாக வெளிப்படைத்தன்மையை ஜென் தத்துவம் முன்வைக்கிறது. அதில் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்வது ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. அதனால், இயற்கையான வெளிச்சம் இருக்கும்படி வீட்டை வடிவமைக்க வேண்டியது அவசியம்.
உதாரணமாக, வரவேற்பறையில் கண்ணாடி பேனல்களான சுவர்களை அமைப்பது இயற்கையான வெளிச்சத்தை அறைக்குள் கொண்டுவரும். வீட்டின் ஜன்னல்கள், கதவுகளையும் கண்ணாடியில் அமைக்கலாம். வீட்டில் விளக்குகளை அமைக்கும்போதும் நேரடியான விளக்குகளைத் தவிர்த்துத் தரை விளக்குகள், மெழுவர்த்திகள் போன்ற மறைமுகமான வெளிச்சத்தைப் பயன்படுத்தலாம்.
ஜென் தத்துவங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இடத்தில் வசிப்பது அமைதியான சூழலில் வசிக்கும் உணர்வை ஏற்படுத்தும். இந்த அமைதியை உருவாக்க வீட்டில் மண்ணின் வண்ணங்கள் (earthy colors), நடுநிலை வண்ணங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். வெள்ளை, சாம்பல், இளஞ்சந்தனம், இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் இந்த அடிப்படைகளைக் கொண்டவை.
கவனச் சிதறல்களைத் தவிர்க்கும் பண்புகள் இந்த நிறங்களுக்கு உண்டு. சுவர்களின் வண்ணங்களில் மட்டும் இதைப் பயன்படுத்தாமல் அறைக்கலன்கள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் போன்றவற்றுக்கும் இந்த மண்ணின் வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
சுய விழிப்புணர்வு, மன அமைதி இரண்டையும் உருவாக்குவது ஜென் கலாச்சாரம். இந்தக் கொள்கையை மேடைப் படுக்கைகள் (Platform Beds) போன்ற அறைக்கலன்களைப் பயன்படுத்துவதனால் படுக்கையறையில் நிறுவ முடியும். ஜென் வடிவமைப்புகளில் மேடைப் படுக்கைகள் ஒரு பொதுவான அம்சம். இந்தப் படுக்கை தரைத்தளத்தில் வைக்கும்படி மரத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. படுக்கையறையில் தேவையற்ற பொருட்களை வைப்பது, ஆடம்பரமான அலங்காரம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
வீட்டில் நீராலான அமைப்பு ஒன்றை நிறுவலாம். வீட்டுக்குள் ஓடும் நீரின் சத்தம் கேட்பது ஒருவித மென்மையான இசையை உருவாக்கும். இந்த ஓடும் நீரின் இசை மனதை அமைதிப்படுத்தும். ஒருவேளை, வீட்டின் மத்தியில் நீராலான அமைப்பை உருவாக்க முடியவில்லையென்றால், மின்சாரத்தில் இயங்கும் சிறிய உட்புற நீருற்றுகள் அமைக்கலாம். வரவேற்பறை, முற்றம் போன்ற இடங்களில் இந்த நீருற்றை அமைக்கலாம்.
எளிமையான வாழ்க்கையே ஜென் தத்துவத்தின் முக்கியக் கோட்பாடு. தேவையற்ற பொருட்கள் அனைத்தையும் அகற்றிவிடுவது வீட்டில் எதிர்மறையான இடங்கள் உருவாவதைத் தடுக்கும். தேவையில்லாத பொருட்கள் இடம்பெறாமல் இருக்கும் வீட்டின் அழகியல் அம்சம் அதிகரிக்கும். ‘மினிமலிசம்’ என்னும் இந்த உச்சபட்ச எளிமைக் கோட்பாட்டை வீட்டில் நிறுவுவதற்கு வீட்டில் அடைந்துகிடக்கும் தேவையற்ற பொருட்களைக் களைய வேண்டியது அவசியம்.
பயன்படுத்தாமல் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைத் தேவையிருப்பவர்களுக்குக் கொடுத்துவிடலாம். எப்போதாவது தேவைப்படும் மற்ற பொருட்களைச் சேமிப்புக்கலன்களில் எடுத்து அடுக்கிவைத்துவிடலாம். இதனால், தேவையற்ற பொருட்கள் வீட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதைத் தவிர்க்கலாம். அறைக்கலன்களைப் பொறுத்தவரையில், எளிமையான, சமகால வடிவமைப்பில் மென்மையான வண்ணங்களில் தேர்ந்தெடுக்கலாம்.
இயற்கையுடன் இணைந்து வாழ்வது ஜென் தத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது. அதனால், வீட்டுக்குள் இந்த ஜென் கொள்கையைக் கொண்டுவருவதற்குச் செடிகள், மரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மணல், கூழாங்கற்கள், மென்பாறைகள், மரம், மூங்கில் போன்றவற்றையும் வீட்டுக்குள் கொண்டுவரலாம். சமையலறை, ஜன்னலோரம் போன்றவற்றையும் செடிகள் வளர்க்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அம்சங்கள் வீட்டில் இயற்கையின் மனம் எப்போதும் வீசுவதற்கு உதவும்.