

உலகின் பாரம்பரிய நகரமாக இந்தியாவின் அகமதாபாத் இரு வாரங்களுக்கு முன்பு யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம் என்னும் பெருமை அகமதாபாத்துக்குச் சொந்தமாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக அளவில் பாரம்பரிய நகரம் யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதுவரை 14 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
1995-ல் முதன்முதலாக நார்வேயின் பெர்ஜன் நகரம் யுனெஸ்கோ பாரம்பரிய நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகு போர்ச்சுகலின் எவோரா தேர்ந்தெடுக்கப்பட்டது. ரஷ்யா, ஸ்பெயின், மெக்சிகோ, பெரு, கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நகரங்கள் அடுத்த கட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அகமதாபாத் கி.பி.15-ம் நூற்றாண்டின் முகலாய மன்னர் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இந்த நகரத்தைத் தன் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். நகர் முழுவதும் மதில்கள் சூழ உருவாக்கப்பட்டது. இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது இந்த நகரம். மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி, மும்பை ஆகிய நகரங்களும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. அகமதாபாத்துக்கு ஆதரவாகத் துருக்கி, லெபனான், கியூபா, போலந்து உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.
பாரம்பரிய நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட முக்கியமான காரணம் இங்குள்ள நூற்றாண்டுப் பழமையான கட்டிடங்கள். அகமதாபாத் மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது.
அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது. ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. இதேபோல் சென்னையின் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களையும் அடையாளம் கண்டு பாதுகாக்க சென்னை மாநகராட்சியும் முன்வர வேண்டும்.