Last Updated : 28 Jan, 2017 08:31 AM

 

Published : 28 Jan 2017 08:31 AM
Last Updated : 28 Jan 2017 08:31 AM

சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா பசுமை வீடுகள்?

இந்தியாவில் வளர்ந்துவரும் துறையில் ஒன்று கட்டுமானத் துறை. கட்டுமானத்தை நம்பி வாழ்பவர்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷத்தையே தரும். ஆனாலும் கட்டுமானத் துறையின் வளர்ச்சி இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல தீங்குகளை விளைவிக்கிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறது. இதைக் கட்டுமானத் துறையினரும் வீடு வாங்க நினைப்போரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறை புவி வெப்பமயமாதலை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஏனெனில் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது சுற்றுச்சூழலை அது பெரிய அளவுக்குப் பாதித்துவிடுகிறது. கட்டிடங்களிலிருந்து வெளியேறும் பசுமை மாறா வாயுக்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. எனவே, வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதும் அவசியம், சுற்றுச்சூழலைப் பேண வேண்டும் என்பதும் அவசியம் என்பதை மறுக்க முடியாது. கட்டுமானப் பணிகளின் போது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய சில நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே பசுமை வீடுகள் என்னும் கருத்தாக்கமும் உருவாக்கமும் நம்மிடையே எழுந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் பயன்பாடு அடுத்த தலைமுறையினருக்கு ஆபத்தாக அமைந்துவிடலாகாது. எனவே கட்டுமானப் பொருள்களின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பசுமை வீடுகள் அல்லது சுற்றுச்சூழலுக்குகந்த வீடுகள் எப்படிச் சொன்னாலும் இரண்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பைப் பெருமளவில் குறைக்கக்கூடியது. பசுமை வீடுகளால் இயல்பான சுற்றுச்சூழல் பெருமளவில் பாழாக வாய்ப்பில்லை. நமது நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏதுவான மரபான வசிப்பிடங்களில் நாம் வாழ்ந்தால் நமது வாழ்வின் தரத்தை அது மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பசுமை வீடுகளின் உருவாக்கத்துக்கு அதிகப்படியான ஆற்றல் தேவையில்லை.

சுற்றுச்சூழலுக்குகந்த கட்டுமானங்களுக்கு, அதிக அளவில் நீர் தேவையில்லை. கட்டுமானப் பொருள்களின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே இயற்கைக்கு எதிரான நடவடிக்கை என்பது இந்தக் கட்டிடங்கள் விஷயத்தில் சாத்தியமில்லை. இப்படியான கட்டுமானத்தின் வழி உருவாக்கப்பட்ட வீட்டில் குடியேறினால், நல்ல காற்றும் போதுமான வெளிச்சமும் கிடைக்கும். வீட்டுக்குள் அதிகமான வெப்பம் உருவாகாமல் பசுமை வீடுகள் தவிர்க்கும். பசுமை வீட்டைக் கட்டினால் கட்டுமானச் செலவும் மிகக் குறைவே. ஏனெனில் இந்தக் கட்டுமானங்களுக்கு குறைவான அளவிலேயே கட்டுமானப் பொருள்கள் தேவைப்படும்; ஏற்கனவே சொன்னதுபோல் நீரையும் ஆற்றலையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இது வேண்டிநிற்கும்.

இத்தனை அனுகூலங்கள் இருந்தும் இன்னும் இந்தியாவில் பசுமை வீடுகள் பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லையே என்று தோன்றும். அதற்குக் காரணம் பசுமை வீடுகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் பலரைச் சென்றடையவில்லை. அந்த விழிப்புணர்வு கிடைத்த சிலர்கூட அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாத போக்கு இன்றும் நிலவுகிறது. இதனால் தான் இந்தியாவில் பசுமை வீடுகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படவில்லை. சிலர் இந்த வீடுகளை உருவாக்கச் செலவு பிடிக்கும் என்று எண்ணுகிறார்கள். கட்டுமான நிறுவனங்களுக்கே கூட இந்த எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணம் அடிப்படையில்லாதது. அதே நேரத்தில் பசுமை வீடுகளுக்கான தேவை இந்தியாவில் இருப்பதையும் கட்டுமான நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. ஆகவே, அவை விதிமுறைகளை முறையாகப் பேணாமலேயே பசுமை வீடுகள் என்னும் பெயரில் குடியிருப்புகளை விற்கின்றன.

கட்டிட வரைபடத்தில் தொடங்கி வாடிக்கையாளர் குடிபுகுவதுவரை பல்வேறு விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி உருவாக்கப்படுபவையே பசுமை வீடுகள். தங்களுக்கு வசதிப்பட்ட சில விதிமுறைகளை மட்டும் பின்பற்றிவிட்டுப் பசுமை வீடு என்று சொல்வது சரியல்ல. அப்படியென்றால் உண்மையில் பசுமை வீட்டை எப்படி உருவாக்க வேண்டும்?

பசுமை வீட்டுக்குச் சென்றுவர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டும். வீட்டில் பொருத்தப்படும் விளக்குகள் அனைத்தும் ஆற்றல்சேமிப்பு கொண்டவையாக இருக்க வேண்டும். கட்டுமானத்தின் போது பயன்படுத்தப்படும் நீரின் தேவை வரையறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் சூரிய சக்தியில் இயங்க வேண்டும்; மழைநீரை முறையாகச் சேமிக்க வேண்டும். அந்த சேகரிப்பு அமைப்பை முறையாகப் பராமரிக்கவும் வேண்டும்.

வீட்டின் பயன்பாட்டுக்குப் பின்னரான கழிவுநீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல் வேண்டும். இயற்கையான முறையில் வீட்டைக் குளுமைப்படுத்த வேண்டுமே ஒழிய குளிர்சாதன வசதி போன்றவற்றைப் பொருத்தக் கூடாது. திறந்தவெளியும் பசுமையான சூழலும் பேணப்பட்டிருக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கட்டினால் மட்டுமே அது பசுமை வீடு என்பதை மறந்துவிடாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x