புது வீட்டுக்குக் குடி போறீங்களா?
உள்ளமெல்லாம் பூத்துக் குலுங்கும் இல்லமெனும் கனவு நனவாகும்போது அதில் கிடைக்கும் இன்பத்துக்கு ஈடு இணை இல்லை. வீட்டின் பணிகள் எப்போது நிறைவடையும் புது வீட்டுக்குக் குடிபோகலாம் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டேதான் இருப்பார்கள் குடும்பத்தினர். ஆகவே வீட்டுப் பணிகள் நிறைவடைந்த உடனேயே அங்கே சென்று குடியேற வேண்டும் என்ற ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது இயல்புதான். ஆனால் புதுவீட்டில் குடிபுகுவதற்கு முன்னர் அந்த வீட்டில் குடிபுகுவதற்கு ஏற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் வீட்டில் குடிபுகுந்த பின்னர் அநாவசிய அலைக்கழிப்புகள் ஏற்பட்டுவிடும். ஆகவே அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு வீட்டில் குடிபுகுவதற்கு முன்னால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பட்டியலிட்டு வைத்துக்கொண்டு அவற்றைச் சரிபாருங்கள்.
நீங்களே தகுந்த தொழிலாளர் களைக் கொண்டு வீட்டைக் கட்டினாலும் சரி, ஒப்பந்ததாரர் மூலம் கட்டினாலும் சரி, அடுக்குமாடி வீட்டை விலைக்கு வாங்கினாலும் சரி எப்படியிருந்த போதும், வீட்டில் குடிபுகுவதற்கு முன்னர் அவற்றைச் சரிபார்ப்பது அவசியம். ஒரு வீட்டின் அடிப்படைத் தேவைகள் என்று பார்த்தால் குடிநீர் வசதி, மின்சார வசதி, பாதுகாப்பு ஆகியவையே பிரதானமானவை. இவை தொடர்பான விஷயங்களைச் சரிபார்க்கத் தொடங்கினாலே ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்துவிடலாம்.
முதலில் குடிநீர் வசதி என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். குடிநீர் வசதி என்று சொல்லும்போது அனைத்துப் பயன்பாட்டுக்குமான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும். குளியலறை, சமையலறை போன்ற அறைகளில் தேவையான குழாய்கள் அமைகப்பட்டுள்ளனவா, அவற்றுக்கான இணைப்புகளில் நீர் வரத்து ஒழுங்காக இருக்கின்றதா, நீர் வரும் குழாய்களில் கசிவு ஏதேனும் உள்ளதா போன்ற விஷயங்களைச் சோதித்துக்கொள்ள வேண்டும்.
தனி வீடு என்றால் வீட்டின் மேலே உள்ள நீர்த் தொட்டியில் உள்ள இணைப்புக் குழாய்களில் அவசியமான வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும்கூட சோதித்துக்கொள்வது நல்லது. அடுக்குமாடி வீடுகளில் உங்களது வீட்டுக்கான நீர்த் தொட்டிக்கும் உங்கள் இல்லத்துக்குமான இணைப்புகளைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
குளியலறையில் கைகழுவுதல், முகம் கழுவுதல் பல் துலக்குதல் போன்ற காரணங்களுக்கான ஒரு வாஷ் பேசின் அமைப்பது வழக்கம். உங்களது குளியலறை மிகவும் சிறியதாக இருந்தால் அது அமைக்கப்படாமல் இருக்கலாம். அல்லது வாஷ் பேசின் அமைக்கப்பட்டும் அதனருகே கைதுடைக்க துண்டு போடுவதற்கான வளையம் அமைக்கப்படாமல் இருக்கலாம். குளியலறையில் உடைகளைப் போடுவதற்கு எந்த வசதியும் செய்யப்படாமல் இருக்கலாம்.
இதைப் போன்ற சிறிய விஷயங்களைக் கவனித்துப் பார்த்துச் சரிசெய்துவிட வேண்டும். சிறிய விஷயம் தானே என நினைத்து மெத்தனமாக இருந்துவிட்டு, அவற்றை எல்லாம் சரிபார்க்காமல் வீட்டில் குடியேறிவிட்டால் ஒவ்வொன்றும் பெரிய தலைவலியாக மாறிவிடும்.
ஆகவே வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் குழாய்களையும் தனித்தனியாகத் திறந்துபார்த்து, அவை முறையாகச் செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை அறிந்துகொள்வது அவசியம். ஏதேனும் சிறிய பிரச்சினை தென்பட்டால் சோம்பலின்றி அதை உடனே களைவதற்கான நடவடிக்கையை எடுத்துவிட வேண்டும். சமையலறையில் சமைப்பதற்குத் தேவையான நீரை வழங்குவதற்கான குழாய்களும், சமையல் பாத்திரங்களைக் கழுவுவதற்கான கழுவுதொட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் குழாய்களும் நன்றாகச் செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
வீட்டின் பணிகள் நடைபெறும்போதே வீட்டின் எந்த இடத்தில் சலவை இயந்திரத்தைப் பராமரிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்திருப்போம். அந்த இடத்தில் சலவை இயந்திரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களில் நீர் வரத்தைச் சோதித்துக்கொள்ள வேண்டும். சலவை இயந்திரத்துக்கு நீர் வழங்கும் குழாயும், இயந்திரத்திலிருந்து நீரை வெளியேற்றும் குழாயும் முறையாகச் செயல்பட்டால்தான் சலவை இயந்திரம் முறையாக வேலை செய்யும்.
மின்சார வசதியைப் பொறுத்தவரையில், அத்தனை அறைகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள், மின் விசிறிகள் போன்றவை ஒழுங்காகச் செயல்படுகின்றனவா என்பதைத் தனித்தனியாகச் சோதித்தறிய வேண்டும். வீட்டின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள அழைப்பு மணிக்கான கட்டுப்பாட்டு சுவிட்சு எது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுப்பாட்டு சுவிட்சு எது என்பதை வீட்டின் மின்சாரப் பணிகளை மேற்கொண்ட தொழிலாளர்களே அறிவார்கள். அவர்களிடம் விசாரித்து அந்தக் கட்டுப்பாட்டு சுவிட்சு எது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதை எப்போதும் ஆன் செய்தே வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அழைப்பு மணியை யாராவது அழுத்திக்கொண்டேயிருந்தாலும் மணி ஒலிக்காது.
இதைப் போலவே வீட்டின் கதவுகளில் அவசியமான கைப்பிடிகளும், பூட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் சோதித்துக்கொள்ள வேண்டும். கதவுகள் சரியாக நிலையுடன் பொருந்தியிருக்கின்றனவா முறையாகப் பூட்டுகின்றனவா போன்ற விஷயங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படி அனைத்து விஷயங்களையும் முறையாகப் பரிசோதித்த பின்னர் வீட்டில் குடிபுகுந்தால் பல சிக்கல்களைத் தவிர்த்துவிட முடியும் என்பதால் இவற்றையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் உங்களது புதிய இல்லம் உங்களுக்கு இனிய இல்லமாகவும் மாறிவிடும்.
