

வீடு வாங்குவது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவு முக்கியமானது வீட்டுக்கு அறைக்கலன்கள் (Furnitures) வாங்குவது. ஏனெனில் உங்கள் வீட்டை அழகாக்க அறைக்கலன்களின் துணை அவசியம் தேவை. வீட்டின் வரவேற்பறையிலுள்ள சோபாவாக இருக்கட்டும். சுவரின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள பூவைக்கும் சிறு நாற்காலியாக இருக்கட்டும் இவை எல்லாம் சேர்ந்துதான் வீடு வீடாக இருக்கும்.
இந்த அறைக்கலன்கள்தான் நமது வீட்டை வாழுமிடமாக மாற்றுகின்றன எனலாம். முன்பைவிட அறைக்கலன்கள் வாங்குவதில் இப்போது அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் வீட்டுக்குச் செலவழிப்பதைப் போல அறைக்கலன்களுக்கும் செலவிடும் கலாச்சாரம் இப்போது உள்ளது. இப்படிக் கணக்கு வழக்கில்லாமல் அறைக்கலன்களை வாங்கிப் போடுவதை விட்டுவிட்டு தேவையான அளவு வாங்கினால் பயனாகவும் இருக்கும் வீட்டுக்கும் அழகு சேர்க்கும். அதுபோல நாம் வாங்கும் பொருள்கள் தரமாகவும் இருக்க வேண்டுமென்பதிலும் கவனம் வேண்டும்.
அறைக்கலன்கள் வாங்கும்போது சில விஷயங்களில் கவனம்கொள்ள வேண்டும். உதாரணமாக சோபா வாங்குகிறோம் என்றால் மேலோட்டமாகப் பார்த்து வாங்கக் கூடாது. அதன் வண்ணப்பூச்சு எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றும் முற்றும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மரச் சக்கை ஏதும் நீட்டிக்கொண்டிருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆணிகள் ஏதும் சரிசெய்யப்படாமல் இருக்கிறதா எனவும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதுபோல சோபாக்களுக்கு மெத்தை வாங்கும்போது, அது வீட்டு வண்ணத்திற்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அது சரியாகத் தைக்கப்பட்டிருக்கிறதா எனவும் பார்த்துக்கொள்ள வேண்டும். பீரோ போன்ற இரும்புச் சாமான்களில் எந்த விதமான பிசிறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
உங்கள் வீட்டின் ஒவ்வோர் அறைக்கும் பொருத்தமான அறைக்கலன்களை வாங்கி வைத்தாலேயே போதுமானது. அறைக்கலன்களைப் பொருத்தவரை பயனும் அவசியம். அழகும் அவசியம்.