சினிமா வீடு: ஐஸ்வர்யா ராய் ஆடிய அக்பரின் தர்பார்

சினிமா வீடு: ஐஸ்வர்யா ராய் ஆடிய அக்பரின் தர்பார்
Updated on
2 min read

இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்று ஆக்ரா கோட்டை. முகலாயர் காலத்து முக்கியக் கட்டிடங்களுள் ஒன்றான இதைப் பற்றி 10-ம் நூற்றாண்டு வாக்கில்தான் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோதி, தன் ஆட்சிக் காலத்தில், 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் கோட்டையை அரண்மனையாக மாற்றி அதில் வசிக்கத் தொடங்கினார். ஆனால், இன்று நாம் பார்க்கும் ஆக்ரா கோட்டை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டப்பட்டதல்ல; காலகாலமாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. அக்பர் காலத்தில்தான் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மொழிகளைக் கடந்து பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற இந்திப் படம் ‘ஜோதா அக்பர்’. ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த இந்தப் படம் அக்பரின் வாழ்க்கைத் துணையான ஜோதா அக்பரைக் குறித்தது. இந்தப் படத்தின் பல காட்சிகள் ஆக்ரா கோட்டையில் படமாக்கப்பட்டன. அரண்மனையின் கிழக்குத் திசையின் மத்தியில் அமைந்திருக்கும் ‘திவான் ஐ ஆம்’ (பொது மண்டபம்) என்ற இடத்தில்தான் ‘ஜோதா அக்ப’ரில் வரும் அரசவைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

இதே இடத்தில்தான் 16 நூற்றாண்டுகளுக்கு முன்பு அக்பர் அமர்ந்திருந்து ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘முழுமதி அவளது முகமாகும்...’ என்ற பாடல் காட்சியும் இந்த ஆக்ரா கோட்டை வளாகத்தில் படமாக்கப்பட்டதுதான். 70 அடி உயரம் கொண்ட அரண்மனையின் மதில் சுவர்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

அர்ஜுன் நடித்து 1996-ல் வெளிவந்த ‘செங்கோட்டை’ என்னும் படமும் இங்குதான் படமாக்கப்பட்டிருக்கிறது. அஜித்துக்குத் தொடக்க காலத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்த ‘ஆசை’ திடைப்படத்தின் சில காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டன. இவை அல்லாமல் ‘ஜீன்ஸ்’, ‘தாண்டவம்’ போன்ற சில தமிழ்ப் படத்தின் காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஹாஜஹான், ஒளரங்கசீப் என்று 6 தலைமுறைகளைக் கண்ட பெருமையும் இதற்கு உண்டு. யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோட்டையின் கட்டிடங்கள் பலவிதமான கட்டிடக் கலை பாணியைப் பின்பற்றிக் கட்டப்பட்டவை. உதாரணமாக ஜஹாங்கீர் மாளிகை பாரசீக பாணிக் கட்டிடக் கலையால் உருவாக்கப்பட்டது. மற்ற மாளிகைகள் முகலாய பாணியில் உருவாக்கப்பட்டன. பல அம்சங்களைக் கொண்ட இந்த அரண்மனையில் சுவர், மாடம் , கற்தரை போன்ற இடங்களில் ஆங்காங்கே நீரூற்றுகள் காணப்படுகின்றன. அதிநவீன முறையில் உருவாக்கப்பட்ட இந்த நீரூற்று வெயில் காலங்களில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in