வீட்டு உபயோகப் பொருள்களுக்கு ஏஎம்சி சரியா?

வீட்டு உபயோகப் பொருள்களுக்கு ஏஎம்சி சரியா?
Updated on
1 min read

ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருள்களாக இருந்த வீ ட்டு உபயோகப் பொருள்கள் இன்று அத்தியாவசியத் தேவையாகிவிட்டன. உதாரணமாகச் சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி போன்றவை. அத்தியாவசியமாகிவிட்டதால் கடனில்கூட வாங்க நாம் தயாராக இருக்கிறோம். அப்படி வாங்கும் இந்தப் பொருள்களை நாம் பராமரிக்க வேண்டியது அவசியம். இந்தப் பொருள்களுக்கான வாரண்டி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிந்துவிடும். அதன் பிறகு இந்தப் பொருள்களை எப்படிப் பராமரிப்பது? அதற்காகத்தாம் ஏஎம்சி என்று சொல்லப்படும் ஆண்டுப் பராமரிப்புத் திட்டத்தைப் பல தனியார் சேவை நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. பலரும் இந்தத் திட்டத்தில் இப்போது சேர்கிறார்கள்.

ஏஎம்சி திட்டம்

ஆண்டுப் பராமரிப்புத் திட்டம் என்பது வாரண்டி முடிந்த வீட்டு உபயோகப் பொருள்களின் பராமரிப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொருளைத் தயாரித்த நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இந்த வசதியைச் செய்து தருகின்றன. ஒவ்வொரு ஆண்டுக்கும் குறிப்பிட்ட அளவு கட்டணத்தைச் செலுத்தி இந்தத் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

சில நிறுவனங்கள் 2, 3, 5 ஆண்டுகளுக்குச் சேர்த்துக் கட்டணம் வசூலித்து இந்தச் சேவையை வழங்குகின்றன. சரி ஏஎம்சி எடுத்துவிட்டால், எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பொருளின் செயல்பாட்டுப் பாகங்களுக்கு மட்டும்தான் சர்வீஸ் கிடைக்கும். அது என்னென்ன பாகங்கள் என்பதைப் பொருளைத் தயாரித்த நிறுவனமே பட்டியல் போட்டு வைத்திருக்கும்.

இந்தப் பாகங்கள் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். உதாரணமாகச் சலவை இயந்திரத்தைப் பொறுத்தவரை, அதில் உள்ள முக்கியப் பாகங்கள் பழுதடைந்தால், ஏஎம்சி மூலம் சர்வீஸ் பெறப்படும். ஆனால், அதன் மேல்பகுதி உடைந்துவிட்டால், அதை மாற்றித் தரமாட்டார்கள்.

கட்டணத்துக்கு ஏற்றபடி ஏஎம்சியும் வேறுபடும். வேலையாட்களுக்கு ஒரு கட்டணம், பொருள்களுக்குத் தனிக் கட்டணம், பொருள்களை வாங்கித் தந்தால், அதைப் பொருத்தித் தருவதற்கு ஒரு கட்டணம் எனப் பலவகையான திட்டங்களை வைத்திருக்கிறார்கள். இதில் நமக்கேற்றதை தேர்வு செய்து கொள்ளலாம். வீட்டு உபயோகப் பொருள்களை உற்பத்திச் செய்யும் நிறுவனங்கள், குறிப்பிட்ட வருடத்துக்கு மட்டும்தான் ஏஎம்சி போட வேண்டும் எனக் கட்டுப்பாடு வைத்துள்ளன.

தவிர, ஏஎம்சி சேவையை நிறுவனங்கள் நேரடியாக வழங்குவதில்லை. அந்த சேவைக்கு முகவர்களை நியமித்திருக்கும். அப்படி நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு இலக்குகள் இருக்கும். அதை அடைவதற்காகச் சில புறம்பான வேலைகளை அவர்கள் செய்யக் கூடும், அதை நாம்தான் கவனத்துடன் பார்த்துத் தெளிவுபெற வேண்டும். அதாவது லாபத்திற்காகத் தயாரிப்பு தேதி, மாடல் எண் ஆகியவற்றை மாற்றி எழுதி தந்துவிடக் கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in