Last Updated : 13 May, 2017 11:15 AM

 

Published : 13 May 2017 11:15 AM
Last Updated : 13 May 2017 11:15 AM

புன்னகைக்கும் மோனலிசாவின் வீடு

மோனலிசா புன்னகைக்கும் ஓவியத்தைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் அபூர்வம்தான். அந்த ஓவியத்தின் பிரதியையும் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்போம். அந்தப் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் இத்தாலியைச் சேர்ந்த லியானார்டோ டாவின்சி. இந்தப் புகழ்பெற்ற ஓவியத்தின் அசல் பிரதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியத்தில்தான் இருக்கிறது. இதைப் புன்னகைக்கும் மோனலிசாவின் இருப்பிடம் எனலாம். இந்த ஓவியம் மட்டுமல்லாமல் உலகின் பிரபலமான பல ஓவியங்களையும் சிற்பங்களையும் தன்னிடத்தில் கொண்டிருக்கிறது இந்த அருங்காட்சியகம். இது உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று.

தொடக்கத்தில் ஒரு கோட்டையாக எழுப்பப்பட்டிருந்தது இந்தக் கட்டிடம். 1546-ல் இதை அரண்மனையாக உருமாற்றியவர் மன்னர் முதலாம் பிரான்சிஸ். 1793-ல் மன்னன் பதினான்காம் லூயி தன் இருப்பிடத்தை வெர்செயிலெஸ் நகருக்கு மாற்றிவிட, லூவர் கலைக்கூடமானது. விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று இப்போதைய அதன் பரப்பு ஆறரை லட்சம் சதுர அடிக்கும் அதிகம்.

மோனலிசா ஓவியம்

இங்குள்ள ஓவியங்களின் பங்களிப்பில் மன்னர் நெப்போலியனுக்குப் பெரும் பங்கு உண்டு. எந்த நாட்டை வென்றாலும் அங்குள்ள கலைப் படைப்புகளை இங்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார். அப்போது நெப்போலியன் மியூசியம் என்றே அழைக்கப்பட்ட இது வாட்டர்லூவில் நெப்போலியன் தோல்வி கண்ட பிறகு, மீண்டும் லூவர் மியூசியம் என்றே அழைக்கப்படத் தொடங்கியது.

இங்கிருக்கும் அத்தனை படைப்புகளில் சுற்றுலாப் பயணிகளின் மிக அதிக ஆர்வத்தைத் தூண்டுவது ஒரு படைப்புதான். 21-க்கு 30 அங்குலம் அளவில் அது குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் பாதுகாப்பாக இருக்கிறது. போதாக்குறைக்கு அங்கு எக்கச்சக்கமாகப் பாதுகாப்பு வீரர்களும் இருக்கிறார்கள். அது மோனலிசா ஓவியம்.

லூவரின் நுழைவாயிலே அட்டகாசம். ஒரு பிரமிடு வடிவில் இருக்கிறது (டான் ப்ரவுன் எழுதிய பெரும் சர்ச்சைக்கு உள்ளான ‘டா வின்ஸி கோடு’ புதினத்தைப் படித்தவர்களுக்கு இந்த மியூசியம் இன்னும் சிறப்பானது. அந்தக் கதை தொடங்குவதும், முடிவதும் இங்குதான். ஏசுநாதர் மணமானவர் என்றும் அவர்களுக்கு மகதலின் என்ற மகள் உண்டு என்றும் கூறும் இந்த நூல் மகதலினின் கல்லறை லூவர் மியூசியப் பரப்பில்தான் உள்ளது என்கிறது).

ஐ.எம்.பெய் வடிவமைத்த பிரமிடு

1988-ல்தான் இந்த நவீன கண்ணாடி பிரமிடு எழுப்பப்பட்டது. என்றாலும் இன்று ஈஃபிள் டவர் போலவே லூவர் மியூசியத்தின் நுழைவாயிலும் பாரிஸ் நகரின் தனித்தன்மையைப் பறைசாற்றுகிறது.

பிரான்ஸில் உள்ள கலாச்சார அமைப்புக் கட்டிடங்களை எல்லாம் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்ற கருத்து கொண்டவர் அப்போதைய பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஃப்ராங்கோயிஸ் மிட்டராண்ட். ஐ.எம்.பெய் என்ற கட்டிடக்கலை நிபுணரைத் தேர்ந்தெடுத்து லூவர் மியூசிய நுழைவாயிலை வடிவமைக்கச் செய்தார்.

கட்டுமானத்தின்போது பல விமர்சனங்கள் எழுந்தன. தொன்மையான லூவர் மியூசியத்துக்கு நவீன கட்டுமான வடிவமைப்பு பொருந்தாது என்றனர் சிலர். எகிப்தை நினைவுபடுத்தும் பிரமிடு வடிவம் பிரான்ஸுக்கு எதற்கு? அதிலும் பிரமிடு என்பது சாவை நினைவுபடுத்தும் ஒன்றல்லாவா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர். சீன- அமெரிக்க வம்சாவளியில் வந்த ஒருவர் பிரான்ஸ் கலாச்சாரத்தை எப்படி உள்வாங்கிக் கொண்டு கட்டிடத்தை வடிவமைப்பார் என்றனர்.

லூவர் பிரமிடில் உள்ள கண்ணாடிகளின் எண்ணிக்கை சரியாக 666. இதுவும் எதிர்ப்பைக் கிளப்பியது. காரணம் கிறிஸ்தவ மதத்தில் இது சாத்தானின் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்காக இந்தப் புதிய பிரமிடுகளுக்குள்தான் நுழைய வேண்டும். உலக நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் குவிகிறார்கள். ஆனால் அருங்காட்சியத்தில் உள்ள அறிவிப்புகள் அத்தனையும் பிரெஞ்சு மொழியில் மட்டும்தான் இருக்கின்றன. ஒப்புக்குக்கூட அவர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தவில்லை.

மோனலிசா ஓவியம் சிறப்பாகத்தான் இருந்தது. மர்மப் புன்னகை காரணமாகவே பெரும் பிரபலம் அடைந்த ஓவியம். இந்த ஓவியத்தைப் பல கோணங்களிலிருந்து பயணிகள் பார்க்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் எங்கிருந்து பார்த்தாலும் மோன லிசா பார்வையாளரை நேரடியாகப் பார்ப்பதுபோலத் தோன்றுவதுதான்.

மோன லிசாவை விடச் சிறப்பானதாக வேறு பல ஓவியங்களைக் கருத முடிகிறது. ஏதோ நேற்றுதான் அவற்றை வரைந்ததுபோல காணப்படுகிற வண்ணங்களின் ஜாலம் மயக்க வைக்கிறது.

‘The raft of the Medusa’ ஓவியத்தின் அளவு அதிரவைக்கிறது. அகலம் கிட்டத்தட்ட ஏழு மீட்டர் இருக்கிறது. உயரம் அதைவிடக் கொஞ்சம் குறைவாக இருக்கும். மெடுசா என்று பெயரிடப்பட்ட கப்பல் மூழ்கியதும், அதிலிருந்த அத்தனைபேரும் இறந்ததும் அன்றைய பரபரப்புச் செய்திகள். தப்பித்த சிலர் சக மனிதர்களின் உடல்களைத் தின்று உயிர் தப்பினர்.

சிற்பங்களும் ஓவியங்களும்

சிற்பப் பகுதியும் உண்டு. ஓவியப் பகுதிக்குச் செல்லும் வழியிலேயே கூட சிற்பங்கள் உள்ளன. மைக்கேல் ஆஞ்சலோவின் ‘The dying slave’ குறிப்பிடத்தக்கது. அலெக்சாண்டரோஸ் கைவண்ணமான அஃப்ரோடைட், வீனஸ் என்ற பெயரில் மேலும் பிரபலமானது. இருகைகளும் வெட்டப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது இந்தச் சிற்பம். என்றாலும் அப்படியொரு நளினம், அழகு.

இங்குள்ள பல ஓவியங்கள் பிரான்ஸை ஆண்ட பல மன்னர்களுக்குச் சொந்தமானவை. வேறு பல ஓவியங்கள் வாடிகன் மற்றும் வெனிஸ் குடியரசோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் கொண்டுவரப்பட்டவை. டெனோன், ரிசெலூ, சுல்லி என்று மூன்று பிரிவுகளாக உள்ளது இந்த மியூசியம். ஒவ்வொன்றிலும் குறைந்தது 70 அறைகள். பைபிள் காட்சிகள் ஓவியங்களாகச் சொக்க வைக்கின்றன. ஒரே ஓவியத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதும், ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மையோடு காணப்படுவதும் பிரமிப்பை உண்டாக்குகிறது.

நெப்போலியன் பட்டாபிஷேகக் காட்சி ஓவியத்தில் காட்சி தரும் ஒவ்வொருவரும் ஒரு சலவைக்கல் சிலை போலவே காட்சி தருகிறார்கள். இதை வரைந்தவர் அந்த விழாவை நேரடியாகக் கண்ட ஓவியர் ஜெக்வஸ் லூயி டேவிட். யுகேன் டெலக்ரோயிக்ஸ் கைவண்ணமான ‘மக்களை வழிநடத்தும் சுதந்திர தேவியின்’ கையில் காணப்படும் பிரெஞ்சுக் கொடி அந்த நாட்டு மக்களுக்கு ஒரு தனி உற்சாகத்தை அளிக்கிறது.

குறைந்தது 35,000 கலைப் படைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றையும் பார்ப்பதற்கு இரண்டே நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டால்கூட முழுவதையும் ஒரே நாளில் கண்டு ரசிக்க முடியாது. அதனால் பெரும்பாலானவற்றைப் பார்க்கலாமல்தான் திரும்பி வருகிறார்கள் சுற்றுலாப் பயணிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x