

வீட்டின் அறைகளைப் பிரிப்பதற்குப் பல்வேறு வழிமுறைகளைத் தொடக்கத்திலிருந்து பின்பற்றி வருகிறோம். மரச் சட்டகங்களை வைத்து வீட்டை மறிப்பது முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்னும் சில வீடுகளில் சிமெண்ட் பலகைகளை வைத்து இப்போது அறைகளைப் பிரித்து வருகிறார்கள். இவை அல்லாமல் சில புதிய வழிமுறைகளில் அறைகளைப் பிரிக்கலாம். இந்தப் புதிய முறைகளைப் பற்றிய தொகுப்பு:
மூங்கில் தூண் அறைப் பிரிப்பான்
மூங்கில் இன்றைக்கு வீட்டு அலங்காரத்தில் புதிய இடம் வகித்துவருகிறது. மூங்கில் அறைக்கலன்களும் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல மூங்கில் தூண்களைப் பிரிக்க வேண்டிய இடத்தில் செங்குத்தாக அடுக்கலாம். தூண்கள் நடும் இடத்தில் கூழாங்கற்களை இட்டு நிரப்பலாம். இது அறையைப் பிரிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கும் அழகு சேர்க்கும்.
அலமாரி அறைப் பிரிப்பான்
அலமாரியை அறையைப் பிரிக்க வேண்டிய இடத்தில் வைத்தால் பொருள்களை அடுக்கி வைக்க மட்டுமல்லாது அறைப்பிரிப்பானாகவும் பயன்படும்.
கயிறு அறைப் பிரிப்பான்
தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது. இந்தக் கயிறு பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. கால் மிதி, அலங்காரப் பொருளாகவும் பயன்பட்டு வருகிறது. இந்தக் கயிறைத் திரைபோலப் பின்னி அறை பிரிப்பானாகப் பயன்படுத்தலாம்.
காகிதத் தட்டு அறைப் பிரிப்பான்
சீனாவில் உருவாக்கப்பட்ட நவீன அறைப்பிரிப்பான் வடிவம். சீனப் பந்து வடிவத்தை ஒத்தது. இதுவும் வீட்டுக்கு அழகான தோற்றத்தைத் தரும். ஆனால், எளிதில் கிழிபடக்கூடியதாக இருக்கும்.
புகைப்படச் சட்டக அறைப் பிரிப்பான்
புகைப்படங்களை அடுக்கி வைப்பதில் பல முறைகள் இப்போது உள்ளன. பழைய மரப் பிரிப்பான் போன்ற இதில் புகைப்படங்களை அடுக்கி வைக்கலாம்.
செடி அறைப் பிரிப்பான்
செடி, கொடிகளையும் அறைப் பிரிப்பான்களாகப் பயன்படுத்தலாம். வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய செடிகளை, கொடிகளை வைத்து அறையைப் பிரிக்கலாம். பிளாஸ்டிக் செடிகளிலும் அறையைப் பிரிக்கலாம்.
நவீனத் திரைப் பிரிப்பான்
பிளாஸ்டிக் சட்டகங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து திரை போல மாற்றி அறைப் பிரிப்பான்களாகப் பயன்படுத்தலாம். இது நவீன உள் அலங்காரத்தில் ஒரு முறையாகப் பயன் படுத்தப்படுகிறது.
பழைய பொருட்களில் அறைப் பிரிப்பான்
மேலை நாடுகளில் பயன்படுத்தப்படாத பொருள்களில் உதாரணமாக நம்பர் பிளேட்டை சங்கிலியால் ஒன்றுடன் இணைத்து அறைப்பிரிப்பானாகப் பயன்படுத்துகிறார்கள். அறையைப் பிரிப்பதில் இதுவும் ஒரு வழிமுறை.