வீட்டுக் கடன் தொகையை அதிகரிக்க என்ன வழி?

வீட்டுக் கடன் தொகையை அதிகரிக்க என்ன வழி?
Updated on
2 min read

சொந்த வீடு என்பது கடல் கடந்து இருக்கும் கனவு மாளிகை என வைத்துக்கொண்டால் அந்த மாளிகைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் படகு வீட்டுக் கடன் எனலாம். நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கத் துணிவோம். இதில் மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் வீட்டுக் கடன்தான் கைகொடுக்கும்.

சேமிப்புக்கே இடமில்லாத காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்தச் சூழலில் நாம் என்னதான் சேமித்தாலும்கூட அது வீடு வாங்கத் தேவையான தொகையை நமக்குக் கொடுத்துவிடாது. நம் சேமிப்பு ஆரம்பத் தொகைக்கு மட்டுமே பயன்படும். உதாரணமாகச் சிலர் தங்கள் சேமிப்பைக் கொண்டு மனையை மட்டும் வாங்குவார்கள். வீடு கட்ட வங்கிக் கடனைச் சார்ந்திருப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க இருப்பவர்கள் ஆரம்பத் தொகைக்குச் சேமிப்பைப் பயன்படுத்துவார்கள்.

வீட்டுக் கடனைப் பொறுத்தவரை நாம் கட்டப் போகும், வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகிதத் தொகையைக் கடனாகத் தருவார்கள். மீதித் தொகைக்கு நம் சேமிப்பு பயன்படும். இந்தத் தொகை உறுதியாக உங்கள் சேமிப்பாக இருந்தால் நலம். இதற்கும் கடன் வாங்க நேரிட்டால் கடும் சிரமத்துக்கு உள்ளாகிவிட நேரிடலாம். அவர்கள் தரும் தொகை எவ்வளவு இருக்கும் என்பது நமது திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது. குடும்பச் செலவு போக நம் மாத வருமானம் எவ்வளவு எனக் கணக்கிட்டு நமது திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியைக் கணக்கிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் நாம் திட்டமிட்ட தொகை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பார்ப்போம்.

வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடும் முன் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அதற்கு முன்பு வங்கிக் கடன் வாங்குவதற்கு உண்டான வழிமுறைகளைத் தெளிவுறக் கேட்டு அறிய வேண்டும். அதன் பிறகு வேறு எதாவது கடன் வாங்கி இருந்தால் அதை அடைத்துவிட வேண்டும். கார் லோன், தனிநபர் கடன் கட்டாமல் இருந்தால், அல்லது அந்த இ.எம்.ஐ. போய்க்கொண்டிருந்தால் அதை முழுமையாக அடைத்துவிட வேண்டும். தோராயமாக நம் சம்பளத்தில் ஒரு 50 சதவிகிதத் தொகையை உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனாக வங்கிகள் கணக்கிடும். இதில் உங்களுக்கு ஏற்கனவே கடன்கள் இருக்கும்பட்சத்தில் அது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகையிலிருந்து கழிக்கப்படும். அதனால் இம்மாதிரியான கடன்களை நாம் கட்டிவிட வேண்டும்.

இ.எம்.ஐ. காலத்தை நீட்டிக்கலாம்

இன்னொரு வழிமுறையில் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கவில்லையென்றால், திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனின் கால அளவை அதிகரிக்கலாம். அதாவது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை ரூ.10 ஆயிரம் எனில் உங்களுக்குக் குறைந்த அளவே கடன் கிடைக்கும். இதே ரூ.10 ஆயிரம் தொகையை நீங்கள் 20 ஆண்டுகளில் செலுத்தினால் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்பக் கடன் தொகையும் கூடும். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும்.

இப்படி வீட்டுக் கடனைக் கட்டும் ஆண்டுகளை அதிகரிக்கும்போது, வட்டிக்குச் செல்லும் தொகை அதிகரிக்கும். இந்த வட்டிச் செலவைக் குறைக்க, வரும் ஆண்டுகளில் இடையிடையே மாத தவணை போகக் கூடுதல் தொகையைக் கட்டி, கடன் பாக்கியைக் குறைத்துக் கொள்ளலாம். கடன் வாங்கும்போது நம் வருமானம் மட்டுமல்லாது மனைவி/கணவன் வருமானத்தையும் காட்டலாம். அம்மா, அப்பா ஆகியோரின் வருமானத்தையும் காட்டலாம். அப்படிக் காண்பிக்கும்போது நம் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை அதிகரிக்கும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in