

சண்டிகர் நகருக்கு மற்ற இந்திய நகரங்களுக்கு இல்லாத சில சிறப்புகள் இருக்கின்றன. இந்த நகரம் பஞ்சாம், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்குத் தலைநகர். மட்டுமல்ல இந்தத் தலைநகரே ஒரு யூனியன் பிரதேசமாகவும் உள்ளது. இவை எல்லாவற்றையும் இந்த நகர் ஒரு உருவாக்கப்பட்ட நகரம். பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞரான லெ கொபூசியேவால் உருவாக்கப்பட்ட இந்த நகரம், நகரமைப்புக்கான முன்னுதாரணமாக இருந்துவருகிறது. இந்த சண்டிகர் நகரில் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையத்துக்கும் இத்தகைய சிறப்பு இருக்கிறது.
இந்த விமான நிலையத்தின் ஓடு பாதை சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் இருக்கிறது. ஆனால் சர்வதேச விமான நிலையமோ அமைந்திருப்பது பஞ்சாப் மாநிலத்தின் பகுதியில். வினோதமாக இருக்கிறது அல்லவா? மேலும் இந்த விமான நிலையம் கட்டுவதற்கான செலவை மத்திய அரசும், பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளும் பகிர்ந்துகொண்டுள்ளன. இந்த விமான நிலையம் கட்டி முடிக்க மொத்தம் ரூ.939 கோடி செலவு ஆனது. இதில் மத்திய அரசு 51 சதவீதமும் பஞ்சாபும் ஹரியானாவும் தலா 24.5 சதவீதமும் வழங்கியுள்ளன.
2015-ம் ஆண்டு இந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. சர்வதேச விமானச் சேவைக்கான அனுமதி இருந்தும் இந்த விமான நிலையத்தில் இன்னும் சர்வதேச விமானச் சேவை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையம் பஞ்சாம், ஹரியானா மட்டுமல்லாது அருகிலுள்ள இமாச்சலப்பிரதேச மாநிலப் பயணிகளுக்கும் பயன்படும் எனச் சொல்லப்படுகிறது.
இந்தக் கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்பட்டது மட்டுமல்ல; இயற்கை ஆற்றல் பயன்படுத்தும் பொருட்டு இது வடிவமைக்கப்பட்டது. இந்தக் காரணங்களுக்காக இந்த விமான நிலையக் கட்டுமானம் இந்தியக் கட்டுமானக் காங்கிரஸின் விருதையும் பெற்றது.
- குமார்