

வீடு கட்டுவதற்குப் பெரும்பாலானோர் நம்பியிருப்பது வங்கிக் கடனைத்தான். மேலும் மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகளும் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் நீண்ட கால அவகாசம்.
நாம் வாங்கும் கடனைப் பல மாதங்கள் தவணைகளாகத் திருப்பிச் செலுத்த முடியும். அதாவது வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது.
கடனைத் திருப்பிச் செலுத்த நீணட காலத் தவணைகள் இருந்தாலும், சில நிபந்தனைகள் உண்டு. அதாவது கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்குள் இ.எம்.ஐ. (மாதத் தவணை) முடிந்துவிடுமா என்பதை வங்கிகள் பார்க்கும். ஒருவேளை ஓய்வுபெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்கும்பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும்.
அதாவது அவரது ஓய்வூதியம் இ.எம்.ஐ. செலுத்தப் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் கடன் அளிக்க வங்கிகள் முன்வரும். அதே சமயம் கடன் பெறுபவர், 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கும். நமது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகை, உள்ளிட்ட அனைத்து வகைப் பிடித்தங்களும் போக, குறைந்தபட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை வங்கிகள் உறுதிசெய்கின்றன.
வட்டி வகைகள்
இதற்குக் காரணம் தவணை செலுத்துவதால் நமது அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது. அச்சமயம் நம்மால் தவணையைச் சரியாகச் செலுத்த முடியாமல் போகலாம்.
மேலும் வீட்டுக் கடனில் மூன்று வகையான வீட்டுக் கடன் வட்டிகள் உள்ளன. நிலையானது (Fixed), மாறுபடும் (Floating), கலவை (Mixed or Hybrid) ஆகியவைதான் அதன் வகைகள். கடன் வாங்கும்போது நிர்ணயிக்கப்படும் வட்டி, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு மாறாமல் இருப்பதே நிலையான வட்டி விகிதம். அதன் பிறகு கடன் சந்தையின் வட்டிக்கு ஏற்பக் கடனின் வட்டியும் மாறும்.
மாறுபடும் வட்டி என்றால், கடன் சந்தையின் வட்டி விகித ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மாறும். முழு காலத்துக்கும் ஒரே அளவில் தவணை இருக்காது. சிறிது கூடலாம், குறையலாம்.
வீட்டுக் கடனில் ஒரு பகுதி நிலையான வட்டி விகிதத்திலும், எஞ்சியவை மாறுபடும் வட்டி விகிதத்திலும் இருந்தால் அதுதான் கலவை வட்டி விகிதம். எந்த வட்டி விகிதத்தில் எவ்வளவு சதவிகிதம் இருக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இதில் உண்டு.
வழக்கமாக, மாறுபடும் வட்டி விகிதத்தைவிட நிலையான வட்டி விகிதம் 1 முதல் 2 சதவீதம் அதிகமாக இருக்கும். எனவே மாறுபடும் வட்டி விகிதமே லாபகரமானது. வட்டி விகிதம் உயரும்போது, குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை நிலையான வட்டி அதிகரிக்கும். நிலைமைக்குத் தகுந்தாற் போல வட்டியும் அதிகமாக வசூலிக்கப்படும்.
இது சரிப்பட்டு வராது என்று நினைப்பவர்கள் கலவை வட்டி விகிதத்தைத் தேர்வு செய்யலாம். நடைமுறையில் வீட்டுக் கடன் வாங்குவோரில் சுமார் 85 சதவீதம் பேர், மாறுபடும் வட்டி விகிதத்தைத்தான் தேர்வு செய்கிறார்கள் என்கிறார் வங்கியாளர் ஒருவர். ஒருவேளை நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்தால், அதன் பிறகு வட்டி விகிதம் குறைந்து மாறுபடும். வட்டி விகிதமும் குறைந்தால், நிலையான வட்டியில் இருந்து மாறுபடும் வட்டிக்கு மாறுவது பலன் அளிக்கும். வட்டி விகிதம் எதிர்காலத்தில் மிகவும் அதிகரிப்பது போன்ற சூழ்நிலை இருந்தால், அப்போது மாறுபடும் வட்டியில் இருந்து நிலையான வட்டிக்கு மாறுவதும் லாபமாக இருக்கும். இப்படி மாறுவதற்கு, பாக்கி உள்ள கடன் தொகையில் 1 முதல் 2 சதவீதம் அளவுக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்போது கடனுக்கான வட்டி விகிதமும் பொதுவாக அதிகரிக்கும். இதை வைத்து வட்டி விகிதத்தைத் தேர்வு செய்யலாம். பண வீக்க விகிதம் அதிகமாக இருந்தால், நிலையான வட்டியையும், குறைவாக இருந்தால், மாறுபடும் வட்டி விகிதத்தையும் தேர்வு செய்வதே நல்லது.