

சொந்த வீட்டைக் கட்டுவதில் உள்ள சிரமங்கள் அனைத்தையும் நாம் அறிவோம். ஆனால், வீட்டைக் கட்டி முடிப்பதுடன் நம் பணி நிறைவடைவதில்லை. அழகிய வண்ணம் பூச வேண்டும், அலங்காரமான அறைக்கலன்கள் வாங்க வேண்டும். சிகரம் வைத்தாற் போல அழகிய, ஆடம்பரமான விளக்குகள் அமைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சந்தைகளில் வந்து குவிந்திருக்கும் வித விதமான விளக்குகள் வீட்டு அலங்காரத்தைச் சுலபமாக்கி விட்டது. வீட்டின் உள் அலங்காரத்தில் ஒளியூட்டுதல் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்டது.
சரியான முறையில் ஒளியூட்டப்படும் வீடு உயிர்ப்புடன் நம்மை உற்சாகப்படுத்தும். வீட்டின் பிரதானமாகக் கருதும் அறைகளை அவற்றின் முக்கியத்துவத்துக்கேற்ப விளக்குகள் அமைப்பது நலம். பொதுவாக விளக்குகளை நான்கு வகைப்படுத்தலாம். ஒரே சீராக ஒளிபரப்பும் சுவர்களில் அல்லது உட்கூரைகளில் அமைக்கப்படும் விளக்குகள். இவை பெரும்பான்மையான இடங்களில் காணப்படும். சில பிரத்யேகமான தேவைகளுக்கு அமைக்கப்படும் விளக்குகள். உதாரணமாகப் படிப்பதற்காக அமைக்கப்படும் மேஜை விளக்குகள், சாப்பாட்டு மேஜையின் மீது அமைக்கப்படும் விளக்குகள் கண்களுக்கு அதிக சிரமம் அளிக்காமல் இதமாய்த் திகழும்.
வரவேற்பறை விளக்குகள்
சில அறைகளை அலங்கரிக்க, விருந்தினரின் கவனத்தைக் கவர அழகிய புகைப்படங்கள் அல்லது ஓவியங்களை அமைப்போம். அவற்றின் மீது கவனம் ஈர்த்து பேச்சைத் தொடங்க வசதியாக அவற்றின் மீதும் அமைக்கப்படும் விளக்குகள். இவை தவிர சில சமயங்களில் ஃபேரி லைட்ஸ் அல்லது வரிசையாகத் தொங்க விடப்படும் வித்தியாசமான அலங்கார விளக்குகள்.
வரவேற்பறையின் விளக்குகள் எப்போதும் சுவாரஸ்யமாய்த் திகழும் வண்ணம் அமைந்து விடும். கூடி அமர்ந்து பேச, தொலைக்காட்சி பார்க்க, விருந்தினரை உபசரிக்க என்று பல சமயங்களில் பல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் இவ்வறையில் மேல் விளக்குகள், கீழ் விளக்குகள், ஸ்பாட் லைட்கள் எனப் பலவற்றையும் கலந்து ரசனையான அமைப்பை உருவாக்கலாம். வரவேற்பறையைச் சிறப்பிக்க நிற்கும் நீண்ட விளக்குகளை அமைக்கலாம்.
சுடுமண் விளக்குகள்
பாரம்பரிய முறையில் வீட்டை அலங்கரித்திருந்தால் அதனோடு இயைந்து நிற்கும் வண்ணம் சுடுமண் விளக்குகள் அமைத்து மண்மணம் ஏற்படுத்தலாம். சாப்பாட்டு அறையில் சாப்பாட்டு மேஜையே பிரதானம் என்பதால் அவற்றின் மீது அழகிய நீண்ட சர விளக்கு அமைக்கலாம். அதிக ஒளி விரும்பினால் அதற்கேற்பவும், மெல்லிய ஒளி விரும்பினால் அதற்கேற்ற வகையில் குறைத்தும் கொள்ளும் வசதியுடன் அமைக்கலாம். அருகில் அலமாரி அல்லது அடுக்குப் பலகை இருந்தால் அவற்றின் உள்ளே உள்ள பீங்கான் பொருட்கள் அழகாய்த் தெரியும்படி உள்ளே விளக்குகள் அமைக்கலாம்.
சமையலறையில் மேடையின் மீது பொருட்கள் நன்கு தெரியும் படி விளக்குகள் அமைக்க வேண்டும். படுக்கையறையில், பாதையில் நன்கு வெளிச்சம் வரும்படியும், அதே நேரம் தேவையில்லையெனில் குறைத்துக் கொள்ளும் வண்ணம் அமைக்க வேண்டும். படிக்கட்டுகளுக்கு விளக்குகள் மிகவும் அத்தியாவசியமானது. சீரான ஒளி பரவும்படி விளக்குகள் பக்கவாட்டில் அமைக்கலாம். நாகரிக உலகில் ஒவ்வொரு படியின் அடியிலும் விளக்குகள் அமைத்து அழகூட்டுகின்றனர். ஏறும் இடத்திலும் முடிவிலும் விளக்குகளின் பொத்தான் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தோட்ட விளக்குகள்
வீட்டைச் சுற்றித் தோட்டம் அமைத்திருந்தோமானால் அங்கும் விளக்குகள் அமைக்கலாம். பாதுகாப்பானதா, அபாயமில்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பாதை ஓரங்களில், நடுநாயகமாக, மரங்களின் மீது ஒளி படரும் வண்ணம் என்று விதவிதமாய் அமைக்கலாம். இருண்ட மூலைகள், மேடு பள்ளமாக அமைந்து தடுக்கி விழுவதற்கு ஏதுவான இடங்களில் மெல்லிய ஒளி படரும் வண்ணம் மறைவாக விளக்குகள் அமைத்தால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.
விளக்குகள் அமைக்கும் முன் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட விளக்குகள், என்னென்ன விளக்குகள் எங்கெங்கெ வரப்போகின்றன என்பதை முன் கூட்டியே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல வீடு கட்டும்போதே வயரிங் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது வயரிங் வெளியே தெரியாமல் மறைவாக வருவதால் இவ்விஷயத்தில் கவனம் தேவை.
வீட்டுக்கு நீங்கள் விலையுயர்ந்த, அழகிய, ஆடம்பரமான பொருட்கள் வாங்கியிருந்தாலும் போதிய விளக்குகள் அமைக்காவிடில் அவை அனைத்தும் காட்சிப்பொருள் ஆகப்போவதில்லை. சரியான முறையில் அமைக்கப்படும் விளக்குகள் இருளைப் போக்குவன மட்டுமல்ல கலை வடிவங்கள். சுருங்கக்கூறின் ஒளிரும்போது மட்டும் அழகாய் இல்லாமல் அணைத்த பின்பும் அழகியலைப் பறைசாற்றும் வண்ணம் விளக்குகளை அமைத்திடுங்கள்.