

வீட்டின் தரைத்தளத்துக்கு இன்றைக்குப் பல விதமான பொருள்களைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக மார்பிள், டைல், கிரானைட் எனப் பலவிதமான பொருள்களைப் பயன்படுத்திவருகிறோம். இந்தப் பொருள்களைப் பயன்படுத்தித் தளமிடும் முறையே இன்றைக்குப் பரவலாக இருக்கிறது. ஆனால் சில பத்தாண்டுகள் முன்பு வரை ரெட் ஆக்ஸைடு போன்ற பொருள்களைப் பயன்படுத்திவந்தனர்.
இந்த ரெட் ஆக்ஸைடு பல வகைகளில் நமது இன்றைய டைல்களைப் பயன்பாடு உள்ளது. டைல்ஸ்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆனால் இதன் அதிகப் பளபளப்பு வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் இடறி விழக் காரணமாக இருக்கின்றன. மேலும் இந்த டைல் தரைகளில் நடப்பது. அமர்வது, படுப்பது உடலுக்கு ஆரோக்கியமானதும் அல்ல எனச் சொல்லப்படுகிறது. ஆனால் ரெட் ஆக்ஸைடு போன்ற தரைத் தளத் தொழில்நுட்பம் உடலுக்கு உகந்தது; வழுக்கி விழும் அளவுக்குப் பளபளப்பு கொண்டது அல்ல.
எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் கோடையை இந்த ஆண்டு நாம் எதிர்கொள்ளப்போகிறோம் என எல்லோரும் சொல்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் இது மாதிரியான கட்டுமானப் பொருள்களின் தேவை அவசியம். ரெட் ஆக்ஸைடு தரை குளிர்ச்சியாக இருக்கும். தரையில் படுத்தால் உடலில் உஷ்ணம் ஏறாது. வெப்ப நிலை அதிகமாக உள்ள நமது பகுதிகளுக்கு ரெட் ஆக்சைடு தரைகள் பொருத்தமானவை. சிவப்பு வண்ணத்தில் மட்டுமல்ல; பச்சை, நீலம், கறுப்பு எனப் பல வண்ணங்களில் ஆக்ஸைடு தரைகள் பாவலாம். ஆனால் பரவலாக சிவப்பு வண்ணமான ரெட் ஆக்ஸைடு தரைகளே பாவப்படுகின்றன.
ரெட் ஆக்சைடு தரையின் இன்னொரு சிறப்பு, காலப்போக்கில்தான் இதன் பளபளப்பு அதிகரிக்கும். மற்ற டைல் போன்ற தரைகள் காலப்போக்கில் பளபளப்பு போய், பழையதாகிவிடும். உடைந்தும் போய்விடும். மேலும் இன்றைக்குள் டைல்கள் சதுர அடிக்கு நடுத்தரமான டைல்களே ரூ.50, ரூ.55 ஆகின்றன. அந்த விதத்திலும் ரெட் ஆக்சைடு தரைகள் குறைந்த செலவே பிடிப்பவை.
ரெட் ஆக்ஸைடு இட மக்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை என்பதால் இந்தத் தொழில் ஈடுபட்டு வந்தவர்கள் வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டார்கள். அதனால் இந்தப் பணிக்குத் தொழிலாளர்கள் கிடைப்பது சிரமம். இருந்தபோதும் தற்போதும் ஆக்சைடு தரைக்கான மூலப்பொருட்கள் மலிவாகவே கிடைக்கின்றன. ஒரு சதுர அடிக்கு 13 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைதான் செலவாகும்.
மேலும் டைல், கிரானைட், மார்பிள் இடும்போது அளவுக்குத் தகுந்தாற்போல் உடைக்க வேண்டியிருக்கும். ஆனால் ரெட் ஆக்ஸைடில் அந்தப் பிரச்சினை இல்லை. மொத்தமாக சிமெண்ட் தளம் இடுவதுபோல்தான் ரெட் ஆக்ஸைடு தளம் இடுவதும். ஒரு பங்கு சிமிண்ட், மிருதுவான மணல் ஆகியவற்றுடன் ஒரு பங்கு ரெட் ஆக்சைடு சேர்த்து நன்றாகக் குழைக்க வேண்டும். இதைத் தரைத் தளத்தில் பூச வேண்டும். ஒரு பங்கு ஆக்சைடுக்கு மூன்று பங்கு சிமிண்ட் பயன்படுத்தினால் கருஞ்சிவப்பு நிறத்துடன் தரை இருக்கும். சிமெண்டை அதிகரிக்கும்போது வெளிர் சிவப்பாகும். வெள்ளை சிமெண்டையும் பயன்படுத்தலாம். ஆனால் வெள்ளை சிமெண்ட் பயன்படுத்தும்போது கவனம் தேவை. பூசிய பிறகு ஒரு துண்டைப் பயன்படுத்தி பாலீஷ் செய்வார்கள்.
முறையானபடி உருவாக்கப்படும் ரெட் ஆக்சைடு தரை உறுதியானதாக இருக்கும். சிறு விபத்தால் அவ்வளவு சீக்கிரம் உடையாது. நீண்ட காலம் பளபளப்பாகவும் இருக்கும். ரெட் ஆக்சைடு தரைகளைக் கொண்ட பழைய கட்டிடங்கள் ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் அதே பளபளப்புடன் இருப்பதை இன்றும் காணலாம். தற்போதும் ஆக்சைடு தரைக்கான மூலப்பொருட்களின் விலை மலிவுதான். அதனால் மற்ற டைல், மார்பிள் தரைகளைக் காட்டிலும் இதை உருவாக்கக் குறைவான தொகையே ஆகும்.
ஆக்ஸைடு தரை அமைத்த பிறகு, அடுத்த நாளிலிருந்து இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை தளத்தில் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், அதாவது, நான்கு நாள்களுக்கு தண்ணீர் தெளிக்கும் நேரம் தவிர மற்ற நேரம் யாரும் தளத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சிற்பி