ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் கவனிக்க வேண்டியவை

ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் கவனிக்க வேண்டியவை

Published on

கட்டிடத்துக்கு வலுச்சேர்ப்பது கான்கிரீட் கலவைதான். அடித்தளத்திலிருந்து கூரைவரை கட்டிடம் கான்கிரீட் கலவையின் பலத்தால்தான் நிற்கிறது. கட்டிடம் உறுதித்தன்மையோடு இருக்க இந்த கான்கிரீட் கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், இந்த அவசர உலகில் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க ரெடிமிக்ஸ் கான்கிரீட் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

ரெடிமிக்ஸ் கான்கிரீட் வாங்கும்போது, அதைத் தயாரித்த நிறுவனத்திடம் இருந்து கான்கிரீட் கலவை தயாரிக்கப்பட்ட விதம், அதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம், அளவு உள்ளிட்ட விவரங்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக மேல்தளம் அமைக்கும் பணியில், கம்பி கட்டும் பணி முடிந்த நிலையில் அதற்கு அடியில் முட்டுக் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலகைகளில் கான்கிரீட் கசியும் அளவுக்குத் துளைகள், இடைவெளிகள் இருக்கின்றனவா என்பதை ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் சரிபார்க்கவும். அப்படி இல்லாவிட்டால் கான்கிரீட் உறுதியாக இல்லாமல் போக வாய்ப்புண்டு.

ரெடிமிக்ஸ் கான்கிரீட் வந்தவுடன், கான்கிரீட் தரமாக உள்ளதா, எந்தப் பணிக்காக வாங்கப்படுகிறதோ அதற்கேற்றவாறு அது உறுதியாக இருக்கிறதா என்பதையும் உடனடியாகச் சரிபார்க்க வேண்டும். ஒருவேளை பயன்படுத்திவிட்டு, பின்னர் அதில் ஏதாவது குறைபாடு இருப்பது தெரியவந்தால், பல நிறுவனங்கள் அதற்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்கி விடுவார்கள். சரிபார்க்கும்போது, கான்கிரீட் கலவையின் திரவ நிலை என்ன, அதன் வெப்ப நிலை என்ன, ஜல்லிகளின் அளவு என்ன, நாம் சொன்ன கிரேடில் அது இருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

கான்கிரீட்டைக் கொட்டும் போது, அதில் தேவையற்ற கட்டிகள் எதுவும் உள்ளனவா என்பதையும் கண் கொட்டாமல் பார்க்க வேண்டும். ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் காற்றின் அளவு, அது உள்ளே தங்கும் அளவுக்கு இருந்தால், கட்டிடத்தில் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது நாளடைவில் கட்டிடத்தின் உறுதியைக் குலைத்துவிடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in