

காலையில் எழுந்தவுடன் பால்கனியில் நின்று வேடிக்கை பார்ப்பது மனதுக்குக் குளுமை தரும் விஷயம். அப்படியான பால்கனியில் கண்ணுக்கு குளிர்ச்சியான செடிகள் இருந்தால் எப்படி இருக்கும், மனதுக்கு மகிழ்ச்சி தரும் இல்லையா, நம் வீட்டுக்கும் பறவைகள் வந்து உணவருந்தி, சின்னக் கூடு கட்டி வாழ வேண்டுமா, அப்படியானால் ஓர் அழகான பால்கனித் தோட்டம் அமைப்போமா?
தோட்டம் என்றால் நிறைய இடம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொட்டியிலே தோரணம் அமைக்கலாம். மூலிகைச் செடிகள் அமைத்து அதன் கொடி வகைகளைப் படரவிடலாம்.
நம் வீட்டுக்குச் சமையலுக்குப் பயன்படுத்தும் வகையில் காய்கறிச் செடிகளை வளர்க்கலாம். இம்மாதிரிச் செடிகளை வளர்ப்பதற்கு உங்கள் வீட்டின் பழைய பிளாஸ்டிக் பாத்திரங்களையே கூடப் பயன்படுத்தலாம். இவை அல்லாது செடிகள் வளர்ப்பதற்கான பிரேத்யேகமான பைகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தலாம்.
என் வீட்டு பால்கனித் தோட்டத்தில் வெற்றிலையின் பங்கு அதிகம். கொடிகள் அருமையாய்ப் படர்ந்து ஒரு பசுமை வீடாய்க் காட்சி அளிக்க வெற்றிலைக் கொடி போதுமே இதை வளர்க்கத் தொட்டிகள் போதும்.
துளசி, ஆடாதொடை, தூதுவளை, அக்கிரகாரம், கற்றாழை, திருநீற்றூப்பச்சிலை,செம்பருத்தி,முறிகூட்டி என மூலிகைகளைக் கொண்ட தோட்டமே பால்கனியில் அமைக்கலாம். அதைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலாவது உண்டா?
கற்றாழை போன்றவை வளர்த்தால் அதன் பக்கக் கன்றுகள் ஏராளம் வரும் அது குமரி என்றும் அழைப்பர். ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு பயனுண்டு. செடிவளர்க்க இடம் ஒரு பிரச்சினையே இல்லை மனம் இருந்தால் போதும் பசுமையை நம்மைச் சுற்றி ஏற்படுத்தலாம்.