Last Updated : 22 Nov, 2014 03:55 PM

 

Published : 22 Nov 2014 03:55 PM
Last Updated : 22 Nov 2014 03:55 PM

எஸ்.சி. கான்கிரீட்டைத் தெரியுமா?

இன்று வானளாவிய கட்டிடங்கள் உயர்ந்து நிற்க வலுவான அஸ்திவாரம் மட்டும் காரணமல்ல; கான்கிரீட் கலவையும் முக்கியக் காரணம். ஒரு காலத்தில் கான்கிரீட் கலவை முழுவதும் மனித உழைப்பின் மூலமே உருவாக்கப்பட்டது. இன்று இயந்திரங்கள் அந்த வேலையைச் செய்கின்றன. அந்த வகையில் கட்டுமானத் துறையில் அறிமுகமானதுதான் ‘செல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்’. இதை எஸ்.சி.சி. கலவை என்று சுருக்கமாக அழைப்பதுண்டு. தமிழில் இதைத் தானமைவு கான்கிரீட் என்கிறார்கள்.

எப்படி வந்தது?

அதென்ன எஸ்.சி. கான்கிரீட்? இதில் அப்படி என்ன விசேக்ஷம் இருக்கிறது? இது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? கடந்த 10 ஆண்டுகளாகப் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள இந்த கான்கிரீட்டை முதன் முதலில் கண்டுபிடித்தது ஜப்பானியர்கள்தான். 1980-களில் இதனை ஜப்பானியர்கள் உருவாக்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதற்குக் காரணம், கட்டுமான ஊழியர்களின் பற்றாக்குறைதான். குறைந்த ஆட்களைக் கொண்டு வேலைகளை முடிப்பதற்காகக் கண்டுபிடித்ததுதான் இந்த எஸ்.சி.சி. கலவை. கட்டுமானப் பணியின்போது கம்பிக் கட்டுமானத்திற்குள் கான்கிரீட் சீராகப் பரவ வேண்டும். ஆனால், கான்கிரீட் கலவை அவ்வளவு சுலபத்தில் இறங்காது. இதற்காக ஆட்களை வைத்து நீண்ட கம்பிகளால் குத்திக் குத்தி கான்கிரீட்டைச் செலுத்துவார்கள். கட்டிடங்கள் கட்டும்போது இதைப் பலரும் பார்த்திருக்கலாம்.

விஷேச சேர்மானம்

இப்படி கான்கிரீட்டைப் பரவச் செய்வதற்கு ஆட்கள் அதிகம் தேவைப்பட்டனர். அதைக் குறைக்கும் வகையில் புதிய முறையை ஜப்பானியர்கள் கண்டுபிடித்தார்கள். கம்பியால் குத்திவிடத் தேவையில்லாத விதத்தில் கான்கிரீட் தானே ஓடிப் பரவும்படி மாற்றி அமைத்தார்கள். கான்கிரீட் கலவை எப்படிச் சீராக ஓடிப் பரவும் என்று சந்தேகம் ஏற்படலாம். அதற்காக வேதிப்பொருட்களும் இதர சேர்மானங்களும் இதில் கலக்கப்படுகின்றன. அதாவது பாலிகார்பாக்சிலேட் பாலிமர்கள் இந்தச் சீரான பாய்ச்சலுக்கு உதவுகின்றன.

கலவையில் பிசுபிசுப்புத் தன்மையை விரும்பிய அளவில் நிறுத்திக் கொள்ளவும் வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. தண்ணீருக்கும் சிமெண்டுக்குமான விகிதம் கான்கிரீட் பாய்ச்சலை உறுதிசெய்கிறது. இதில் பயன்படுத்தப்படும் ஜல்லிகளின் அளவு நுட்பமானதாக இருக்க வேண்டியது அவசியம். இப்படிக் கெட்டியான, அதேசமயம் தண்ணீர் பதத்தில் உலோக அச்சுக்களுக்குள் புகுந்து ஓடி, இறுகிக் கெட்டியாகி வடிவம் பெறுவதுதான் இந்தக் கலவையின் சிறப்பு. தளம் அமைக்க ஏற்ற கான்கிரீட்டாக இன்று இது பெயர் பெற்றிருக்கிறது.

பயன்கள் என்ன?

இந்த எஸ்.சி.சி. கலவையில் தண்ணீர் கசிந்து வெளியேறும் பிரச்சினையில்லை. கான்கிரீட் கலவை காய்ந்த பிறகு உதிரும் பிரச்சினையில்லை. மாறாகக் கலவை ஒன்றாக இணைந்து உறுதியாகும். வேலையும் விரைவில் முடியும். கான்கிரீட் கலவையில் காற்றுக் குமிழ்கள் ஏற்பட்டால், கட்டிடம் பாதிக்கப்படும். இதில் காற்றுக் குமிழ்கள் தங்காது. வேலை வெகு எளிதாக முடிந்துவிடும். குறைந்த நேரம் போதும். குறைவான ஆட்கள் போதும். இதனால் செலவுகள் குறையும்.

பொதுவாக கான்கிரீட்டை பம்ப் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எஸ்.சி. கான்கிரீட்டில் அந்தத் தொல்லையும் இல்லை. உயரத்திற்கு பம்ப் செய்யும் வேலையை வெகு எளிதாகச் செய்யலாம். அதுமட்டுமல்ல, பொதுவாக கான்கிரீட் கலவை இடும்போது கட்டிடத்தின் உறுதித் தன்மையைச் சோதிப்பதற்காக வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இதில் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவது இல்லை. எனவே இரைச்சலுக்கும் வேலை இல்லை. இதனால் ஒலி மாசும் கிடையாது. இப்படி நன்மைகள் பல ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டில் இருப்பதாகக் கூறுகின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.

செலவு என்ன?

உலகின் பல நாடுகளிலும் இந்த கான்கிரீட் கலவையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பெரிய கட்டுமான நிறுவனங்கள் இந்த கான்கிரீட் கலவையைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். இந்த கான்கிரீட் கலவையைப் பயன்படுத்த செலவு அதிகம். பயன்பாட்டைப் பொறுத்து வழக்கமான கான்கிரீட் கலவையைவிட இதில் செலவு அதிகமாகலாம். ஆனால், குறைந்த அளவு பணியாளர்கள், இறுதிக்கட்ட பணி, கடைசியாக மேற்கொள்ளப்படும் பழுது வேலைகளுக்கு ஆகும் செலவுகள் குறையும் வாய்ப்பும் இதில் உள்ளது. வேறு சில நன்மைகளைப் பார்த்தால், இதற்கு ஆகும் செலவு சிலருக்கு இரண்டாம்பட்சமாகத் தெரியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x