

அசோக் நகரில் என் உறவினருக்கு ஒன்றரை கிரவுண்டில் தனி வீடு இருந்தது. அதை நான்கு தளங்களாக மாற்றத் திட்டமிட்டு கட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டார். அதற்காகத் தனியே வளர்ச்சி ஒப்பந்தம் போட்டதும் நஷ்ட ஈடாகத் தவணை முறையில் தொகையைப் பெற்றுக் கொண்டிருப்பதும் வேறு விஷயம். ஆனால், உறவினருக்கு வீட்டை முழுக்க இடித்துத் தரைமட்டமானவுடன்தான் சந்தேகம் உதித்தது.
“சே… நான் மனையை மட்டும்தானே தந்தேன். அதன் அடிப்படையில்தானே நஷ்ட ஈடே கொடுக்கிறார்கள். அவர் இடித்து, கதவு, ஜன்னல் எல்லாம் கொண்டுபோய்விட்டாரே?” என்று அங்கலாய்த்தார்.
உறவினர் வீடு சின்னதுதான் மாடியும் கட்டவில்லை. நிறைய ஜன்னல்கள், கதவு அவ்வளவாக இல்லை. மேலும் அவருக்குக் கிடைக்கப் போகும் மொத்தத் தொகையுடன் ஒப்பிடும் போது, இவற்றுக்கு (ஜன்னல் முதலியன) மதிப்பு இல்லை. அவர் இப்போது தற்காலிகமாக வசிக்கிற தளத்தில் பயன்படுத்த முடியாது; ஒன்றரை ஆண்டு பொறுத்து, குடிபோகப் போகிற நவீன புதிய தளத்திலும் இவை அவசியமிருக்காது. பழைய பொருட்களை வைத்து அவர் என்ன வியாபாரமா செய்யப் போகிறார்? இருந்தாலும் உறவினரின் ஆற்றாமை தீரவில்லை. அவருடைய ஆதங்கத்தில் ஓரளவு அர்த்தம் இருக்கிறதென்று வேறு ஒரு நண்பர் விளக்கினார்.
நண்பருக்கு சாஸ்திரி நகரில் வீடு; உறவினர் போலவே, அரை கிரவுண்டை தளங்களாக மாற்ற ஒப்பந்தம் போட்டார்.
“நான் என்ன செய்தேன் தெரியுமா? சமையலறையை மாடுலர் கிச்சனாகப் பண்ணி சில வருடங்கள்தான் ஆகிறது. அந்த ஃபிரேம்களை முதலிலேயே தனியாக எடுத்துவைத்து, குடியிருக்கிற பிளாட்டில் உபயோகப்படுத்துகிறேன். சில படங்களை வைக்கப் பயன்படுகிறது” என்றார்.
ஜன்னல்கள், கதவுகள்?
“எங்கள் வீட்டு மாடியில் ஓர் அறை, கூடம் சமையல் அறை உள்ளன. இடிப்பதற்குச் சில வாரம் முன்பு நான் எங்கள் கட்டுநரிடம் சொல்லிவிட்டேன். வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி சிவப்பு மையால் குறித்து வைத்திருந்ததைப் பெற்றுக் கொண்டேன் என்று விவரித்தார்.
அதுபோல் நண்பர் தேர்ந்தெடுத்த இரண்டு கதவும் இரண்டு ஜன்னலும் அவர் தங்கை வீட்டுக்கு (தங்கையின் வீட்டின் ஒரு சில இடங்கள் புயலில் சேதமாகின) மிகச் சரியாகப் பொருந்தியிருந்ததாம்.
இதற்கென்று ஏதாவது விதிமுறைகள், சட்டம் போல் உள்ளதா?
“அது போல் இல்லை. எல்லாம் ஒரு புரிந்துணர்வுதான். இதுபோல் இடித்து, குவிகின்ற கல், சுண்ணாம்பு, மண் போன்றவற்றை எடுத்து, இடத்தைத் தூய்மையாக வைப்பதற்கென்று ஒப்பந்தக்காரர் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பணம் கொடுத்தாலும், இத்தகைய பழையப் பொருள்களை விற்றும் ஆதாயம் பெறுவார்கள்” என்று நியாயமாகப் பேசினார் அனுபவமுள்ள ஓர் ஒப்பந்தக்காரர்.
“மனை மட்டும்தான் என்று சரிக்குச் சரி பேசினால், சரி, நீங்களே இடித்து விட்டுக் கொடுங்கள் என்று சொல்லி விடுவோம். அதெல்லாம் தனி நபர்களால் செய்ய முடியாது” என்றார்.
ஒப்பந்தக்காரர் சொன்னது முற்றிலும் உண்மை. விட்டுக் கொடுப்பதிலும் அனுசரித்துப் போவதிலும்தான் வாழ்க்கை இருக்கிறது. தனி வீட்டை இடித்துத் தளமாக்குகிற செயல் மட்டும்தான் விதிவிலக்கா என்ன?
“மனை மட்டும்தான் என்று சரிக்குச் சரி பேசினால், சரி, நீங்களே இடித்து விட்டுக் கொடுங்கள் என்று சொல்லி விடுவோம். அதெல்லாம் தனி நபர்களால் செய்ய முடியாது” என்று
ஒப்பந்தக்காரர் சொன்னது முற்றிலும் உண்மை. விட்டுக் கொடுப்பதிலும் அனுசரித்துப் போவதிலும்தான் வாழ்க்கை இருக்கிறது.