Last Updated : 07 Jan, 2017 10:28 AM

 

Published : 07 Jan 2017 10:28 AM
Last Updated : 07 Jan 2017 10:28 AM

மண்ணிலிருந்து மண் கொண்டெழுப்புவோம்

ஆரோவில் அளவில் இல்லையெனினும், திருவண்ணாமலையிலும் கூட மாற்று வீடுகள், பல மேற்கத்திய மனிதர்களின் உருவாக்கத்தில் மேலெழுந்து கொண்டுதான் இருக்கின்றன. பத்து வருடங்களுக்கு முன் என் நண்பர் ஆனந் ஸ்கரியா பிஜூவை மாற்று வீடுகளுக்காகக் கனவு காண்பவனில் ஒருவர் என அறிமுகப்படுத்திய போதே அவருடனான என் உரையாடல் துவங்கியது. எதையொன்றையும் அதன் வழக்கத்திலிருந்து தூக்கி எறிபவனாக நான் பிஜூவை என் முதல் சந்திப்பிலேயே உணர ஆரம்பித்தேன்.

என் பைக்கில் உட்கார வைத்து நிலத்தைச் சுற்றிப் பார்க்க கூட்டிப்போன போதும் கட்டிடக் கலை என்பது வெறும் கட்டிடம் கட்டுதல் என்ற படைப்பூக்கமற்ற ஒரு தொழிலாகிவிட்டதை பிஜூ என் பின்னாலிருந்து பேசிக் கொண்டே வந்தது இப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. செவ்வக வடிவிலான எங்கள் கிணறு அவனைப் பரவசப்படுத்தியிருக்க வேண்டும். அதன் விளிம்பில் நின்று,

‘இக்கிணற்றை அப்படியே சரிபாதியாய் பிரித்து, கான்க்ரீட் போட்டு அதன்மேல் ஒரு மண் வீடு கட்ட முடியும்’ என்று காற்றில் கைவீசி அவர் விவரித்தது இன்றும் ஒரு நிறைவேறாத கனவுபோல என்னுள் தங்கியுள்ளது. நானறிந்து யாராலும் கற்பனையாகக்கூட யோசிக்க முடியாத சாத்தியம் இது என நினைத்துக் கொண்டேன்.

தன் சொந்த வாழ்விடம், குறைவான நண்பர்களுக்கான வீடுகள் என பிஜூவின் செயல்பாடுகளைத் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இன்றளவும் கருங்கற்கள் மீதான ஆச்சர்யமும், பெருங்காதலும் குறைந்தபாடில்லை. பூமிக்கு அடியிலேயும், மேலேயும் அது தனக்குதானே உருவாக்கிக் கொண்டிருக்கும் பல நூற்றாண்டுகள் கடந்த அடர்நிறம் என்னைப் பிரமிப்பூட்டுகிறது.

அதுபோல பிஜூவுக்கு மண். மண்ணில்கூட நிறம் பிரிப்போம். பிஜூவுக்கு அப்படியில்லை. அது எந்த வண்ணத்திலும், பூமியை மூடிக் கொண்டிருக்கும் மாய வித்தை செய்யும் உயிராகத்தான் பிஜூ மண்ணை மதிப்பிடுகிறார். கே.வி.ஜெயஸ்ரீ யின் கருங்கற்களாலான வீட்டின் ஆரம்பத்தில் பிஜூ எங்களோடுதான் இருந்தார். அதன் பின்னால் அவர் அகன்று போனது மண்ணில்லாத அதன் சுவர்களாயிருக்கலாமென இப்போது கணிக்கத் தோன்றுகிறது.

பெரும்பாக்கம் சாலையிலிருந்து பிரிந்து போகும் பண்டிதப்பட்டு சாலையில் பிஜூவின் சமீபத்திய வீட்டின் உருவாக்கம் அசாத்தியமானது. நம் வழமைகளின் மீது எழுப்பப்பட்ட சவால். ஒரு படைப்பாளிக்கு அப்படியான நிர்பந்தம் எப்போதுமே ஒரு இழப்பிலிருந்துதான் துவங்குகிறது. திருவண்ணாமலையில் தான் உருவாக்கிய ஒரு வீடு, பொருளாதார இழப்பின் பொருட்டு தன்னைவிட்டு அகன்றபோது பிஜூ இன்னொரு உருவாக்குதலுக்கு உடனே தாவுகிறார்.

ஒரு மண் வீடு பிறக்கிறது

நான்கடிக்கு ஒரு அடித்தளம் தோண்டப்படுகிறது. இப்போது கடக்கால் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் JCB தவிர்க்கப்படுகிறது. மனிதர்கள். எப்போதுமே மனிதர்கள் மட்டுமே படைப்பூக்கத்தின் ஆதூர சக்திகள். அவர்களைக் கொண்டே அந்தப் பள்ளம் தோண்டப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சணல் சாக்குப் பைகள் எடைபோட்டு ஐநூறுக்கும் மேல் வாங்கப்படுகிறது. நான்கு பெண் ஆண்களும் ஒரு ஆண் ஆளுமாய் செப்டிக் டேங்க்குக்கான குழி தோண்டி, மேலேறும் மண்ணைப் பைகளில் அடைக்கிறார்கள்.

பை நிறைய, நிறைய செப்டிக் டேங்க்கும் தயாராகிறது. மண் நிறைந்த மூட்டைகள் அடித்தளத்திற்கு மேல் பந்தடிக்கும் அதே மண் மூட்டைகள் மட்டுமே. புளிக்க வைக்கப்பட்டிருந்த செம்மண் அடுக்கப்பட்ட மூட்டைகளின் மேல் பூசப்படுகிறது. அது ஒரு அழகான சுவராகிறது. செம்மண் பூசப்பட்ட சுவரின் நிறத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதிக்கு செம்மண் அல்லாத மண் பூசப்படுகிறது. மண் மூட்டைகளின் முண்டு முடிச்சுகள் அப்படியே வெளியே தெரியும்படி விடப்படுகின்றன. அதிலேயே சமையலறை, குளியலறை.

அம்மண் சுவர் அதன் மேற்கூரையை அதுவே தீர்மானித்து, தன் செயற்பாட்டாளரிடம் கோருகிறது. ஒரு நல்ல கட்டிடக் கலைஞன் அதை ஒருபோதும் நிராகரிப்பதில்லை. இளம் மஞ்சள் நிற மூங்கில்களும், தென்னங்கீற்றுகளான மூடாப்புகளும் அவ்வீட்டை வேறொரு தளத்திற்கு நகர்த்துகின்றன.

இதோ நாங்கள் எல்லோருமே திருவண்ணாமலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. சிலர் அதன் உச்சியில் மின்னும் தீப ஒளிக்காக. சிலர் ஒவ்வொரு நிமிடமும் அது தன்னை மாற்றிக்காட்டும் மாயாஜால வித்தைகளுக்காக. பிஜூ மலையைப் பார்த்துக் கொண்டிருப்பது அங்கிருந்து அவனுக்கு வரப்போகும் மஞ்சம்புற்களுக்காக. தென்னம் ஓலை வேய்ந்த அவர் வீட்டுக்கூரை மஞ்சம்புல் வேய்தலிலேயே நிறையும்.

- கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x