

இருபதாம் நூற்றாண்டில் நவீன கட்டிடவியல் மீது உலகம் முழுவதும் தாக்கம் செலுத்திய லே கார்புசியர் உருவாக்கிய 17 கட்டிடங்களுக்கு உலகப் பாரம்பரியக் கட்டிடங்கள் என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது. வடிவ ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களை இளம் தலைமுறையினருக்காகப் பாதுகாப்பதற்கு இந்த அந்தஸ்து உதவும்.
மாறும் சமூகத் தேவைகளுக்கேற்ப, கட்டிடங்களை உருவாக்குவதற்கான புதுமையான தீர்வுகளை உருவாக்கியவர்களில் முன்னோடியாகச் செயல்பட்டவர் லே கார்புசியர் என்று யுனெஸ்கோ அவரது பங்களிப்பு பற்றிக் கூறுகிறது.
நவீனக் கட்டிடவியல் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடலில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய லே கார்புசியர், ஓவியக்கலைஞர், சிற்பி மற்றும் எழுத்தாளரும் கூட.
லே கார்புசியரின் கட்டிட வடிவமைப்பு சார்ந்த அறிவு சுயம்பானது. மத்திய ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் நாடுகளில் 1907 முதல் 1911 வரை மேற்கொண்ட நீண்ட பயண அனுபவங்களிலிருந்து அந்த அறிவைப் பெற்றார். ஆர்சிசி கான்கிரீட்டைப் பயன்படுத்துவதில் நிபுணர் எனப் புகழ்பெற்ற அகஸ்தே பெர்ரட் உடன் பணிபுரிந்ததும், தொழிற்கூட வடிவமைப்பு முன்னோடியான பீட்டர் பெஹ்ரன்சுடன் பெர்லினில் பணியாற்றியதும் அவரது கட்டிட அறிவைச் செம்மைப்படுத்தின.
1917-ல் பாரிசில் குடியேறிய லே கார்புசியர் மீது நவீன ஓவியங்கள் பெரும் தாக்கம் செலுத்தின. அங்குதான் தி நியூ ஸ்பிரிட் பத்திரிகை வழியாக எழுத்தாளராகவும் மாறினார் கார்புசியர். 1925-ல் நடந்த சர்வதேச அலங்காரக் கலைகள் கண்காட்சியில் இரண்டு மாடி குடியிருப்பு மாதிரி ஒன்றைக் காட்சிக்கு வைத்தார். அதுதான் அவர் பின்னர் கட்டிய வீட்டு குடியிருப்புத் தொகுதிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது. முதலில் அவர் பரிந்துரைத்த வானுயரக் கட்டிடத் திட்டங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் இன்று நாம் உலகம் முழுக்கக் காணும் அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள் அனைத்தும் லே கார்புசியரின் கண்ட கனவின் பலன்களே.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தெற்கு பிரான்சில் குடியேறிய லே கார்புசியரின் ஆர்வம், மாடுலார் (MODULOR) வடிவ கட்டிடக் கோட்பாட்டில் திரும்பியது. மனித உடல்கூறின் அளவுக்கு ஏற்றளவிலான கட்டிடவியல் அளவீடுகளை உருவாக்கும் முறை தான் அது.
1945-ல் மார்செய்ல் ப்ராஜக்ட் என்ற பெயரில் உருவான அடுக்குமாடிக் குடியிருப்பு, மாறிவரும் நகர்ப்புறச் சமூகச் சூழல்களுக்கேற்ப மாறவேண்டிய குடியிருப்புத் தேவைகளின் அடிப்படையில் லே கார்புசியரால் கட்டப்பட்டது. 18 தளங்களும் ஆயிரத்து 800 குடியிருப்பு வாசிகளையும் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு அது. 1953-ல் நேருவின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு வந்து பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் சண்டிகரை உருவாக்கினார். அங்குள்ள பெரும் அரசுக் கட்டிடங்களைத் திட்டமிட்டு வடிவமைத்தவர் அவர்தான்.
பாரிசில் ஸ்விஸ் டார்மிட்டரி, நோர்தர் தாமே தேவாலயம், டோக்கியாவின் மேற்கத்திய கலை அருங்காட்சியகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய கார்பெண்டர் விசுவல் ஆர்ட்ஸ் சென்டர் ஆகியவை அவர் உருவாக்கிய கட்டிடங்களில் குறிப்பிடத்தகுந்தவை. தி சிட்டி ஆப் டுமாரோ, தி ரேடியண்ட் சிட்டி மற்றும் தி மாடுலார் ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை.
வாழ்வதற்கான ஓர் இயந்திரமாக வீடு திகழ்கிறது என்ற நம்பிக்கையைக் கொண்டவர் லே கார்புசியர். அவர் கட்டிய வீடுகளின் மாதிரிகள் தான் இன்று உலகம் முழுவதும் பழுதுபடாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
ஐ.நா.சபை தலைமையகம், அமெரிக்கா
சன்ஸ்கார் கேந்திரா, அகமதாபாத்
யுனைட்டி ஹேபிட்டேஷன், பிரான்ஸ்