Published : 27 Aug 2016 02:19 PM
Last Updated : 27 Aug 2016 02:19 PM

சுமூகமான ஒரு சமூக வாழ்க்கை

மாறி வரும் நகரச் சூழலில் தனி வீடு என்பது எட்டாத கனவாகவே ஆகிவிட்டது. குறைவான இடம், ஆனால் நிறைவான வசதிகள் என அனைவரது உள்ளக் கிடக்கையும் பூர்த்திசெய்வது அடுக்குமாடிக் குடியிருப்புகளே. அதே போல் கூட்டுக் குடும்ப முறையும் மெல்ல மெல்ல அழிந்துவந்தாலும், ‘கேட்டட் கம்யூனிட்டி’ எனும் புதிய கலாசாரம் பல்வேறு விதமான மக்களையும் இணைத்துக் குடும்பமாக வாழக் கற்றுக்கொடுக்கிறது. அவ்வப்போது உரசல்கள் எழுந்தாலும் ஆபத்து நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவுவது, தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது என அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் சுமுகமாகச் செல்கிறது வாழ்க்கை.

உறவினர் ஒருவர் கைக்குழந்தையுடன் தனியே அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறியபோது தனியே சிரமப்பட வேண்டுமே என்று கலங்கியிருக்கிறார். ஆனால் ஆச்சரியமூட்டும் விதத்தில் பக்கத்துக் குடித்தனக்காரர்கள் உதவியுள்ளனர். மாலை வேளையில் தன் குழந்தையுடன் ஸட்ரோலரில் (stroller) வெளியே வாக்கிங் செல்லும்போது பல குழந்தைகள் வந்து அன்புடன் நலம் விசாரித்தனவாம். தன் குழந்தைக்கும் நிறைய நண்பர்கள் கிடைத்துவிட்டனர், தனக்கும் நிறைய தோழிகள் கிடைத்துவிட்டனர் என்கிறார். அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளதால் தனிமை உணர்வு என்னைத் தாக்கவே இல்லை என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தனிமை போக்கும் வாழ்க்கை

அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறினால் சுதந்திரம் பறிபோகும் என்ற கருத்து பரவலாக இருந்துவருகிறது. ஆனால் பாதுகாப்பான வாழ்க்கைக்கு அடுக்குமாடி வீடுகள்தான் சிறந்தவை. தற்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அனைத்துத் தளங்களிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவதால் நாம் இல்லாத பட்சத்திலும் நம்முடைய உடைமைகள் பத்திரமாக இருக்கும். முதியவர்கள் மற்றும் பெண்கள் தனியாக இருக்க நேர்ந்தால் பாதுகாப்பு குறித்த அச்சம் தேவை இல்லை. பல இடங்களில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு முறை வழங்கப்படுகிறது. மேலும் குடியிருப்பில் நுழையும் எவரானாலும் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலரைத் தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும். சில அதிநவீன அடுக்குமாடிகளில் விதவிதமான சென்சார்கள் பொருத்தப்படுகின்றன. அடுக்குமாடிகளின் ஒவ்வொரு தளத்தையும் இந்த சென்சார்களால் கண்காணிக்க முடியும். பேக்அப் ஜெனரேட்டர், தண்ணீர் மோட்டார், மாலை நேர விளக்குகள் என அனைத்துமே தானியங்கி முறையில் இயங்குகின்றன. வெளி ஆட்கள் நுழைவதைத் தடுக்க ஸ்மார்ட் கார்ட் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உத்தியைக் கட்டுமானத்தின் போதே திட்டமிட்டு அதற்கேற்றாற் போல நவீனமானதாக வீடுகளை அமைக்கின்றனர்.

குடியிருப்போர் நலச் சங்கம்

குடியிருப்புக்கென்று ஒரு சங்கம் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக வருடாவருடம் கூட்டம் போட்டு தலைவர், செயலாளர், பொருளாளர் எனத் தேர்ந்தெடுக்கின்றனர். குடியிருப்பில் நிகழும் பல நிகழ்வுகளின் சிக்கல்கள், பிரச்சினைகள் போன்றவை இவர்கள் மூலமே தீர்வு காணப்படுகின்றன. காவலர்களைத் தவிர மேனேஜர், ரிசப்ஷனிஸ்ட் என மூன்று நான்கு பேர் முகப்பு அலுவலகத்தில் (front office) பணிபுரிகின்றனர். துப்புரவுப் பணியாளர்களும் அதில் அடங்குவர். பராமரிப்புக்கென மாதா மாதம் ஒரு தொகை செலுத்த வேண்டிவரும். மின்தூக்கிப் பராமரிப்பு, ஊழியர்களின் ஊதியம், கரண்ட் பில் மற்றும் பல செலவுகளுக்கு இத்தொகை பயன்படுத்தப்படுகிறது. பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடித்தனக்காரர்கள் இத்தொகையைச் செலுத்தாமல் காலம் கடத்துவதால் பிரச்சினைகள் எழுவதுண்டு. அவர்களின் பெயர்களைப் பகிரங்கமாக நோட்டீஸ் போர்டில் எழுதி வைத்துள்ளதைச் சில இடங்களில் காணலாம்.

பழுது நீக்காத பயிற்சிக் கூடம்

குழந்தைகள் விளையாடி மகிழ சிறு பூங்கா, பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்வதற்குத் தரைத்தளம், நீந்தி மகிழ நீச்சல் குளம், லாபி, குழந்தைகள் காப்பகம், மருந்தகம் இன்னபிற வசதிகளும் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உண்டு. 'கிளப் ஹவுஸ்' என்னும் பார்ட்டி ஹாலில் உங்கள் வீட்டுப் பிறந்தநாள் போன்ற சிறிய விஷேசங்களை நடத்திக்கொள்ளலாம். அதற்கெனக் கட்டணம் உண்டு அதைச் செலுத்தி விட்டால் போதும். உடற்பயிற்சிக் கூடம், டிடி, கேரம் போன்ற வசதிகளும் உண்டு. என்றாலும் பலரும் புகார் கூறுவது என்னவெனில் சில நாட்களிலேயே அவை பழுதடைந்துவிடுகின்றன. பழுதடைந்துவிட்டால் அதனைச் சீர் செய்வதில்லை. பராமரிப்பின்றிச் சிறிது காலத்துக்குப்பின் இது போன்ற வசதிகள் பயனற்றுப் போய்விடுகின்றன என்பதுதான். முதல் பத்து ஆண்டுகளுக்குப் பராமரிப்பு சேவைகள் பில்டர் வசம் இருந்தது. அது வரை அனைத்தும் சிறப்பாகவே இருந்தன. பின்னர் வீட்டு உரிமையாளர்கள் வசம் சென்றன. அதன்பின் செவ்வனே செய்யப்பட வில்லை.

சிறு சிறு பிளம்பிங், எலக்டிரிக்கல் வேலை செய்ய வருபவர்களுக்குச் சிறு தொகை அளிக்கப்பட வேண்டியுள்ளது. என்றாலும் உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதைப் பாராட்ட வேண்டும்.

பன்முகக் கலாசார மையம்

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பெரிதும் பிரச்சினைகள் வரக் காரணமாய் இருப்பது, அடுத்தவர் வீட்டில் குப்பையை வீசுவது (மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு), ஏசி சர்வீஸின் போது தண்ணீர் சிந்துவது, செடி கொடிகளுக்கு நீரூற்றும்போது பிறர் பால்கனியில் காயும் துணிமணிகள் பாழாவது போன்ற செயல்களால்தான். இவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆணி அடிப்பது, தூங்கும் வேளையில் பாடல்களை அலறவிடுவது, தூசி ஏற்படும் வண்ணம் வீட்டில் ரிப்பேர் வேலை செய்து அருகில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் வண்ணம் செயல்படுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோல் ஆணி அடிக்கும்போதோ பழுது பார்க்கும் போதோ அருகில் உள்ல வீட்டுக்காரர்களிடம் தெரிவித்து சம்மதம் பெற வேண்டியது அவசியம். பல்வேறு வகைப்பட்ட மனிதர்களும் உள்ள இடம் என்பதால் பல்வேறு கலாச்சாரங்களையும், பல்வேறு மதங்களையும் அவர்களது பண்டிகைகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

வாழ்க்கைச் செலவு, ஆடம்பர வசதிகள் போன்ற எத்தனையோ காரணங்களுக்காக அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாம் தேர்ந்தெடுத்தாலும், அதிகம் பேசப்படாத காரணம் என்பது நமக்குக் கிடைக்கும் நண்பர்கள். அரிஸ்டாட்டில் கூறியதுபோல் மனிதன் ஒரு சமூக விலங்கு. சமூகமே தனி ஒருவனை முன்னெடுத்துச் செல்லும். வாழ்க்கை எனும் தோட்டத்தில் பலவிதமான மனித மலர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பாக இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையைச் சொல்லலாம்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவரா நீங்கள்? இந்தப் பகுதி உங்களுக்கானது. உங்கள் குடியிருப்பில் நீங்கள் சந்தித்த சுவாரசியமான சம்பவங்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உங்கள் குடியிருப்பின் தனித்தன்மைகள் ஆகியவை குறித்து புகைப்படத்துடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:

சொந்த வீடு, தி இந்து -தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x