கொடிகளுக்கு இடம் வேண்டாமா?

கொடிகளுக்கு இடம் வேண்டாமா?
Updated on
1 min read

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையைக் குறைக்கச் சிறு கொடிகளால் முடியாது. ஆனால், கொஞ்சம் கண்களுக்குக் குளுமையைத் தரும். முன்பு வீடு என்றால் அதில் சிறு பகுதி செடி, கொடிகளுக்காக இருக்கும். ஆனால், இன்றைக்குள்ள நெருக்கடியில் வீடு கட்ட நிலம் வாங்குதே பெரும்பாடு. இந்தச் சூழ்நிலையில் செடி, கொடுகளுக்கு எங்கு இடம் கொடுப்பது?

கொடிக்குத் தன் தேரையே கொடுத்தார் வள்ளல் பாரி. நாம் பால்கனியில் இடம் கொடுத்தால் போதும். பொதுவாகச் செடிகளைவிடக் கொடிகளை வளர்ப்பது சுலபம். அழகாகவும் இருக்கும். அது சாதாரண மண்ணிலேயே செழித்து வளரும். இவற்றிற்கெனத் தனிக் கவனம் கொள்ளத் தேவையில்லை.

சிறு தொட்டிகளிலேயே விதைகளைத் தூவிக் கொடிகளை வளர்க்கலாம். பால்கனி சுவர்களிலேயே அழகாகப் படர விடலாம். பூக்களைத் தரும் கொடிகளில் இரு வகைகள் உள்ளன. சில வகைக் கொடிகளில் தண்டுக்கு நெருக்கமாகப் பூ பூக்கும், சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்துத் தொங்கும். முதல் வகைக் கொடிகளைத் தூண்களில் படரவிடலாம். தூணோடு தூணாக அழகிய திரை போலப் படர்ந்து சூழலை அழகுபடுத்தும். இரண்டாம் வகைக் கொடிகளை கூரைமீது படரவிடலாம். படபடவெனப் பரவி கூரையில் பூக்களின் தோரணங்கள் கண்ணைப் பறிக்கும்விதமாகப் பார்ப்போரைக் கவரும்.

ஜன்னலிலும் கொடிகளைப் படரவிடலாம். கொடிகள் பால்கனிச் சுவர், ஜன்னலில் படர்ந்திருக்கும் காட்சி வீட்டுக்கு வருபவர்களுன் கண்களுக்கு விருந்தாகும். உள்ளுக்குள் இருக்கும் நம் மனதுக்கும் உடலுக்கும் குளுமையைத் தரும்.

- சேது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in