

மேஜை விளக்குகள் இன்றைக்கு அதிகமாகப் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை மேஜை விளக்குகள் செல்வந்தர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்துவந்தன. ஆனால் இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினரும் மிக அதிகமாக மேஜை விளக்குகளைப் பயன்படுத்திவருகிறார்கள். ஆரம்ப காலத்தில் மேஜைகளில் மெழுகுவர்த்திகளைப் பொருத்திவைத்து அவற்றையே மேஜை விளக்குகளைப் போல் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த மெழுகுவர்த்தியின் நவீன வடிவம்தான் மேஜை விளக்குகள் எனலாம். அதில் பல வகைகள் உள்ளன.
பியானோ விளக்கு
இந்த வகை விளக்குகள் தொடக்கத்தில் பியானோ கட்டைகளுக்கு வெளிச்சம் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதனால் இந்தப் பெயர் வந்தது. ஆனால் இன்று இவை அடக்கமான வடிவில் கிடைக்கின்றன.
நவீன விளக்குகள்
பல்வேறு வடிவங்களில் இன்று விளக்குகள் கிடைக்கின்றன. கொடிகள்போல் கிளைகள் வளைந்தபடியும் மரங்கள் போல் கிளைகள் விரித்தபடியும் பல வடிவங்களில் கிடைக்கின்றன.
அசையும் கை விளக்கு
இந்த வகை விளக்குகள் மேஜைக்கு மட்டுமல்லாமல் தரைத் தளத்தில் பயன்படுத்துவதற்கும் ஏற்றவை. இதைப் பக்கவாட்டில் கை ஆட்டுவதைப் போல் பயன்படுத்த முடியும்.
வில் விளக்கு
வில் விளக்குகள் மேஜைக்கு மிகப் பொருத்தமான வகை. குறைந்த இடம்தான் எடுத்துக்கொள்ளும். அதே சமயம் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தேவையான வெளிச்சத்தை அளிக்கும்.
மூன்று கால் விளக்கு
இந்த வகை விளக்குகள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டவை. இந்த மூன்று கால் விளக்குகள் பயன்படுத்துவதால் வீட்டுக்கு ஒரு கம்பீரத் தோற்றத்தைத் தரும். ஆனால் இந்த விளக்குகளுக்குக் கொஞ்சம் அதிகப் பரப்பளவு கொண்ட மேஜைகள் தேவை.
பஃபே விளக்கு
இந்த விளக்குகளும் குறைந்த இடத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவை. வெளிச்சம் குறைவான அளவில்தான் வரும். உணவு மேஜைக்கு இந்த வகை விளக்குகள் ஏற்றவை.