Published : 08 Mar 2014 12:56 PM
Last Updated : 08 Mar 2014 12:56 PM

பட்ஜெட் வீடுகளை நாடும் மக்கள்

அதிகரித்து வரும் வீட்டு வாடகையும் வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளும் வாடகை வீடுகளில் குடியிருப்போரைச் சொந்த வீடு வாங்கும் நிர்ப்பந்தத்துக்குத் தள்ளிவிடுகின்றன. வசதி வாய்ப்புகள் அதிகரித்து அல்லது நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து வீடு வாங்குபவர்கள் தனி ரகம்.

வருமான வரி கட்டுவதைக் கருத்தில்கொண்டு அதற்கேற்பத் திட்டமிட்டு வீடு வாங்குபவர்கள் இன்னொரு ரகம். ஆனால், பெரும்பாலும் முதலில் குறிப்பிட்ட காரணத்தினால் வீடுவாங்க விரும்புவோர்தான் அதிகம்.

தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) உச்சத்தில் இருந்தபோது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மனைகள், தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை மளமளவென உயர்ந்தது. பொறியியல் முடித்ததும் மிக இளம் வயதிலே கைநிறையச் சம்பளத்தில் பெரிய பெரிய ஐ.டி. வேலை கிடைக்கும் சூழ்நிலை உருவானபோது அத்தகைய இளம் பணியாளர்களைக் குறிவைத்து ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பெரிய பட்ஜெட் வீடுகளையும் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் கட்டித்தள்ளினர்.

ரூ.50 லட்சம், ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடுகளை மாதம் ரூ.1 லட்சம் அளவுக்குச் சம்பளம் வாங்கும் ஐ.டி. ஊழியர்கள் வங்கியில் கடன் பெற்று வாங்க எவ்விதச் சிரமமும் இல்லை.

பெரிய பட்ஜெட் வீடுகளுக்கும், அனைத்து வசதிகளுடன் கூடிய உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் மவுசு கூடியதால் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களை ஒட்டிய இடங்களில் விண்ணை முட்டும் வானளாவிய குடியிருப்பு கட்டிடங்கள் எழுந்தன. அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஊழியர்கள் வீடு வாங்குவதைப் பார்த்துச் சக ஊழியர்களும் போட்டிபோட்டு வீடுகள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கத் தொடங்கினர்.

இந்தச் சூழ்நிலையில், ஐ.டி. துறையில் ஏற்பட்ட திடீர் சரிவு, சாப்ட்வேர் ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்பட்ட பாதிப்பு, தமிழக அரசின் வழிகாட்டி மதிப்பு அதிகரிப்பு காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையின் பாய்ச்சலுக்குக் கடிவாளம் விழுந்தது. பெரிய பட்ஜெட் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்க முன்பதிவு செய்தவர்கள்கூட நிதிநெருக்கடி காரணமாகப் பின்வாங்கினர்.

புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு முன்பு ரூ.1 லட்சம் அளவுக்குச் சம்பளம் கொடுக்க முன்வந்த சாப்ட்வேர் நிறுவனங்கள் ரூ.60 ஆயிரம், 50 ஆயிரம் என்ற அளவுக்குக் குறைக்க ஆரம்பித்தன. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைசெய்யும் ஊழியர்களின் சம்பளக் குறைப்பு, அவர்களின் வீடு வாங்கும் மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

முன்பு சாதாரணமாக ரூ.80 லட்சம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடுகள், அடுக்குமாடி வீடுகள் வாங்க முன்வந்தவர்களின் கவனம் ரூ.40 லட்சம் மற்றும் அதற்குக் குறைவான விலையுள்ள நடுத்தர பட்ஜெட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பக்கம் திரும்பியது.

ஏற்கெனவே நடுத்தர வர்க்கத்தினரும் இந்த விலையுள்ள வீடுகளை வாங்குவதாலும், ஐ.டி. ஊழியர்களின் விருப்பம் மாறியதாலும் கட்டுமான நிறுவனங்கள் நடுத்தர பட்ஜெட் வீடுகளையும், அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் கட்டத் தொடங்கிவிட்டனர்.

இதனால், தற்போது சென்னை புறநகர்ப் பகுதிகளில் 3 படுக்கை அறைகள் கொண்ட சொகுசு வீடுகள் கட்டப்படுவது குறைந்து நடுத்தர வர்க்கத்தினர் வாங்கக்கூடிய வகையில் ஓரளவு வசதிகளுடன் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிக அளவு கட்டப்பட்டு வருகின்றன. எனவே, நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கு மவுசு கூடிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x