

உங்களிடம் உள்ள மிகப் பெரிய சொத்து பெரும்பாலும் உங்கள் வீடாகத்தான் இருக்கும். நீங்கள் ஒரு வீடு வாங்கவோ கட்டவோ எடுத்துக்கொள்ளும் நேரம், செலவிடும் பணம், முயற்சி, ஆற்றல் ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துப் பார்த்தால் அந்த வீட்டைக் காப்பீடு செய்வதுதான் உங்களது முழுமுதற் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், ஏனோ இந்தியாவில் ஆயுள் காப்பீடும், வாகனக் காப்பீடும் மக்களைப் போய்ச் சேர்ந்த அளவுக்கு வீட்டுக் காப்பீடு போய் சேரவில்லை. வீட்டுக் காப்பீடு என்பது உங்களுடைய விலை மதிப்பற்ற சொத்தான வீட்டின் பாதுகாவலன்.
எது, எதற்குக் காப்பீடு?
வாடகை வீடோ சொந்த வீடோ எதுவாயினும் உங்கள் வீட்டிலுள்ள பல்வேறு பொருட்களுக்கும் பலவிதமான காப்பீட்டுத் திட்டங்கள் கிடைக்கின்றன. காப்பீட்டைப் பொறுத்தவரை உங்கள் வீட்டைக் கட்டடமாகவும் பொருட்களாகவும் பிரித்துள்ளனர். கட்டடம் என்பது கட்டடம் மற்றும் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டப் பொருள்களை கவர் செய்வது.
பொருட்கள் என்பது உங்கள் உடைமைகள், துணிமணிகள், பர்னிச்சர் மற்றும் எலெக்ட்ரிக்கல் பொருட்கள். கட்டடக் காப்பீடு என்பது புயல், மழை, வெள்ளம், தீவிபத்து, தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சினைகளால் குடும்பத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும். பொதுவாக வீட்டில் எத்தனையோ மின் சாதனங்கள் உள்ளன. டிவி, ஏசி, வாஷிங் மெஷின், மியுசிக் சிஸ்டம் போன்ற பொருட்களுக்கும் காப்பீடு உண்டு. சில விநோதமான சம்பவங்களையும் காப்பீடு கவர் செய்யும்.
உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை உங்கள் நாய் கடித்து விட்டால் ஏற்படும் இழப்புக்கும், உங்கள் வீட்டு மரக்கிளை அவரின் வீட்டைச் சேதப்படுத்தினாலும், உங்கள் வீட்டுக் கூரையை விமானம் தாக்கி ஏற்படும் இழப்புக்கும் காப்பீடு உண்டு.
காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி?
இரு வகை காப்பீடுகளையும் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமானது. வீட்டை காப்பீடு செய்யும் முன் அதற்கு காப்பீடு எவ்வளவு தேவை என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்வதற்கு ஆகும் செலவைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம். உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்ள தேர்ந்த கட்டுநரைத் தொடர்பு கொள்ளலாம். அது சிறந்த காப்பீட்டை நாம் தேர்ந்தெடுக்கவும், நாம் கட்டும் பிரிமீயத்தொகையை நிர்ணயிக்கவும் உதவும்.
தாற்காலிகமான வாழ்க்கை செலவுகளுக்கும் வீட்டுக் காப்பீடு செய்யலாம். எடுத்துக்காட்டாக, இயற்கைப் பேரிடர்களான புயல், வெள்ளம், மழை மற்றும் கலவரத்தின்போது வீடு சேதமடைந்து நீங்கள் தற்காலிகமாக வேறொரு வாடகை வீட்டில் அல்லது ஹோட்டலில் தங்கியிருக்கின்றீர்கள் எனில் அதற்குரிய செலவுத்தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும்.
எப்போதுமே பழையதுக்கு புதிது (old for new) என்னும் வரையறையைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள். பழைய பொருட்களின் மதிப்பிற்குரிய பணத்தைப் பெறுவதைவிடப் புதிய பொருட்கள் பெறுவது உத்தமம். எப்போதுமே பொருட்களின் சரியான விலையை நிர்ணயிப்பது நலம். குறைந்தபட்ச விலை குறைந்த காப்பீட்டைத் தரும். அதிகபட்ச விலை உங்கள் பிரிமீயம் தொகையை அதிகரித்து விடும்.
உங்கள் வீடும், பொருட்களும் அதன் சொந்த மதிப்பு (actual cost)அல்லது மாற்று மதிப்புக்குக் (replacement cost) காப்பீடு செய்யலாம். சொந்த மதிப்பு என்பது தேய்மானத்திற்கான செலவை கவர் செய்யும். மாற்று மதிப்பு என்பது அதனை ரிப்பேர் மற்றும் புதிதாய் மாற்றிக் கட்ட ஆகும் செலவும் உட்பட்டது.
சில காப்பீட்டு நிறுவனங்கள் சமயங்களில் தள்ளுபடி வழங்குகின்றன. உதாரணமாக வீட்டைக் காப்பீடு செய்கிறோம். என்றாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். நெருப்பு எச்சரிக்கை மணி(fire alarm), அணைப்பான் (extinguisher), திருட்டு எச்சரிக்கைமணி (burglar alarm), மின் வேலி(electrical fence), வீட்டைக் காவல் நிலையத்துக்கு அருகில் அமைத்தல் போன்றவை செய்திருந்தால் பிரிமியம் தொகையிலிருந்து சிறிது தள்ளுபடி கிடைக்கக்கூடும்.
நோட் (NO CLAIMS DISCOUNT-NOD) என்பது நீங்கள் ஒரு வருடத்திற்கு ஏதும் க்ளெய்ம் செய்யாவிடில் உங்களுக்கு உங்கள் காப்பீட்டு நிறுவனம் ஏதேனும் தள்ளுபடி அளிக்கலாம். அதனால் உங்களின் வருடாந்திர அல்லது மாதாந்திர பிரீமியம் கணிசமாகக் குறையலாம்.
பல வங்கிகள் இப்போது வீட்டுக் கடன் அளிப்பதற்கு முன் காப்பீடு செய்தால் மட்டுமே கடன் அளிக்கப்படும் என்று கட்டளை இடுகின்றது. ஆதலால் வீட்டுக் காப்பீடு என்பது வீட்டுக் கடன் வாங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கை ஆகியுள்ளது. உங்கள் காப்பீட்டு நிறுவனங்கள் நீங்கள் இல்லாதபட்சத்தில் உங்கள் வீட்டுக் கடனை செலுத்துகின்றது. அதாவது கடன் வாங்கியவர் இறக்கும்பட்சத்தில் மீதமிருக்கும் வீட்டுக்கடன் தொகையை அடைக்கக் காப்பீடு வழிவகை செய்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வீட்டுக் கடனுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்துகின்றன.
“நாளை என்பது இன்றே அதற்காகத் தயார் செய்பவர்களுக்காக” என்கிறது ஒரு ஆப்பிரிக்க பழமொழி. ஆகவே வருமுன் காப்போம் என்பதற்கு ஏற்றாற்போல புத்திசாலித்தனமாகக் காப்பீடு செய்ய வேண்டும். என்றாலும், காப்பீடு என்பது ஒரு முக்கியமான ஆவணம். அதனை முற்றிலும் தெளிவாக வாசித்துப் புரிந்துகொள்வது அவசியம்.