

செயலர் மேஜை
தொடக்க காலத்தில் அலுவலகச் செயலருக்காக வடிவமைக்கப்பட்டது. அதனால் ஒரு டைப்ரைட்டிங் இயந்திரம் வைப்பதற்கான இட வசதியுடன் வடிவமைக்கப்பட்டது. இன்று இதன் மேன்பட்ட வடிவம் பயன்பாட்டில் உள்ளது. கோப்புகள் பாதுகாப்பதற்கான ட்ராயர். கணினி வைப்பதற்கான இடவசதியிடன் இது உருவாக்கப்படுகிறது.
அலுவல் மேஜை என்பது மத்திய ஐரோப்பிய நாடுகளில்தான் தொடக்கக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகச் சொல்லப் படுகிறது. எழுதுவதற்கு, படிப்பதற்கு, கணக்கு பார்ப்பதற்கு எனப் பலவித அலுவல் பயன்பாட்டுக்கு இந்த மேஜைகள் பயன்படுத்தப்பட்டன. மத்திய கால ஓவியம் ஒன்று எழுதுவதற்கும் படிப்பதற்குமான மேஜை ஒன்றைச் சித்திரிக்கிறது. இன்று பயன்படுத்தப்படும் மேஜையின் முன்மாதிரி வடிவம் 17, 18-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இன்றைக்குப் பயன்பாடு பல்வேறுவிதமாகப் பெருகிவிட்டது. அவற்றில் சில வகை:
எழுது மேஜை
இது வீட்டு பயன்பாட்டுக்கான மேஜை எனலாம். பெரும்பாலும் சுவர் ஓரத்தில் எளிமையான வடிவமைப்படும் இருக்கும். பொருள்கள் வைப்பதற்கான சிறிய அளவிலான இடமும் இதில் இருக்கும்.
கணினி மேஜை
இன்றைக்குள்ள கணினி மேஜை என்பதும் 18-ம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த வரைவு மேஜையின் மெருகேற்றப்பட்ட வடிவமே. இது பெரும்பாலும் மரத்தால் செய்யப்படுகிறது. எழுது மேஜையிலிருந்து சற்றே மாறுபட்டது. கணினி மட்டுமல்லாது அது சார்ந்த பிரிண்டர், இன்வெர்ட்டர், சிடி அலமாரி போன்றவற்றுக்கான இட வசதியுடன் இந்த மேஜை வடிவமைக்கப்படுகிறது.
பிரம்மாண்ட மேஜை
இது அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்தது. பெரும்பாலும் செவ்வக வடிவில் இருக்கும். அறையின் வாசலை நோக்கி இருக்குமாறு போடப்பட்டிருக்கும். தமிழ்த் திரைப்படங்களில் முதலமைச்சர் அமர்ந்திருக்கும் மேஜையைப் பார்த்திருபீர்கள். அது இந்த வகை மேஜைதான். இது மேஜை விளக்குக்கான இடம், கோப்புகள் கையாள்வதற்கான இட வசதியுடன் இருக்கும். அதுபோல ட்ராயர்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதுவும் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்கும்.
கிரடென்ஸா மேஜை
இது இத்தாலிய நாட்டில் உருவாக்கப்பட்ட மேஜை வடிவமாகும். கிரடென்ஸா என்ற இத்தாலியச் சொல்லுக்கு அலமாரி என்று அர்த்தம் வருகிறது. இதிலிருந்து இது அலமாரியுடன் கூடிய மேஜை என எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இருபக்கமும் அலமாரிகள் இருக்க நடுநாயகமாக கண்னி/எழுது மேஜை வடிவமைக்கப்பட்டிருக்கும்.
மூலை மேஜை
வீட்டின் இட நெருக்கடியைச் சமாளிக்க இந்த வகை மேஜை பயனளிக்கும். மூலைகளில் கிடைக்கும் சிறு இடத்தைப் பயன்படுத்தும் விதத்தில் இந்த வகை மேஜை உருவாக்கப்படுகிறது.
மிதக்கும் மேஜை
இது சுவருடன் சேர்த்துப் பொருத்தப் படும்படி வடிவமைக்கப் படுவது. சுவருடன் சேர்த்து மரப் பலகை அல்லது கடப்பா பலகை போன்றவற்றைப் பொருத்தி உருவாக்கப் படுவது. வீட்டின் வரவேற்பறையில் இன்று பெரும்பாலும் இந்த முறையில்தான் அலமாரி உருவாக்கப் படுகிறது. இந்த வகை மேஜை வீட்டுக்கு ஒரு நவீனத் தோற்றத்தைத் தரும்.