

கட்டுமானத்துறையில் சற்றே தொய்வான நிலை காணப்பட்டாலும், கோவையில் நடுத்தர மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது கட்டுமானத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயரும் குறியீடு
கோவை ரியல் எஸ்டேட் சந்தைத் தகவல்களும் இதை உறுதி செய்கின்றன. விலை அதிகமாக இருக்கும் சொத்துகள் கூட, மந்த நிலையின் காரணமாக விலை குறைக்கப்படவில்லை. தேசிய வீட்டு வசதி வங்கியின் ரெசிடெக்ஸ் குறியீட்டின்படி, கோவையில் கட்டுமானத்துறையின் அடிப்படை மதிப்பு, கடந்த 2007 முதல் செப்டம்பர் 2013 வரையிலான காலகட்டத்தில், 128 புள்ளிகளாக அதிகரித்திருக்கிறது சென்னையில் இது 318 புள்ளிகளாக உயர்ந்திருக்கிறது.
சென்னையை விடக் கோவையில், கட்டு மானத் துறையின் அடிப்படை மதிப்பீடு குறைவாகக் காணப்பட்டாலும், நடுத்தர மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்து வருவதாகக் கோவைக் கட்டுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, 1100 சதுர அடி முதல் 1200 சதுர அடியிலான, ரூ.30 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலை மதிப்புடைய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கோவையில் தேவை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் கோவையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் ராஜகோபால்.
சந்தை மதிப்பு அதிகரிப்பு
கோவை நகர்ப் பகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை சதுர அடி ரூ.7 ஆயிரமாகவும், சரவணம்பட்டி போன்ற ஐ.டி. நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில் ரூ.3500 ஆகவும் உள்ளது. புறநகர்ப் பகுதிகளாகக் கருதப்படும், வடவள்ளி, சரவணம்பட்டி, கோவை புதூர், வேடப்பட்டி, கணபதி, நேரு நகர், பீளமேடு, துடியலூர், என்.ஜி.ஓ காலனி, குனியமுத்தூர் பகுதிகள் ரியல் எஸ்டேட் விரைவாக வளர்ச்சியடையும் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் வீடு வாங்கு பவர்கள், தங்களின் சொந்தத் தேவைக்காக அதாவது குடி யிருக்க வாங்குவதால், இதில் ஊகத்தின் அடிப்படையில் விலையேற்றம் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்கிறார் ராஜகோபால்.
பெருகும் வளர்ச்சி
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதி களில் இருந்து வேலை தேடிப் பல ஆயிரக் கணக்கானோர் கோவைக்கு வந்துள்ளனர். தற்போதைய சூழலில், ஜவுளித்துறை மட்டுமின்றி, சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி ஆலைகளுக்கும் அதிகளவில் ஆட்கள் தேவைப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்பத்துறையும் கோவையில் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வருவதால், அதற்கும் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதுபோன்ற காரணிகளுடன், கோவையின் தட்ப வெப்பச் சூழலும் இப்பகுதியில் கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. சிறப்பான கல்வி நிறுவனங்கள், நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், விமான நிலையம், ரயில் வசதி என அடிப்படை வசதிகளிலும் கோவை மாநகரம் சிறந்து விளங்குகிறது.
உயர் ரக வீடுகளுக்கு வரவேற்பு
இதனால், கோவையில் மேற்கொள்ளப்படும் நடுத்தர விலையுள்ள வீடுகள் எளிதில் விற்பனை செய்யப்படுவதாகவும் ராஜகோபால் கூறுகிறார். குடியிருப்பு எஸ்டேட்கள் எனப்படும் பாதுகாக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட உயர் ரகத் தனி வீடுகள் மற்றும் வில்லாக்களுக்கும் கோவையில் தேவை அதிகம் இருப்பதாகக் கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர். நகரின் மையப் பகுதிகளில் அமைந்துள்ள வில்லாக்கள் ஒரு கோடி ரூபாய் வரை விலை போவதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியக் கிழக்கு நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் இதுபோன்ற விலை அதிக முள்ள வில்லாக்களை வாங்க விரும்புகின்றனர். ஆனால், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படும் எல்லா வசதிகளும் கொண்ட ( gated community)இல்லங்களுக்கும் கோவையில் நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார் ராஜ கோபால். ஓய்வு பெற்றவர்கள் தங்களின் விருப்பப்படி நாட்களைக் கழிப்பதற்குத் தேவையான பொழுது போக்கு அம்சங்கள், கிளப்கள் இந்த வசதிகளில் அடங்கும்.
இப்படிச் சென்னைக்கு நிகராகக் கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் சிறந்து விளங்குவது கட்டுநர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.