

கடலோர ஒழுங்காற்று மண்டலச் சட்டம் 2011 (CRZ) குறித்து மதிப்பாய்வு செய்ய விஞ்ஞானியும், புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலருமான ஷைலேஷ் நாயக் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, சுற்றுச்சூழல், வனம், பருவகாலம் ஆகியவற்றுக்கான மத்திய அமைச்சகத்திடம் ஜனவரி 2015-ல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையின் நகலைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டும்கூட அந்த அறிக்கை நகல் கிடைப்பதற்கு வாய்ப்பற்ற நிலை இருந்துவந்தது. அறிக்கையை வெளியிட அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற காரணம் தெரிவிக்கப்பட்டுவந்தது.
இதை அடுத்து, கொள்கை ஆய்வு மையத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும், நமதி சுற்றுச்சூழல் நீதி திட்டத்தின் சட்ட ஆய்வு இயக்குநர் காஞ்சி கோலி மத்திய தகவல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவின் கீழ், இந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக, கொள்கை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே கடந்த ஜனவரியிலிருந்து கடலோரக் கட்டுமானம் தொடர்பான விதிமுறைகளில் நேரெதிரான சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில ஷைலேஷ் நாயக் குழுவின் பரிந்துரைக்குட்பட்டது போன்ற தோற்றம்கொண்டிருக்கிறது. குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை எழுப்புவது உள்ளிட்ட சில நினைவுச்சின்னங்கள் எழுப்புவதற்கான அனுமதி, சென்னையில் CRZ II பகுதிகளில், அதாவது உயரலைகள் எழும்பும் பகுதிகளிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் பல அடுக்குகளைக் கொண்ட கட்டிடங்கள் எழுப்ப அனுமதி, மும்பையில் கடலோரங்களில் துறைமுகங்கள், சாலைகள் ஆகியவற்றுக்கான நிலமெடுக்க அனுமதி போன்றவை இத்தகைய விதிமுறை மாற்றங்கள்.
கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் இரண்டாம், மூன்றாம் பகுதிகள் மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைகளின் கீழ் வரக் கூடாது என்றும் அவை மாநில நகர வடிவமைப்பு துறையின் கீழ் வர வேண்டும் என்றும் குழுவின் பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் கடற்கரையோரக் கட்டிடங்களுக்கும் கடலுக்குமான குறைந்தபட்ச தொலைவு இப்போதைய 200 மீட்டரிலிருந்து 50 மீட்டராகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் பற்றிய விவாதம் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்போது, அதன் விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஷைலேஷ் நாயக் குழுவின் பரிந்துரைகளைக் கணக்கில்கொள்ளாமல் விதிகளைத் தளர்த்தியததற்கான நியாயங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமை மத்திய வன, சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உள்ளது என்றும் தகவல் ஆணையம் கூறியிருக்கிறது.
மேலும் அறிக்கையை வெளிப்படுத்தும் முன்னர் அதில் தொடர்ச்சியாக சில மாற்றங்களை ஏற்படுத்துவது சந்தேகங்களை உருவாக்கும் என்றும் அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்த அறிக்கையின் படி, கடலோரத்தின் பல பகுதிகளில், நடைமுறையில் இருக்கும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளைவிட மாநில நகர வடிவமைப்பு விதிமுறைகளையே கைக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் CRZ II பகுதிகளில் குடியிருப்பு திட்டங்களும், குடிசைமாற்று வாரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். அதே போல் CRZ III, கிராமங்களின் கடலோரப் பகுதிகளில் சுற்றுலா சார்ந்த கட்டுமானங்களையும் உருவாக்க முடியும். CRZ IV பகுதிகளில், கடலுக்கு 12 நாட்டிகல் மைல் வரை, துறைமுகங்கள், மீன் பிடி சார் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் கட்டுமானங்களை ஏற்படுத்த வழிவகை செய்யும்.