

வளைவுக் கூரைகள் கொண்ட கட்டிடங்கள் பாரம்படியம் மிக்கவை. முகலாயர் கட்டிடக் கலையில் பல கட்டிடங்களில் இந்த வகைக் கட்டிடக் கலையைப் பார்க்க முடியும். தலைநகர் டெல்லியில் மட்டுமல்ல சென்னை நகரில் பல பழமையான கட்டிடங்களில் இந்த அம்சத்தைப் பார்க்க முடியும்.
சரி, இந்த வளைவுக் கூரைக் கட்டிடக் கலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கட்டிடங்களின் உச்சியில் கோபுரக் கலசங்களைப் போல் இதுபோல் கலசங்களை அமைப்பதன் காரணம் அழகுக்கானது மட்டுமல்ல. அதற்குப் பின்னால் சில தொழில்நுட்ப அம்சங்களும் இருக்கின்றன. நீண்ட நெடுங்காலமாகவே கலசங்கள் நமது கட்டிடக் கலையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன; இன்றும்கூட அழகான கவிகைமாடத்துக்கு பெரும் வரவேற்பு இருக்கவே செய்கிறது.
இன்றைக்கு நாம் மாடி மீது மாடியாகக் கட்டிடங்களை அடுக்கிக்கொண்டே போகிறோம். அதனால் கலசங்களே நமக்குத் தேவைப்படுவதில்லை. வளைவாகக் கூரைகளை (roof) அமைப்பதும் சாத்தியமல்ல. கலசங்களை அமைப்பதால் தேவையற்ற இடத்தை அவை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்று எண்ணுகிறோம். மேலும், கலசங்களை அமைக்கத் தனித் திறமையும் தேவைப்படுகிறது. அத்துடன் வட்ட வடிவமான அமைப்புகள் மீதே கலசங்களை உருவாக்க முடியும். இந்தக் காரணங்களால் நாம் கலசங்கள் பற்றிச் சிந்திப்பதேயில்லை. இவை எல்லாவற்றையும் கடந்து வளைவான கூரையை ஷெல் வடிவக் கட்டிட உச்சிகளில் அமைக்க முடியும்.
உண்மையில் ஷெல் வடிவக் கூரை என்பதும் கலசம் என்பதும் ஒன்றல்ல. ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது. ஆனால் இரண்டுக்கும் சில ஒற்றுமையான பண்புகள் உள்ளன. உதாரணத்துக்கு இரண்டுமே வளைவான உச்சி அமையப் பெற்றதால் கட்டிடத்தின் சுமையை எளிதில் கடத்த உதவுகின்றன. பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் கலசங்களும் ஷெல் வடிவக் கூரைகளும் ஒன்று போல் தோன்றலாம் ஏனெனில், இரண்டுமே உட்புறம் வளைந்துள்ளன. ஷெல் வடிவக் கூரைகளில் கான்கிரீட் பூச்சு வளைவாகச் சுவர்களோடு இணைக்கப்பட்டிருக்கும். இவை குறைந்த அளவுக்கான தூரத்துக்குள்ளேயே முடித்துவைக்கப்படும். கலசங்களோ அரைக்கோள வடிவத்தில் இருக்காது மேலும் இவை அதிக உயரத்துக்கு எழுப்பப்பட்டிருக்காது. மேலும் கலசங்கள் அமைக்கும்போது அதன் மீது பயன்படத்தக்க தளம் அமைக்க இயலாது.
பாண்டிச்சேரி ஆரோவில் பார்த்திருக்கிறீர்களா? ஷெல் வடிவ கூரையமைப்புக்கு அது மிகச் சரியான உதாரணம். இவற்றை அமைக்க அதிகச் செலவு பிடிப்பதில்லை, விரைவில் கட்டுமானத்தை முடித்துவிட முடியும், மாறுபட்ட அழகோடும் காட்சியளிக்கும். ஷெல் வடிவக் கூரைகளை கான்கிரீட் பயன்படுத்தியும் அமைக்க முடிவது அதன் சிறப்பு. ஷெல் வடிவக் கூரைகளை அமைக்கும்போது கட்டிடத்தின் சுமை சுவர்களை நேரடியாகத் தாக்காது. கூரையானது சுவர்களின் மீது செங்குத்தாக பூசப்பட்டால் கூரையின் எடை முழுவதும் அப்படியே சுவருக்குக் கடத்தப்படும். ஆனால், வளைவான கூரை அமைக்கும்போது கட்டிடத்தின் எடை நேரடியாகச் சுவரைப் பாதிப்பதில்லை. இதனால் சுவர் வெடிப்பு போன்றவை அதிகமாக சுவரைப் பாதிக்காது.
வளைவான கூரை அமைப்பதால் பார்ப்பதற்குக் கூரை அழகாக இருக்கும். கான்கிரீட் அதிகமாகச் செலவாவதில்லை, இரும்பு உபயோகமும் பாதியாகக் குறைந்துவிடும். சதுர வடிவம் செவ்வக வடிவம் கொண்ட கட்டிடங்களின் கூரையை வளைவாக அமைக்கலாம். ஆனால், இத்தகைய கட்டிடங்களை முறையான கட்டிடக் கலை நிபுணரின் ஆலோசனையின் பேரிலும் திறன் மிக்க வேலையாள்கள் உதவியுடனும் மாத்திரமே செய்ய இயலும்.