

1917-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி, பிரிட்டனில் பிறந்தவர் லாரி பேக்கர். மிகவும் எளிய குடும்பம். சிறு வயது முதலே ஓவியங்களில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார் பேக்கர். அது அவரை கட்டிடக் கலைப் பள்ளிக்குக் கொண்டு சென்றது. பிர்மிங்காம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன் உருவாக்கிய மிகச் சிறந்த மாணவர்களில் இவரும் ஒருவர்.
‘எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் உள்ளார்’ எனும் தத்துவத்தைப் பின்பற்றுகின்ற ‘குவாக்கர்’ எனும் கிறிஸ்துவப் பிரிவில் பெரும் நம்பிக்கை கொண்டு வளர்ந்தவர் பேக்கர். எனவே, இயற்கையாகக் கிடைக்கிற எல்லாப் பொருட்களும் கடவுளுக்கு உரித்தானவை. அதனால் அவற்றை மிகச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். பிற்காலங்களில், அவர் கட்டிய கட்டிடங்களில் பெரும்பாலும் இயற்கையாகக் கிடைத்த பொருட்களையே பயன்படுத்தியிருந்தார். அதற்கு அவர் நம்பிக்கை வைத்திருந்த ‘குவாக்கர்’ தத்துவமே காரணமாக அமைந்தது.
போர் தந்த மருத்துவன்
அன்றைய காலத்தில் பிரிட்டனில், இளைஞர்கள் பலர் ராணுவத்தில் குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்றுவது கட்டாயமாக இருந்தது. ஆனால், அன்பையும் அமைதியையும் விரும்பிய பேக்கர், போர்கள் மீது வெறுப்பைக் கொண்டிருந்தார். எனவே, ராணுவத்தில் சேராமல் தவிர்த்து வந்தார்.
எனினும், இரண்டாம் உலகப் போர் அவரை ராணுவத்தில் சேர நிர்பந்தித்தது. போர் வீரனாக அல்லாமல், யுத்த களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யும் ஆம்புலன்ஸ் பிரிவில் பணியாற்றினார். அந்தத் தருணங்கள் அவரைக் காந்தியத்தை நோக்கித் தள்ளின. காந்தியின் ‘கிராமப் பொருளாதாரம்’, ‘உள்ளூர்க் கலைகள் மூலம் பொருளாதாரத் தன்னிறைவு’ எனும் கொள்கைகள் அவரை வசீகரித்தன. பிற்காலங்களில் பேக்கர் எழுப்பிய கட்டிடங்களில் இந்த அம்சங்கள் பிரதிபலித்தன.
பல்லாவரத்தில் கைகூடிய காதல்
இரண்டாம் உலகப் போரில், இங்கிலாந்து சீனாவுக்கு எதிராகப் போர் புரிந்தது. அன்றைய காலத்தில், சீனாவிலிருந்து இங்கிலாந்து செல்ல நேரடி கப்பல் போக்குவரத்து வசதிகள் இல்லை. எனவே, சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து, மும்பையிலிருந்து இங்கிலாந்து செல்ல வேண்டியிருந்தது. அப்படி இந்தியாவுக்கு வந்த பேக்கர், காந்தியைச் சந்திக்க நேர்ந்தது.
இங்கிலாந்து சென்றவுடன், உலக அளவிலான தன்னார்வ அமைப்பு ஒன்று, இந்தியாவில் தொழுநோயாளிகளிடையே பணியாற்றி வருவதையும், அது கட்டிடக் கலைஞர் ஒருவரைப் பணியமர்த்தத் திட்டமிடுவதையும் அறிந்தார். போர்க் காலங்களில் தொழுநோயாளிகளிடையே பணியாற்றிய அனுபவம் இருந்ததால், பேக்கர் அந்த அமைப்பில் சேர்ந்து இந்தியாவுக்கு வந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சண்டி எனும் நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த நண்பருக்கு, எலிசபெத் எனும் தங்கை இருந்தார். அவரும் ஒரு மருத்துவர். ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தபோது, பேக்கரைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. குடும்பத்தினர் அனுமதியுடன் அந்தக் காதலர்கள் மண வாழ்க்கையில் நுழைந்தனர். சென்னை, பல்லாவரத்தில் உள்ள புனித ஸ்டீபன் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
பழங்குடிகள் தந்த அறிமுகம்
திருமணத்துக்குப் பிறகு அவர்கள், மீண்டும் உத்தரப்பிரதேசத்துக்குத் திரும்பினர். அங்கு இமயமலைப் பகுதியில் உள்ள பித்தோராகர் எனும் இடத்தில் 16 ஆண்டுகள் வாழ்ந்தனர். அங்கு வாழ்ந்த மக்கள் பலர் வறுமையில் வாடிய பழங்குடிகள். அவர்களின் வீடுகளும் வசதியானவையாக இருக்கவில்லை. தங்களைச் சுற்றி, இயற்கையாகக் கிடைத்த மரம், கற்கள், மண் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் தங்களின் வீடுகளைக் கட்டினர். இந்த வீடுகளைப் பார்த்து அதிசயித்தார் பேக்கர். பழங்குடிகளிடமிருந்து அந்தப் பொருட்களைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டார். அங்கிருந்த வீடுகளை, உள்ளூர் கட்டிடக் கலைக்கான உதாரணங்களாக அவர் போற்றினார்.
அன்புக்குரிய ‘டாடி’
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேக்கர் தம்பதியினர், கேரளத்துக்கு இடம்பெயர்ந்தனர். திருவனந்தபுரத்தில், அங்கு இயற்கையாகக் கிடைத்த பொருட்களைக் கொண்டு தனக்கான வீட்டைக் கட்டிக்கொண்டார் பேக்கர். அந்த வீட்டுக்கு ‘ஹாம்லெட்’ என்று பெயர். “பிரிட்டனில் தேவாலயம் இல்லாத சிறிய அளவில் வீடுகள் கொண்ட கிராமத்தை, ‘ஹாம்லெட்’ என்று அழைப்பது வழக்கம். எங்களது வீடும் ஒரு சின்ன கிராமம் போன்றதுதான். அதனால்தான் இந்தப் பெயர்” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிடுவது வழக்கம்.
1963-ம் ஆண்டில் கேரளத்துக்கு வந்த அவர், தன் மீதி வாழ்க்கையை அங்குதான் கழித்தார். சுமார் 40 ஆண்டுகளுக்குக் கேரளத்தில் இருந்து கொண்டு அளப்பரிய பணிகளைச் செய்தார். தன்னுடைய பாணியில், அதாவது, குறைந்த செலவில், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, மக்களின் விருப்பத்துக்கேற்ப வீடுகள், நிறுவனங்கள், மீனவர்களுக்கான தொகுப்பு வீடுகள், தேவாலயங்கள் எனப் பலவகையான கட்டிடங்களை எழுப்பினார்.
தனது கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளில், அந்தக் கட்டிடங்களின் உரிமையாளர்களையும் ஈடுபடுத்தினார். இதனால் தங்களது இல்லத்தின், நிறுவனத்தின் கட்டுமானத்தில் தங்களது பங்களிப்பும் இருக்கிறது என்ற உணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தி, ஒருவிதமான ஜனநாயகத்தன்மையை பேக்கர் உருவாக்கினார்.
தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களுக்கு, ஒரு தந்தைபோல இருந்து வழிகாட்டுதல்களையும் அன்பையும் வழங்கினார் பேக்கர். ஊழியர்களுடன் ஊழியராக அவரும் பணியாற்றினார். வறுமை காரணமாக, அவரிடத்தில் சுமார் 70 வயது முதியவர்கூடப் பணியாற்றினார்.
“நாட்டின் மிக முக்கியமான தொழில்துறை கட்டுமானத் தொழில். மிகப்பெரிய விஞ்ஞானிகள் முதல் சாதாரணக் கூலியாட்கள் வரை அனைவரையும் உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை உடைய தொழில் இது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு” என்று கருதிய பேக்கர், அந்த முதியவரைப் பணியில் அமர்த்திக்கொண்டார்.
அவரால் செங்கல் எடுத்துத் தருவது, தண்ணீர் கொண்டு வருவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைத்தான் செய்ய முடியும். ‘மிகச் சாதாரண விஷயங்களைத்தானே செய்கிறார்’ என்று அவரை எந்த ஒரு தருணத்திலும் பேக்கர், மரியாதைக் குறைவாக நடத்தவில்லை. இதர ஊழியர்களுக்கு அவர் தரும் அதே ஊதியத்தையும் மதிப்பையும் அவருக்கும் வழங்கினார். இந்தக் காரணங்களால், அவரது ஊழியர்களை அவரை ‘டாடி’ என்று அன்புடன் அழைத்தனர்.
இந்தியக் கட்டிடங்களின் வறுமை
மிகவும் எளிமையான தோற்றம் தரக்கூடிய கட்டிடங்களைக் கட்டியதால், பேக்கர், ‘புவர் மேன்ஸ் ஆர்க்கிடெக்ட்’ (ஏழைகளின் கட்டிடக் கலைஞன்) என்று அழைக்கப்பட்டார். ஆனால் உண்மையில், அவர் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரே பாணியில்தான் கட்டிடங்களைக் கட்டினார். அதுதான் ‘பேக்கர் பாணி’.
இந்தியாவின் சண்டிகர் நகரத்தை வடிவமைத்ததில் லூ கார்பூஸியெ எனும் பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞருக்குப் பெரும் பங்குண்டு. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட வித்தியாசங்கள் அனைத்தையும் கடந்து, ஒரேமாதிரியான கட்டிடக் கலைத் தொழில்நுட்பத்தை அங்கு கார்பூஸியெ பயன்படுத்தியிருந்தார். இதன் விளைவு, 50-கள், 60-களில், அதேமாதிரியான கட்டிடக் கலைத் தொழில்நுட்பம், நாடெங்கும் பயன்படுத்தப்பட்டது.
பல்வேறு விதமான தேவைகளை உடைய மனிதர்களுக்கு, இப்படி ஒரே மாதிரியான கட்டிடங்களைக் கட்டுவது பேக்கருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. வெளிநாட்டு உத்திகளையும் பொருட்களையும் பயன்படுத்துவது, இந்தியாவில் உள்ள கட்டிடக் கலையின் வறுமையையே எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கருதினார்.
இதன் காரணமாக, ஒரு இடத்தின் நில அமைப்பு, அதன் தன்மை, அந்தப் பகுதியின் பருவநிலை ஆகியவற்றுக்கு ஏற்பவும், அங்கிருக்கும் மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவும் கட்டிடங்களைக் கட்டினார். சிமெண்ட் கொண்டு பூசிய வெளிப் பூச்சு, ரசாயனக் கலவைகள் கொண்ட பெயிண்ட், வித விதமான கண்ணாடி ஜன்னல்கள் போன்றவற்றைத் தவிர்த்தார். ஜன்னலே தேவைப்படாதபடிக்கு, ஏ.சி.யே தேவைப்படாதபடிக்கு, இடைவெளிகள் விட்டு எழுப்பிய ‘ஜாளி’ வகைச் சுவர்கள், ‘ஓவர் ஹேங்கிங்’ கூரைகள் இன இவர் அறிமுகப்படுத்திய கட்டிடக் கலைத் தொழில்நுட்பங்கள் நிறைய. இவைதான் பிற்காலங்களில் ‘பேக்கர் பாணி’யாக உருமாறின.
முன்னோர்கள் பின்பற்றிய மரபார்ந்த கட்டிடக் கலை நுட்பங்களை பேக்கரும் பின்பற்றினார். “முன்னோர்கள் தந்து சென்ற நுட்பங்களை மேலும் மேம்படுத்துவதாக நம்முடைய பங்களிப்புகள் இருக்க வேண்டும். மாறாக, மரபுகளுக்கு முரணாகவோ அல்லது மரபுகளை மீறுவதாகவோ இருக்கக் கூடாது” என்பதில் நம்பிக்கை கொண்டவராக பேக்கர் இருந்தார். கான்கிரீட் கட்டிடங்களைத்தான் பலர் நவீனக் கட்டிடங்கள் என்கிறார்கள். ஆனால் அந்த நவீனத்தால் நாம் புத்தியை இழந்துவிட்டோம் என்றார் பேக்கர்.
‘கான்கிரீட் பயன்படுத்தாத கட்டிடங்களில் நம்மால் வாழ முடியாதா?’ என்ற கேள்வியை எழுப்பிய அவர், தன் கட்டுரை ஒன்றில், ‘கான்கிரீட்டுக்கு முந்தைய ஒரு வருடத்துக்கு நம்மால் செல்ல முடியாதா?’ என்ற வரியை எழுதும்போது ‘கான்கிரீட்டுக்கு முந்தைய’ எனும் வார்த்தைகளை ‘...back to the year 1 BC (Before Concrete)’ என்று எழுதுகிறார். ‘கிறிஸ்துவுக்கு முந்தைய’ என்பதை ஆங்கிலத்தில் ‘BC (Before Christ)’ என்று எழுதுவது வழக்கம். இன்று பயன்படுத்தப்படும் கிரிகோரியன் காலண்டர்படி, கிமு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து காலம் கணக்கிடப்படுகிறது. அதுதான் நவீன முறை. கான்கிரீட் பயன்படுத்துவதைத்தான் மக்கள் நவீனம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையாகச் சுட்டிக்காட்ட, அவர் இப்படி எழுதுகிறார்.
இந்தக் காரணங்களால், அவர் எழுப்பிய கட்டிடங்கள் கவித்துவத்துடன் மிளிர்ந்தன. இதனால் அவரை “நிலத்தில் கவிதைகளைப் புனைந்தவர்” என்று கட்டிடக் கலைஞரும் ‘லாரி பேக்கர்: லைஃப், ஒர்க்ஸ் அண்ட் ரைட்டிங்ஸ்’ எனும் தலைப்பில் லாரி பேக்கரின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதிய கவுதம் பாட்டியா அழைக்கிறார்.
தொடரும்…