Published : 18 Oct 2014 01:08 PM
Last Updated : 18 Oct 2014 01:08 PM

தவணைத் திட்டத்தில் கவனிக்க வேண்டியவை

இன்றைக்குள்ள விலையில் முழுப் பணமும் கொடுத்து வீட்டு மனை வாங்குவது நடுத்தர மக்களைப் பொறுத்தவரை எளிய காரியமல்ல. மனை வாங்குவதும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் தேக்க நிலையால் மந்தமாக உள்ளது என்றாலும் மனையின் விலை குறைந்தபாடில்லை. இன்னமும் லட்சங்களிலும் கோடிகளிலும்தான் உள்ளது.

சொத்து வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் வங்கிக் கடனையே நம்பியிருக்கிறார்கள். பின்னால் வீடு கட்டுவதற்கான முதலீடாகவும் மனை இருக்கிறது. முதலில் மனைகளை வாங்கிப் போட்டு பின்னால் ஓரளவு விலை ஏறியவுடன் மனையின் ஒரு பாகத்தை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வீடு கட்டிக்கொள்ளும் எண்ணத்தில் சிலர் வீட்டு மனைகளை வாங்குகிறார்கள்.

இல்லையெனில் மாதாந்திரத் தவணைத் திட்டத்தில் இணைந்து ஒரு வீட்டு மனையைச் சொந்தமாக்கிகொள்ள நினைக்கிறார்கள். தவணை முறையில் நிலம் வாங்கும்போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்காலத் தேவையை மனத்தில் கொண்டு மனை வாங்கும்போது நீங்கள் நிலம் வாங்கும் இடத்தின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஓரளவு விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும்.

அதுபோல நீங்கள் வாங்கப் போகும் மனைக்கான ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வில்லங்கச் சான்று, பட்டா, ரசீதுகள் என மனை தொடர்பான அனைத்து ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மூலப் பத்திரத்தைச் சரிபார்த்துக்கொள்வதும் மிக அவசியம்.

வீட்டுமனைப் பிரிவில் மனை வாங்கும்போது மனைகளை விற்கும் நிறுவனத்தால் மூலப் பத்திரத்தைக் கொடுக்க முடியாது. பல மனைகளாகப் பிரித்து விற்பதால் மொத்த மனைகளுக்கு ஒரே மூலப் பத்திரம்தான் இருக்கும். ஆகையால் மூலப் பத்திரத்தை உங்களுக்குத் தர மாட்டார்கள். அப்படித் தர மறுக்கும்பட்சத்தில் மூலப் பத்திரத்தின் நகலை வாங்கிச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு காரியம் இவ்வாறு மனைகள் வாங்கும்போது முறையான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த இடத்திற்கான வாரிசுதாரர்கள் அனைவரிடமும் சம்மதம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தவணை முறையில் மனை வாங்கும்போது ஒப்பந்தத்தை 20 ரூபாய் முத்திரைத்தாளில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் நீங்கள் வாங்கப் போகும் வீட்டுமனையின் விலை, மாத, மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை, தவணைக் காலம்

போன்ற விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மனை எண்ணையும், மனையின் பரப்பளவையும் சேர்த்துக் குறிப்பிட வேண்டும். நீங்கள் வாங்கியிருக்கும் மனையின் விலை திடீரெனக் கூடும்பட்சத்தில் மீதியிருக்கும் தவணைத் தொகையை மனையை விற்பனைசெய்பவர் அதிகமாக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் தவணைத் தொகை குறித்து ஒப்பந்தப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

வாங்கியிருக்கும் நிலம், முன்பு விவசாயப் பயன்பாட்டிற்கான நிலமாக இருந்திருந்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். அதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுமனையை விற்பவர் சொத்தின் நேரடி உரிமையாளராக இல்லாமல் விற்கும் அதிகாரமான ‘பவர் ஆப் அட்டர்னி’ பெற்றிருந்தால் அதைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம். இடையில் பவர் ஆஃப் அட்டார்னி ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து தெளிவு பெற வேண்டும்.

நீங்கள் செலுக்கும் மாதத் தவணைத் தொகைக்கு உரிய ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். தவணைத் தொகையைச் செலுத்தி வரும் நிலையில் இடையில் பணம் கிடைக்கும் பட்சத்தில் முழுப் பணத்தையும் செலுத்துவது நமக்கு லாபமானதல்ல. தேவையின் பொருட்டு பணம் செலுத்துவதாக இருந்தால் பணமாகக் கொடுக்க வேண்டாம். காசோலை, வரைவோலை போன்று வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x