உலகக் கட்டுமானத் திருவிழா

உலகக் கட்டுமானத் திருவிழா
Updated on
3 min read

உலக அளவிலான சர்வதேச இலக்கியத் திருவிழாக்கள், திரைப்பட விழாக்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல கட்டுமானத் துறைக்கும் உலக அளவிலான சர்வதேசத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பல பிரிவுகளின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்கின்றன.


சிறந்த வீடு - பல்மோ டி மல்லோர்கா, ஸ்பெயின்

கட்டுமானத் துறை தொடர்பாகக் கருத்தரங்களும் இந்தத் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும். உலக முழுவதிலுமுள்ள பல முக்கியமான கட்டுமான நிறுவனங்கள் தங்களது எதிர்காலத் திட்டங்களையும் இந்தத் திருவிழாவின் வழியாக காட்சிப்படுத்துகின்றன. முதலாவது உலகக் கட்டுமானத் திருவிழா 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி ஸ்பெயின் நகரமான பார்சிலோனாவில் நடந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த பால் ஃபின்ச் முதல் திருவிழாவின் இயக்குநராகப் பணியாற்றினார்.


சிறந்த உள் அலங்கார வடிவமைப்பு - ஹெய்கே ஸ்டோர், சீனா

அந்தத் திருவிழாவில் 63 நாடுகளைச் சேர்ந்த 722 கட்டுமானத் திட்டங்கள் 11 பிரிவுகளின் கீழான போட்டிகளில் பங்குபெற்றன. 70 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தக் கட்டுமானத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.


சிறந்த ரிசார்ட் - ஃபுஷெங்யூ ஹாட் ஸ்பிரிங், சீனா

2009, 2010, 2011 ஆண்டு கட்டுமானத் திருவிழாக்கள் பார்சிலோனாவில் தொடர்ந்து நடத்தப்பட்டன. 2009-லிருந்து நவம்பர் மாதத்தில் விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு போட்டிப் பிரிவுகள் 11-லிருந்து 15ஆக உயர்த்தப்பட்டன. கலந்துகொண்ட நாடுகளும் அதிகமாயின.


சிறந்த பள்ளி - தென் மெல்போர்ன் பள்ளி, ஆஸ்திரேலியா

2010 திருவிழாவில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தன. போட்டிப் பிரிவுகளும் உயர்த்தப்பட்டன. 2011-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த இறுதித் திருவிழாவில் 700 கட்டுமானத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதுதான் அதுவரை நடந்ததில் மிகப் பிரம்மாண்டமான திருவிழாவாக இருந்தது.


சிறந்த புற அமைப்பு - கொபுபகோ ரிசர்வ், நியூசிலாந்து

2012-ம் ஆண்டிலிருந்து திருவிழா சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தது. 2013,2014, 2015, 2016 ஆகிய தொடர்ந்த நான்கு ஆண்டுகள் உலகக் கட்டுமானத் திருவிழா சிங்கப்பூரிலேயே நடந்தது. இந்தாண்டு நவம்பரில் இந்தத் திருவிழா ஜெர்மனியில் பெர்லினில் நடக்கவுள்ளது.


ஆண்டின் சிறந்த கட்டிடம் - சுஜச்சின் தேசிய அருங்காட்சியகம், போலந்து

இந்த ஆண்டு உலகக் கட்டுமானத் திருவிழா நுழைவுச் சீட்டுகள் விற்பனை இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 80 பிரிவுகளின் கீழ் கட்டுமானத் திட்டங்களுக்கான போட்டிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. உலகக் கட்டுமானத் திருவிழா இதுவரை நடந்ததில் மிகப் பிரம்மாண்டமான திருவிழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிறந்த எளிமைக் கட்டுமானம் - ஹாங்காங் கட்டுமானப் பள்ளி வளாகம், ஹாங்காங்

2016-ம் ஆண்டு உலகக் கட்டுமானத் திருவிழாவில் வெற்றிபெற்ற கட்டுமானத் திட்டங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சிறந்த பள்ளி, சிறந்த எதிர்கால வீடு, சிறந்த புறவெளி அமைப்பு, ஆண்டின் சிறந்த கட்டிடம், சிறந்த உள் கட்டமைப்பு, சிறந்த உள்லங்காரம், சிறந்த எதிர்காலக் கட்டிடம் போன்ற பல பிரிவுகளின் கீழ் கட்டுமானத் திட்டங்கள் விருதுபெற்றன. அந்தக் கட்டிடங்களில் சிலவற்றின் ஒளிப் படங்களை இங்கே காணலாம்,


சிறந்த எதிர்காலக் கட்டுமானம் - இஸ்தான்புல் புதிய விமான நிலையம், துருக்கி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in