

கிராண்ட் கன்யான். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிரம்மாண்டமான பள்ளத்தாக்கு. இந்த மலைப் பள்ளத்தாக்கைக் காணத் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. இங்குச் சுற்றுலாவை வளப்படுத்தப் புதுமையான திட்டம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்டது. இதன்படி 1,450 மீட்டர் உயரமுள்ள மலை மீது புது வடிவக் கண்ணாடியால் ஆன பால்கனி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
எஸ்.என்.என். என்கிற ஆர்க்கிடெக்ட் உதவியுடன் இந்தப் பால்கனி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்தப் பால்கனியில் என்னச் சிறப்பு? ‘மவுன்ட்டெய்ன் ஸ்கை வாக்’ என்ற பெயரிலான இந்தப் பால்கனியின் முழு நீளம் 150 மீட்டர். ஆனால், இதில் பாதியளவு மலையிலிருந்து வெளியே நீட்டியிருக்கும் என்பதுதான் சிறப்பு. மலையிலிருந்து நீட்டியிருக்கும் பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் இந்தக் கண்ணாடி மீது நின்றவாறு 120 பேர் பள்ளத்தாக்கை ரசிக்க முடியும்.
கொண்டை ஊசி வடிவத்தில் கண்ணாடியால் இந்தப் பால்கனி அமைந்திருந்தாலும், இரு புறமும் இரும்புத் தகடு களால் ஆன தடுப்புகளும் உண்டு. பெரிய அளவிலான போல்ட்களைக் கொண்டு பால்கனி நன்றாக முடுக்கப்பட்டிருப்பதுடன், அதன் மீது கட்டுமானங்களும் எழுப்பப்பட்டிருக்கிறது. 100 மைல் வேகத்தில் காற்று முகத்தில் அறையும் அனுபவத்தைப் பெறுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள்.
உலகில் உள்ள அதிசயமான கட்டுமானங்களில் இதுவும் ஒன்று.